Published : 11 Mar 2015 08:01 AM
Last Updated : 11 Mar 2015 08:01 AM
உத்தரப் பிரதேசத்தில் முன்னாள் எம்எல்ஏ கொலை வழக்கில் சர்ச்சைக்குரிய அரசியல்வாதியும் முன்னாள் எம்பியுமான டி.பி.யாதவ் உள்ளிட்ட 4 பேருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
காசியாபாத்தை அடுத்த தாத்ரி பகுதி முன்னாள் எம்எல்ஏ மகேந்திர சிங் பட்டி, கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பரில் தாத்ரி ரயில்வே கேட் வழியாக சென்றபோது சுட்டுக் கொல்லப்பட்டார்.
இது தொடர்பாக சிபிஐ தொடர்ந்த வழக்கில் டி.பி.யாதவ், பால் சிங், கரண் யாதவ், பிரனீத் பட்டி உள்ளிட்ட 7 பேர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் 302 (கொலை), 307 (கொலை முயற்சி), 120பி (கிரிமினல் சதி) ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றம்சாட்டப் பட்டது. எனினும் விசாரணையின்போது மற்ற 3 பேர் இறந்துவிட்டனர்.
இந்நிலையில், யாதவ் செல்வாக்கு மிக்கவர் என்பதால் உத்தரப் பிரதேசத்தில் விசாரணை நடந்தால் நியாயம் கிடைக்க வாய்ப்பு இல்லை என சந்தேகம் தெரிவிக்கப்படவே உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை 2000-ல் டேராடூனுக்கு (சிபிஐ) மாற்றி உத்தரவிட்டது.
இந்த வழக்கு மீதான விசாரணை முடிந்ததையடுத்து, கடந்த பிப்ரவரி 28-ம் தேதி குற்றம்சாட்டப்பட்ட 4 பேர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமாகி உள்ளதாக சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அமித் குமார் சிரோஹி தீர்ப்பு வழங்கினார்.
இந்நிலையில் தண்டனை குறித்த இருதரப்பு வாதம் முடிந்ததையடுத்து, 4 பேருக்கும் ஆயுள் சிறையும் தலா ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி சிரோஹி நேற்று தீர்ப்பு வழங்கினார். இந்தத் தீர்ப்பை எதிர்த்து உத்தராகண்ட் உயர் நீதிமன்றத்தில் யாதவ் சார்பில் மேல் முறையீடு செய்யப்படும் என்று அவரது வழக்கறிஞர் ரூபேந்திர பண்டாரி தெரிவித்தார்.
மருத்துவ காரணங்களால் பிப்ரவரி 28-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகாததால் சிபிஐ நீதிமன்றம் யாதவுக்கு எதிராக கைது ஆணை பிறப்பித்தது. இதையடுத்து, யாதவ் நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் சரணடைந்தார். பின்னர் அவர் டேராடூன் சிறையில் அடைக்கப்பட்டார்.
கடந்த 2002-ம் ஆண்டு தொழிலதிபர் நிதிஷ் கட்டாரா கொல்லப்பட்ட வழக்கில், 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து, டி.பி.யாதவின் மகன் விகாஸ் யாதவ் டெல்லி சிறையில் தண்டனையை அனுபவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT