Published : 18 Mar 2015 08:44 AM
Last Updated : 18 Mar 2015 08:44 AM
மேற்குவங்க மாநிலத்தில் கன்னியாஸ்திரி பலாத்காரம் செய்யப் பட்ட வழக்கில் இதுவரை ஒரு குற்ற வாளிகூட கைது செய்யப்படவில்லை. அதேநேரம் இந்த வழக்கு தொடர்பாக நேற்று முன்தினம் இரவு மேலும் சிலரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
நாடியா மாவட்டம் கங்னாபூரில் உள்ள ஒரு கான்வென்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு புகுந்த கொள்ளை கும்பல் ஒன்று 71 வயது கன்னியாஸ்திரியை பலாத்காரம் செய்தது.
இந்த சம்பவம் தொடர்பாக ஏற் கெனவே 10 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் சிலரை கைது செய்து விசாரித்து வருவதாக நாடியா மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் (எஸ்பி) அர்னாப் கோஷ் நேற்று தெரிவித்தார். எனினும் அதுகுறித்த விவரங்களை தெரிவிக்க அவர் மறுத்து விட்டார்.
4 நபர்கள் இந்த செயலில் ஈடுபட்டுள்ளது சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் தெரிய வந்துள்ளது. ஆனால் முக்கிய குற்ற வாளிகள் ஒருவர்கூட இதுவரை கைது செய்யப்படவில்லை. தப்பி ஓடிய அவர்களைப் பிடிப்பதற்காக போலீ ஸார் குழு வெளி மாநிலங்களுக்கு விரைந்துள்ளனர். குற்றவாளிகள் பற்றிய நம்பகமான தகவல் தரு வோருக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப் படும் என்று எஸ்பி அறிவித்துள்ளார்.
ரனாகட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவரது உடல்நிலை தேறி வருவதாக மருத்துவ மனை கண்காணிப்பாளர் ஏ.கே.மொண்டல் தெரிவித்துள்ளார். ரோம் நகரிலிருந்து வந்துள்ள கிறிஸ்தவ குழுவினர் அவருக்கு கவுன்சலிங் வழங்கி வருவதாகவும் அவர் தெரிவித் துள்ளார். இதற்கிடையே, குற்றவாளி களை கைது செய்ய வலியுறுத்தி அப்பகுதி வர்த்தகர்கள் போராட்டத் தில் ஈடுபட்டனர்.
மனித உரிமை ஆணையம்
கன்னியாஸ்திரி பலாத்காரம் செய் யப்பட்டது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு குற்றப் புலனாய் வுத் துறையை (சிஐடி) மேற்குவங்க மனித உரிமை ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.
இதுகுறித்து ஆணையத்தின் அதிகாரி ஒருவர் கூறும்போது, “ஊடக தகவல்களின் அடிப்படையில் இந்த சம்பவத்தை ஆணையம் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண் டுள்ளது. இதுதொடர்பாக அறிக்கை தருமாறு சிஐடி கூடுதல் இயக்குநர் ஜெனரல் ராஜீவ் குமார் மற்றும் நாடியா மாவட்ட காவல் துறை எஸ்பி அர்னாப் கோஷ் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அறிக்கை கிடைத்த பிறகு ஆணையம் தனது பரிந்துரையை அளிக்கும்” என்றார்.
பிரதமர் ஆழ்ந்த வருத்தம்
மேற்கு வங்க மாநிலத்தில் கன்னியாஸ்திரி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாகவும், ஹரியாணா மாநிலத்தில் தேவாலயம் ஒன்று சேதப்படுத்தப்பட்டது தொடர்பாகவும் பிரதமர் நரேந்திர மோடி தனது வருத்தங்களைத் தெரிவித்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை, மேற்கு வங்கத்தில் கன்னியாஸ்திரி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். அதேபோல, ஹரியாணாவில் ஹிசார் எனும் இடத்தில் உள்ள தேவாலயம் ஒன்று சேதப்படுத்தப்பட்டதோடு, அதன் உள்ளே இருந்த சிலுவையை இடமாற்றி வைத்துவிட்டு, அங்கு ஹனுமன் சிலை வைக்கப்பட்டது. இந்த இரண்டு சம்பவங்களைத் தொடந்து அந்தந்தப் பகுதிகளில் பதற்றம் நிலவியது. இதைத் தொடர்ந்து நேற்று பிரதமர் அலுவலகம் ட்விட்டர் பக்கத்தில், "ஹரியாணாவிலும், மேற்கு வங்கத்திலும் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து பிரதமர் வருத்தம் தெரிவித்துள்ளார்" என்று பதிவிட்டது. மேலும், இன்னொரு ட்வீட்டில், "இந்தச் சம்பவங்கள் தொடர்பாக விரைவான விசாரணைக்கும், நடவடிக்கைகளுக்கும் உத்தர விட்டுள்ளார்" என்றும் பதிவிட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT