Published : 28 Mar 2015 08:28 AM
Last Updated : 28 Mar 2015 08:28 AM
வங்கிகளுக்கு மார்ச் 28 முதல் ஏப்ரல் 5-ம் தேதி வரை தொடர் விடுமுறை வருவதால் அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் சிரமம் ஏற்படும் என தெரிகிறது. இதற்கு மாற்று ஏற்பாடு காணுமாறு ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசை தொழில் கூட்டமைப்பான அசோசேம் வலியுறுத்தியுள்ளது. தொடர் விடுமுறையால் வாடிக்கையாளர்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாவார்கள் என்றும் அது சுட்டிக் காட்டியுள்ளது.
இத்தகைய தொடர் விடுமுறை பங்குச் சந்தையில் பண பரிவர்த்தனையை பாதிக்கும் என்றும், ஏற்றுமதி, இறக்குமதி, சம்பள பட்டுவாடா உள்ளிட்டவை பாதிப்புக்குள்ளாகும் என்றும் அசோசேம் குறிப்பிட்டுள்ளது. ராம நவமியை முன்னிட்டு மார்ச் 28-ம் தேதி வங்கிகளுக்கு விடுமுறையாகும். இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 29) வங்கிகளுக்கு வார விடுமுறை. அடுத்த மார்ச் 30-ம் தேதி வங்கிகள் செயல்படும். மார்ச் 31 மற்றும் ஏப்ரல் 1-ம் தேதிகளில் ஆண்டு கணக்கு முடிப்புக்காக வங்கிகள் செயல்படாது.
ஏப்ரல் 2-ம் தேதி மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு அரசு விடுமுறை. அன்றைய தினமும் வங்கிகளுக்கு விடுமுறை. அடுத்து ஏப்ரல் 3-ம் தேதி புனித வெள்ளியன்று வங்கிகளுக்கு விடுமுறை. அடுத்து வரும் சனிக்கிழமை சில மணி நேரங்களே வங்கிகள் செயல்படும். அடுத்து ஞாயிறு விடுமுறையாகும்.
இந்த விஷயத்தில் ரிசர்வ் வங்கி தலையிட்டு வங்கிகளுக்கு அறிவுறுத்தல் வழங்குமாறு வலியுறுத்தியுள்ளதாக அசோசேம் கூறியுள்ளது. வங்கிகளில் பெரும்பாலானவை பொதுத்துறை வங்கிகள் என்பதால் இதில் நிதித்துறை தலையிட்டு வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் சிரமத்துக்கு தீர்வு காணலாம் என்று கேட்டுக் கொண்டுள்ளது. தொழில்துறையின் பல்வேறு பிரிவுகளும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதால் இதற்குத் தீர்வு காண வேண்டியது அவசியம் என்று அசோசேம் செயலர் டி.எஸ். ரவாத் செய்திக்குறிப்பில் வலியுறுத்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT