Last Updated : 08 Mar, 2015 02:40 PM

 

Published : 08 Mar 2015 02:40 PM
Last Updated : 08 Mar 2015 02:40 PM

மூத்த பத்திரிகையாளர் வினோத் மேத்தா காலமானார்

‘அவுட் லுக்’ இதழ் நிறுவனரும் மூத்த பத்திரிகையாளருமான வினோத் மேத்தா நேற்று காலமானார். அவருக்கு வயது 73.

ஆங்கிலத்தில் வெளிவரும் ‘அவுட் லுக்’ இதழை நிறுவியர் வினோத் மேத்தா. அதன் ஆசிரியராகவும் பணியாற்றினார். உடல்நலக் குறைவு காரணமாக கடந்த சில மாதங்களாக அவர் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவரது உறுப்புகள் செயல் இழந்ததால், டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று காலமானார்.

இதுகுறித்து எய்ம்ஸ் மருத்துவமனை செய்தித் தொடர்பாளர் அமித் குப்தா கூறும்போது, "வினோத் மேத்தா நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். செயற்கை சுவாசத்துடன் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும், பல உறுப்புகள் செயல் இழந்துவிட்டதால் அவர் மரணம் அடைந்தார்" என்று தெரிவித்தார்.

மறைந்த மேத்தா கடந்த 2011-ம் ஆண்டு, ‘லக்னோ பாய்’ என்ற பெயரில் தனது சுயசரிதை நூலை வெளியிட்டார். அதற்கு முன்னதாக கடந்த 2001-ம் ஆண்டு, மீனா குமாரி மற்றும் சஞ்சய் காந்தி ஆகிய தலைப்புகளில் நூல் வெளியிட்டார்.

தெரு நாயை எடுத்து செல்லமாக வளர்த்த இவர், அதற்கு ‘எடிட்டர்’ என்றே பெயரிட்டார். இந்த நாய் ‘அவுட் லுக்’ இதழில் பல முறை இடம்பெற்றுள்ளது. மேலும், சண்டே அப்சர்வர், இண்டியன் போஸ்ட், தி இண்டிபெண்டன்ட், தி பயோனீர் (டெல்லி பதிப்பு) போன்ற பல இதழ்களை வெளியிட்டு சிறப்பாக நடத்தியவர்.

வினோத் மேத்தா ராவல்பிண்டியில் (தற்போது பாகிஸ்தானில் உள்ளது) கடந்த 1942-ம் ஆண்டு பிறந்தவர். இந்திய - பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு, உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவுக்கு மேத்தாவின் குடும்பத்தினர் இடம்பெயர்ந்தனர். தனது எழுத்தால் பலரைக் கவர்ந்தவர். இவரது மறைவுக்குப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

வினோத் மேத்தாவின் மனைவி ஸ்மித்தா பால். இவரும் பத்திரிகையாளர்தான். இவர் பயோனீர், சண்டே டைம்ஸ் ஆப் இந்தியா போன்ற பத்திரிகைகளில் பணியாற்றியவர். இந்தத் தம்பதிக்குக் குழந்தை இல்லை.

இறுதிச்சடங்கு

டெல்லியின் லோதி சாலையில் உள்ள மின் மயானத்தில் மேத்தாவுக்கு நேற்று இறுதிச் சடங்கு நடைபெற்றது. அவரது மூத்த சகோதரர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) அசோக் மேத்தா சிதைக்கு தீ மூட்டினார். இறுதிச் சடங்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா, பாஜக மூத்த தலைவர் அத்வானி, மத்திய அமைச்சர்கள் அருண் ஜேட்லி, ரவிசங்கர் பிரசாத், டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x