Published : 31 Mar 2014 11:13 AM
Last Updated : 31 Mar 2014 11:13 AM

புல்லரின் மரண தண்டனை ஆயுளாகக் குறைப்பு: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

காலிஸ்தான் தீவிரவாதி தேவேந்தர்பால் சிங் புல்லரின் மரண தண்டனையை ஆயுளாகக் குறைத்து உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது. கருணை மனு மீது காலம் தாழ்த்தி முடிவெடுத்தது, அவரது தற்போதைய உடல்நிலை ஆகியவற்றை கருத்தில்கொண்டு இந்த தீர்ப்பு வழங்கப்படுவதாக தலைமை நீதிபதி பி. சதாசிவம் தலைமையிலான 4 நீதிபதிகள் அடங்கிய அமர்வு தெரிவித்தது.

1993 செப்டம்பரில் டெல்லியில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் 9 பேர் உயிரிழந்தனர். அப்போ தைய இளைஞர் காங்கிரஸ் தலைவர் எம்.எஸ்.பிட்டா உள்பட 25 பேர் காயமடைந்தனர்.

புல்லருக்கு மரண தண்டனை

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட காலிஸ்தான் விடுதலைப் படை தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தேவேந்தர் சிங் புல்லருக்கு 2001 ஆகஸ்ட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்தார். ஆனால் உயர் நீதிமன்றம் 2002-ம் ஆண்டில் புல்லரின் மரண தண்டனையை உறுதி செய்தது.

இதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் அவர் மேல்முறை யீடு செய்தார். 2002 மார்ச் 26-ல் உச்ச நீதிமன்றமும் மரண தண்டனையை உறுதி செய்தது. மீண்டும் அவர் மறுஆய்வு மனு தாக்கல் செய்தார். அந்த மனு 2002 டிசம்பர் 17-ல் தள்ளுபடி செய்யப்பட்டது.

கருணை மனு நிராகரிப்பு

இதையடுத்து தனது மரண தண்டனையைக் குறைக்கக் கோரி 2003-ம் ஆண்டில் குடியரசுத் தலைவருக்கு புல்லர் கருணை மனு அனுப்பினார். எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு 2011 மே 14-ம் தேதி அவரது கருணை மனு நிராகரிக்கப்பட்டது.

கருணை மனு மீது முடிவெடுக்க நீண்ட காலதாமதம் ஏற்பட்டதை சுட்டிக் காட்டி புல்லர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மனைவி புதிய மனு

இதைத் தொடர்ந்து புல்லரின் மனைவி நவ்னீத் கவுர் உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்தார். இந்த மனு தொடர்பாக மத்திய அரசு நீதிமன்றத்தில் அண்மையில் அளித்த விளக்கத்தில் புல்லரின் மரண தண்டனையை ஆயுளாகக் குறைக்க ஆட்சேபம் இல்லை என்று தெரிவித்தது.

இந்நிலையில் தலைமை நீதிபதி பி.சதாசிவம், நீதிபதிகள் ஆர்.எம்.லோதா, எச்.எல். தத்து, எஸ்.ஜே.முகோபாத்யாயா அடங்கிய அமர்வு முன்பு இந்த மனு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், புல்லரின் தற்போதைய உடல்நிலை பாதிப்பு, கருணை மனு மீது முடிவெடுக்க காலம் தாழ்த்தியது ஆகிய வற்றை கருத்தில்கொண்டு அவரது மரண தண்டனை ஆயுளாகக் குறைக்கப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.

‘சோனியா அனுமதி பெற்று தீக்குளிப்பேன்’

இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவரும் அகில இந்திய தீவிரவாத எதிர்ப்பு முன்னணி தலைவருமான எம்.எஸ். பிட்டா நிருபர்களிடம் கூறியதாவது: புல்லரின் மரண தண்டனை ஆயுளாகக் குறைக்கப்பட்டிருப்பது தீவிரவாதத்துக்கு எதிராக போராடுபவர்களுக்கு பேரிடியாக உள்ளது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு எனக்கு வாழ பிடிக்கவில்லை. எனவே காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் அனுமதி பெற்று தீக்குளிப்பேன் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x