Last Updated : 11 Mar, 2015 04:05 PM

 

Published : 11 Mar 2015 04:05 PM
Last Updated : 11 Mar 2015 04:05 PM

பாலியல் குற்றங்களைவிட மாட்டிறைச்சி தடை மீறலுக்கு அபராதம் அதிகம்

ஏழைகளின் புரதச் சத்துமிக்க உணவாக திகழும் மாட்டிறைச்சிக்கு மகாராஷ்டிரத்தில் தடை விதிக்கப்பட்டதுக்கு எதிர்ப்பு தெரிவித்த திரிணமூல் எம்.பி., இந்த தடையை மீறுபவர்களுக்கு விதிக்கப்படும் அபராதத்தை விட பாலியல் பலாத்கார வழக்குகளுக்கு விதிக்கப்படும் தொகை குறைவாக உள்ளதாக தெரிவித்தார்.

மகாராஷ்டிர மாநிலத்தில் மாட்டிறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மாட்டிறைச்சி வைத்திருப்போர் அல்லது விற்பனை செய்வோருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கும் சட்டம் அமலுக்கு வந்துள்ளது.

மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது பேசிய திரிணமூல் எம்.பி. தெரீக் ஓப்ரியன் மகாராஷ்டிரத்தில் மாட்டிறைச்சி விற்பனைக்கு தடை விதித்திருப்பது குறித்து பேசும்போது, "மாட்டிறைச்சி விவகாரத்தை நாம் மத சார்ந்த கோணத்தில் பார்க்கக் கூடாது. இந்த தடையால் சிறுபான்மையினர், தலீத் மக்கள் என தாழ்த்தப்பட்டச் சமூகத்தைச் சார்ந்த பலர் பாதிக்கப்படுவார்கள்.

வடகிழக்கு மாநில மக்கள் அனைவரும் மாட்டிறைச்சியை தங்களது முக்கிய உணவாக கொண்டிருக்கின்றனர். ஏழைகளின் புரதச் சத்துமிக்க உணவாக திகழும் மாட்டிறைச்சிக்கு விதிக்கப்பட்டுள்ள தடை ஏற்கக் கூடியதாக இல்லை.

பலாத்கார குற்றங்களில் ஈடுப்பட்ட குற்றவாளிகளுக்கு விதிக்கப்படும் தண்டனையை விட இந்த தடை உத்தரவு பயங்கரமானதாக உள்ளது. அதில், வழங்கப்படும் அபராதத் தொகையைக் காட்டிலும் மாட்டிறைச்சி தடைக்கு அபராதம் அதிகமாக உள்ளது.

இந்த தடையால் மற்ற இறைச்சிகளின் விலை அதிகரிக்கும் அபாயம் உள்ளது. கோழிக்கறி, மீன் உள்ளிட்டவைகளின் விலை ஏற்கெனவே அந்த மாநிலத்தில் உயர்ந்துவிட்ட நிலையில் இந்தத் தடை பொருளாதார இழப்பை ஏற்படுத்தும். மகாராஷ்டிராவில் ஏற்கெனவே 55 சதவீத அளவுக்கு தீவன தட்டுப்பாடு நிலவுகிறது. இந்தச் சட்டத்தால் வயது முதிர்ந்த மாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து விடும். விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

துபாய் உள்ளிட்ட அரபு நாடுகளில் வேறொரு விலங்குக்கு தடை உள்ளது. ஆனால் குறிப்பிட்ட கடைகளில் விற்பனை செய்ய அவர்கள் அனுமதித்துள்ளனர்" என்று தெரிவித்தார்.

ஓப்ரியன்னின் கருத்துக்கு பாஜக எம்.பிக்.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். "உறுப்பினர்களுக்கு எந்த விவகாரத்தையும் எழுப்பும் உரிமை உள்ளது. ஆனால் அதனை முறையாக எழுப்ப வேண்டும். இந்த விஷயத்தில் விவாதத்துக்கு அனுமதிக்கக் கூடாது" என்று மாநிலங்களவை அரசியல் வவகாரங்களுக்கான அமைச்சர் முக்தர் அபாஸ் நக்வி தெரிவித்தார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x