Published : 25 Mar 2015 08:26 AM
Last Updated : 25 Mar 2015 08:26 AM

66 ஏ தவறாக பயன்படுத்தப்பட்ட 10 வழக்குகள்

சமூக வலைத்தள சுதந்திரத்துக்கு தடை விதித்த 66 ஏ சட்டப்பிரிவு இதுவரை 10 சம்பவங்களில் தவறாகப் பயன்படுத்தப் பட்டுள்ளது.

அசிம் திரிவேதி

2012-ம் ஆண்டில் நாடாளுமன்றத் தையும் ஊழலையும் விமர்சிக்கும் வகையில் சமூக வலைத்தளத்தில் கார்ட்டூன் வரைந்த கார்ட்டூனிஸ்ட் அசிம் திரிவேதி கைது செய்யப்பட்டார். இதை எதிர்த்து பல்வேறு சமூக ஆர்வலர்கள் குரல் எழுப்பினர்.

ஷாஹீன்ததா, ரேணு சீனிவாசன்

2012 நவம்பர் 17-ம் தேதி பால்தாக்கரே மும்பையில் காலமானார். அவரது மறை வால் மும்பை நகரம் முடங்கியது. இதுதொடர்பாக ஷாஹீன்ததா என்ற இளம்பெண், “பால்தாக்கரே மரணத்தால் மும்பை முடங்கியதற்கு அச்சமே காரணம், அவர் மீதான மரியாதை அல்ல’’ என்று பேஸ்புக்கில் கருத்து தெரிவித்திருந்தார். இந்த கருத்தை அவரது தோழி ரேணு சீனிவாசன் பேஸ்புக்கில் ஆமோதித்தார்.

இதுதொடர்பாக சிவசேனா அளித்த புகாரின்பேரில் இருவரும் கைது செய்யப் பட்டனர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.

அம்பிகேஷ் மகாபத்ரா, சுபத்ரா சென்குப்தா

2012-ம் ஆண்டில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியை விமர்சித்து ஜவாத்பூர் பல்கலைக்கழக பேராசிரியர் மகாபத்ராவும் அவரது நண்பர் சுபத்ராவும் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட கார்ட்டூனுக்காக கைது செய்யப் பட்டனர்.

ரவி சீனிவாசன்

முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம் பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை விமர்சித்து புதுச்சேரியை சேர்ந்த ரவி சீனிவாசன் 2012-ம் ஆண்டில் ட்விட்டரில் கருத்துகளை வெளியிட்டார். இதுதொடர்பாக அவர் மீது 66 ஏ பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மயாங்க் சர்மா, கே.வி. ராவ்

ஏர் இந்தியா ஊழியர்கள் மயாங்க் சர்மா, கே.வி. ராவ் உள்ளிட்டோர் அரசியல் வாதிகள் குறித்து பேஸ்புக்கில் வெளியிட்ட கருத்துகளைத் தொடர்ந்து அவர்கள் மீது 66 ஏ பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

எழுத்தாளர் கன்வால் பார்தி

கடந்த 2013 ஆகஸ்ட்டில் உத்தரப் பிரதேச ஐ.ஏ.எஸ். அதிகாரி துர்கா சக்தி நாக்பால் சஸ்பெண்ட் செய்யப்பட்டதைக் கண்டித்து எழுத்தாளர் கன்வால் பார்தி பேஸ்புக்கில் கருத்துகளை பதிவு செய்தார். இதுதொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார்.

ராஜேஷ் குமார்

கேரளாவைச் சேர்ந்த ராஜேஷ் குமார், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக பேஸ்புக்கில் ஆட்சேபகரமான கருத்து களை வெளியிட்டதால் அவர் கைது செய்யப்பட்டார்.

தேவு சோதன்கர்

கோவா மாநிலத்தைச் சேர்ந்த தேவு சோதன்கர், பிரதமர் மோடிக்கு எதிராக பேஸ்புக்கில் வெளியிட்ட கருத்துக்காக கைது செய்யப்பட்டார்.

உத்தரப் பிரதேச மாணவர்

உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவர், அந்த மாநில அமைச்சர் ஆசம் கானுக்கு எதிராக அண்மையில் பேஸ்புக்கில் கருத்துகளை பதிவு செய்தார். இதுதொடர்பாக அந்த மாணவர் கைது செய்யப்பட்டார்.

இவர்கள் அனைவர் மீதும் தகவல் தொழில்நுட்ப சட்டம் 66 ஏ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது குறிப் பிடத்தக்கது.

காஷ்மீர் இளைஞர்கள்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஸ்த்வார் மாவட்டத்தைச் சேர்ந்த கிஷோரி சர்மா, பன்சிலால், மோதிலால் சர்மா ஆகியோர் பேஸ்புக்கில் ஆட்சேபகரமான வீடியோவை வெளியிட்டதற்காக கைது செய்யப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x