Published : 23 Mar 2015 08:33 AM
Last Updated : 23 Mar 2015 08:33 AM
தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டாம் என்று டி.வி. சேனல்களுக்கு மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் அறிவுரை வழங்கியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம், கதுவா மாவட்டத்தில் கடந்த 20-ம் தேதி தீவிரவாதிகளுக்கு எதிரான பாதுகாப்பு படையினரின் நடவடிக்கையை சில சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்தன.
இந்நிலையில் அனைத்து டி.வி. சேனல்களுக்கும் மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “தீவிரவாதிகளுக்கு எதிராக பாதுகாப்பு படையினர் சண்டையிடும்போது, சண்டை நடைபெறும் இடம், வீரர்களின் எண்ணிக்கை, அவர்கள் முன் னேறிச் செல்லும் திசை, கடை பிடிக்கும் யுக்தி போன்றவற்றை விரிவாக ஒளிபரப்பக் கூடாது.
இதுபோன்ற தகவல்கள் தீவிர வாதிகளுக்கும் அவர்களை கையா ளுபவர்களுக்கும் சென்றடை யாமல் இருப்பதையும் அப்பாவி மக்களின் பாதுகாப்பையும் அனைத்து டி.வி. சேனல்களும் உறுதிப்படுத்த வேண்டும்.
தேசப் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, பயங்கரவாதிகளுக்கு எதிரான பாதுகாப்பு படையினரின் நடவடிக்கையை நேரடி ஒளிபரப்பு செய்யக் கூடாது.
பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை முடிவுக்கு வந்து, அதிகாரப்பூர்வ தகவல் தரப்படும் வரை, செய்தி திரட்டுவதை தவிர்க் கலாம்” என்று கூறப்பட்டுள்ளது.
இந்த அறிவுரைகள் தொடர்பாக தகவல் ஒலிபரப்பு அமைச்சக செயலாளர் விமல் ஜுல்கா கூறும்போது, “பிரச்சினையின் முக்கியத்துவம் கருதி அனைத்து ஊடகங்களின் ஒத்துழைப்பையும் நாடியுள்ளோம்” என்றார்.
பயங்கரவாதிகளுக்கு எதிரான பாதுகாப்பு படையினரின் நடவடிக்கையை நேரடி ஒளிபரப்பு செய்யமுடியாத வகையில் விதிமுறைகளில் திருத்தம் செய்ய வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் ஏற்கெனவே கருத்து கூறியுள்ளது. இந்நிலையில் தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் இந்த அறிவுரையை வழங்கியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT