Published : 03 Mar 2015 09:04 PM
Last Updated : 03 Mar 2015 09:04 PM
நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் விவசாயிகளுக்கு எதிராக பிரிவுகளை நீக்குவதற்கு மத்திய அரசை நிர்ப்பந்திக்கும் வகையில் 1,100 கி.மீ. நடைப்பயணம் மேற்கொள்ளப் போவதாக சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தப் பாதயாத்திரை மகாராஷ்டிர மாநிலம், வார்தா நகரம், சேவாகிராமத்தில் உள்ள காந்தி ஆசிரமத்தில் தொடங்கி டெல்லி ராம்லீலா மைதானத்தில் முடியும். நடைப்பயணத்துக்கான கால அட்டவணை சேவாகிராமத்தில் வரும் மார்ச் 9-ம் தேதி நடைபெறும் கூட்டத்தில் முடிவு செய்யப்படும்” என்று கூறியுள்ளார்.
மகாத்மா காந்தியின் வரலாற்றுச் சிறப்புமிக்க தண்டி யாத்திரையை ஒத்த இந்த நடைப்பயணம் டெல்லியை அடைய 3 மாதங்கள் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக அண்ணா ஹசாரே கடந்த மாதம் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் 2 நாள் போராட்டம் நடத்தினார். பட்ஜெட் கூட்டத் தொடரின்போது நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு பல்வேறு விவசாய அமைப்புகள் ஆதரவு தெரிவித்தன. இந்நிலையில் மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லாததால் ஹசாரே அதிருப்தி அடைந்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, “நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டம் விவசாயிகளுக்கு அநீதி இழைப்பதாக கருதப்பட்டால், அதில் மாற்றம் செய்யத் தயாராக இருப்பதாக மத்திய அரசு கூறியது. ஆனால் அவசர சட்டத்துக்கும் தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள மசோதாவுக்கும் வேறுபாடு இருப்பதாகத் தெரியவில்லை.
இந்நிலையில் விவசாயிகள் சங்கங்கள் மற்றும் தலைவர்களை ஆலோசித்த பிறகு, இந்த விவகாரத்தில் மத்திய அரசை நிர்ப்பந்திக்கும் வகையில் நடைப்பயணம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் உள்ளூர் அளவில் போராட்டம் நடத்தி கைதாக வேண்டும் என்றும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT