Published : 23 Mar 2015 12:47 PM
Last Updated : 23 Mar 2015 12:47 PM

எதிர்க்கட்சியினரின் போராட்டத்துக்கு வெற்றி: ஐஏஎஸ் அதிகாரி மரணம் வழக்கு சிபிஐ-க்கு மாற்றம் - கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவிப்பு

பெங்களூருவில் ஐஏஎஸ் அதிகாரி டி.கே.ரவி மர்மமான முறையில் மரணம் அடைந்த‌து தொடர்பான வழக்கு, சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படும் என கர்நாடக முதல்வர் சித்தராமையா நேற்று சட்டப்பேரவையில் அறிவித்தார். இதை ரவியின் குடும்பத்தினரும், எதிர்க்கட்சியினரும் வரவேற்றுள் ளனர்.

க‌ர்நாடக மாநில‌ வணிக வரித்துறையில் கூடுதல் ஆணை யராக பணியாற்றிய‌ டி.கே.ரவி (36) கடந்த 16-ம் தேதி பெங்களூருவில் உள்ள தனது இல்லத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். நேர்மையான அதிகாரியாக அறியப்பட்ட ரவியின் மரணத்தைக் கண்டித்து மாநிலம் முழுவதும் போராட்டம் வெடித்தது.

இதையடுத்து ரவி மரணம் தொடர்பாக சிஐடி போலீஸ் விசார ணைக்கு மாநில அரசு உத்தர விட்டது. இதை ஏற்காத பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய எதிர்க்கட்சியினர், சிபிஐ விசாரணை கோரி சட்டப்பேரவை யில் 2 நாட்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர்.

மேலும் எதிர்க்கட்சித் தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர் தலைமையில் ஊர்வலமாகச் சென்று ஆளுநர் வாஜுபாய் வாலாவிடம் மனு அளித்தனர். கர்நாடக பாஜக, மஜத எம்பிக்கள் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியையும், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கையும் சந்தித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கோரினர்.

இதனிடையே ரவியின் பெற் றோரும், மனைவியும், “சிஐடி போலீஸ் விசாரணையில் எங்க ளுக்கு திருப்தி இல்லை. ரவியின் மரணத்தில் ஏதோ மர்மம் இருக் கிறது. எனவே சிபிஐ விசார ணைக்கு உத்தரவிட வேண்டும்” என சட்டப்பேரவையின் முன்பு அமர்ந்து கோரிக்கை விடுத்தனர்.

இது தொடர்பாக ரவியின் தாயார் கவுரம்மா, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் அனுப்பினார். இந்நிலை யில் சிபிஐ விசாரணைக்கு உத்தர விடுமாறு கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு சோனியா காந்தி அறிவுறுத்தியதாக தெரிகிறது.

உண்மை வெளிவர‌ வேண்டும்

இந்நிலையில் முதல்வர் சித்தராமையா நேற்று கர்நாடக சட்டப்பேரவையில் பேசியதாவது:

ஐஏஸ் அதிகாரி டி.கே. ரவியின் மரணம் குறித்த வழக்கை சிஐடி போலீஸார் சிறப்பாக விசாரித்து வந்தனர். ஆனால், கர்நாடக போலீஸாரின் திறமையை குறைத்து மதிப்பிட்ட எதிர்க்கட்சியினர் சிபிஐ விசாரணையை கோரின‌ர். இந்த விவகாரத்தில் எதையும் மூடி மறைக்க வேண்டும் என்ற நோக்கம் எனக்கு இல்லை. யாரையும் காப்பாற்ற வேண்டும் என்ற உள்நோக்கமும் இல்லை.

கடந்த காலங்களில் சிபிஐ விசாரணை முறையை, ‘காங்கிரஸ் விசாரணை அமைப்பு’ என பாஜக விமர்சித்தது. காங்கிரஸைப் பொறுத்தவரை சட்டத்தின் மீதும், நீதி பரிபாலனத்தின் மீதும் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ளது. ரவி வழக்கில் எதிர்க்கட்சியினர் அரசியல் உள்நோக்கத்துடன் செயல்படுகின்றனர். ஒரு அதிகாரியின் மரணத்தில் அரசியல் செய்ய வேண்டிய அவசியம் காங்கிரஸுக்கு இல்லை.

உண்மை வெளிவர வேண்டும் என்ற கர்நாடக மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அனைவரும் வரவேற்பு

கர்நாடக அரசின் இந்த முடிவை எதிர்க்கட்சி தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர், முன்னாள் முதல்வர் குமாரசாமி, கன்னட அமைப்பினர், மனித உரிமை அமைப்பினர் உள்ளிட்டோர் வரவேற்றுள்ளனர்.

அதேபோல டி.கே.ரவியின் பெற்றோரும், மனைவி குடும்பத்தாரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். ரவியின் தாய் கவுரம்மா கூறும்போது, “எனது மகனை இந்த தேசத்திற்காக பலி கொடுத்துவிட்டேன். அவரது மரணத்தில் ஒளிந்திருக்கும் உண்மை வெளி வர வேண்டும். அதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் கண்டிப்பாக சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். எனது மகனைப் பற்றி அவதூறு பரப்புபவர்களுக்கு உரிய பதிலடி கொடுக்க வேண்டும். சிபிஐ விசாரணையில் உண்மை வெளிவரும் என நம்புகிறேன்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x