Published : 10 Mar 2015 04:10 PM
Last Updated : 10 Mar 2015 04:10 PM
'வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள அனைத்து கருப்புப் பணத்தையும் மீட்டு நாட்டின் ஒவ்வொருவர் கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவோம்' என்று மோடி பேசியது குறித்து நிதியமைச்சர் அருண் ஜேட்லி விளக்கம் அளித்துள்ளார்.
மாநிலங்களவையில் அருண் ஜேட்லி இது குறித்து விளக்கம் அளிக்கும்போது, "வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ள கருப்புப் பணம் பற்றிய உத்தேசங்களின் அடிப்படையில் ஓர் 'எடுத்துக்காட்டுக்கு' கூறியதே அந்த ரூ.15 லட்சம் விவகாரம்" என்றார். நாடாளுமன்ற தேர்தலின்போது கருப்புப் பணத்தை ஒழிப்பது பற்றி தனது பிரச்சாரங்களில் மோடி கூறியபோது, கருப்புப் பணம் முழுதையும் ஒட்டுமொத்தமாக இந்தியாவுக்கு கொண்டு வந்து ஒவ்வொரு இந்தியரின் கணக்கிலும் ரூ.15 லட்சம் சேர்ப்போம் என்று கூறியது பற்றி மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதில் அளித்த ஜேட்லி, "வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தின் அளவு, அதைப் பற்றிய உத்தேசக் கணிப்புகளின் அடிப்படையில் அந்தத் தொகையை ஏற்றுக் கொண்டோமேயானால், ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் ஏற்படும் பயன் ரூ.15 லட்சமாக இருக்கும் என்ற அடிப்படையில் எடுத்துகாட்டு கூற்றாக மட்டுமே அது கூறப்பட்டது.
மேற்கூறிய இந்த அர்த்தத்தில்தான் பலரும் அதனைப் பயன்படுத்தினர். எனவே இதனை இந்தப் பொருளில் புரிந்து கொள்ளப்படவேண்டும்” என்றார் அருண் ஜேட்லி.
கருப்புப் பணம் பற்றி அவர் மேலும் கூறும்போது, "இதுவரை ரூ.3,250 கோடி வரி ஏய்ப்பு நடந்துள்ளது. எச்.எஸ்.பி.சி. பட்டியலில் 628 பெயர்கள் உள்ளன, இதில் 200 பேர் கணக்குகள் பற்றிய மதிப்பீடுகள் முடிந்துள்ளது. அவர்களில் சிலரிடம் வரிபாக்கி வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் 77 பேர் மீது கிரிமினல் வழக்கு நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவர்கள் ஒவ்வொருவர் பற்றிய விவரங்களும் எங்களிடம் உள்ளன.
உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழு உச்ச நீதிமன்றத்தில் மாதாமாதம் தங்கள் பரிந்துரைகளை அளித்து வருகின்றனர். அதாவது, கருப்புப் பண உருவாக்கத்தைத் தடுத்தல் மற்றும் வெளிநாட்டு வங்கிகளில் பணத்தைப் பதுக்குவது என்ற இரண்டு விவகாரங்களில் சிறப்பு விசாரணைக் குழுவினர் செய்த பரிந்துரைகள் இந்த ஆண்டு பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், தற்போது கருப்புப் பணத்துக்கு எதிரான கடுமையான தண்டனைச் சட்டங்களும் நடைமுறைப்படுத்த முன்மொழியப்பட்டுள்ளன. தண்டனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. நிதிசார்ந்த முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் வெளிநாட்டு வங்கிகளில் கருப்புப் பணம் பதுக்கும் சட்டவிரோதச் செயல்களுக்கு எதிராக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட நடைமுறைகள் சிறப்பு விசாரணைக் குழு பரிந்துரைகளின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளது" என்றார் அருண் ஜேட்லி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT