Published : 21 Mar 2015 02:42 PM
Last Updated : 21 Mar 2015 02:42 PM
ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.கே.ரவி மரணம் தொடர்பான விசாரணையில் கர்நாடக அரசு யாரையும் பாதுகாக்க முயற்சிக்கவில்லை என அம்மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
கர்நாடக வணிக வரித்துறை கூடுதல் ஆணையர் டி.கே.ரவி (36) கடந்த திங்கள்கிழமை பெங்களூருவில் உள்ள தனது இல்லத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். ரவி மரணம் தொடர்பாக சிஐடி விசாரணை நடைபெற்று வருகிறது. ஆனால், சி.பி.ஐ. விசாரணை கோரி கர்நாடக எதிர்க்கட்சிகள் உட்பட பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். மேலும், மணல் மாஃபியாக்களை பாதுகாப்பதற்காக ரவி வழக்கை கர்நாடகா அரசு திசை திருப்ப முயல்வதாக எதிர்க்கட்சிகள் குறிப்பாக மதச் சார்பற்ற ஜனதா தள கட்சித் தலைவர் குமாரசாமி குற்றம் சாட்டி வருகிறார்.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த சித்தராமையா, "ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.கே.ரவி மரணத்தில் உண்மை வெளிவர வேண்டும் என்பதில் கர்நாடகா அரசு உறுதியாக இருக்கிறது. இவ்வழக்கில் நாங்கள் யாரையும் பாதுகாக்கவில்லை, பாதுகாக்கமாட்டோம். சிபிஐ போல சிஐடியும் ஒரு சுதந்திரமான அமைப்பே. வழக்கு விசாரணை வெளிப்படையாகவே உள்ளது. இந்த வழக்கை கையாள்வதில் சிஐடி போலீஸார் காட்டும் உத்வேகத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும். தற்போது சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. எனவே திங்கள் கிழமை பேரவையில் அரசு தனது நிலையை விளக்கும்" என்றார்.
சோனியா உத்தரவிடவில்லை:
ஐ.ஏ.எஸ். அதிகாரி ரவி வழக்கை சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைக்குமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா கர்நாடக முதல்வர் சித்தரமைய்யாவுக்கு அறிவுறுத்தியதாக தகவல்கள் வெளியாகின.
ஆனால், அதனை திட்டவட்டமாக மறுத்த சித்தராமையா, கட்சித் தலைவருக்கு ரவி வழக்கின் நிலவரத்தை முழுமையாக எடுத்துரைத்தோம். ஆனால், அவர் எவ்விதமான உத்தரவும் பிறப்பிக்கவில்லை. இவ்விவகாரத்தில் முடிவு எடுக்க கர்நாடக அரசுக்கு முழு சுதந்திரம் அளித்துள்ளார்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT