Published : 10 Mar 2015 10:29 AM
Last Updated : 10 Mar 2015 10:29 AM
பெங்களூரு தேசிய விலங் கியல் பூங்காவில் உணவு வழங்குவதற்காக சென்ற ஊழியரை திடீரென சிங்கம் தாக்கியதால் படுகாயம் அடைந்தார். உடனடியாக மீட்கப்பட்ட அவர் அருகில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.
பெங்களூருவை அடுத்துள்ள பன்னார்கட்டா வனப்பகுதியில் தேசிய விலங்கியல் பூங்கா அமைந்துள்ளது.
இங்கு யானை, கரடி, புலி, சிங்கம், மான் உள்ளிட்ட விலங்குகள் இருப்பதால் அவற்றை பராமரிக்க 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
இங்குள்ள சிங்கம் மற்றும் புலிகளுக்கு கிருஷ்ணா (38) என்பவர் கடந்த 20 ஆண்டுகளாக உணவு வழங்கி பராமரித்து வருகிறார்.
கூண்டு கதவு திறப்பு
நேற்று காலை 9.30 மணியளவில் நகுலா என்ற 4 வயது சிங்கத்துக்கு உணவு வழங்குவதற்காக கூண்டுக்கு அருகே சென்றுள்ளார். அப்போது சிங்கம் ஆக்ரோஷமாக பாய்ந்ததால் கூண்டின் கதவு துரதிஷ்டவசமாக திறந்தது.
சிங்கம் வெளியே வந்ததை கவனித்த கிருஷ்ணா பதறி ஓடியுள்ளார். அவர் மீது சீறிப் பாய்ந்து சிங்கம் தாக்கியதில் தலை, முதுகு, இடுப்பு, கால் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது.
தண்ணீர் பீய்ச்சி அடிப்பு
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மற்ற ஊழியர்கள் உடனடியாக பைப் மூலம் தண்ணீரை சிங்கத்தின் மீது பீய்ச்சி அடித்துள்ளனர்.
இதனால் மூச்சுத் திணறிய சிங்கம் கிருஷ்ணாவை விட்டுவிட்டு வனப்பகுதிக்குள் புகுந்தது.
படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட கிருஷ்ணா, உடனடி யாக ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவத்தின் எதிரொலியாக வனப்பகுதிக்குள் செல்லும் சவாரி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. இதனால் வெளியூர் சுற்றுலா பயணிகள் அதிருப்தி அடைந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT