Published : 14 Mar 2015 08:48 AM
Last Updated : 14 Mar 2015 08:48 AM

மேகேதாட்டு திட்டத்துக்கு ரூ.25 கோடி: கர்நாடக பட்ஜெட்டில் அறிவிப்பு

கர்நாடக சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகே தாட்டுவில் அணைகட்டி கூட்டுக் குடிநீர் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு ரூ.25 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

மேகேதாட்டுவில் புதிய அணை கள் கட்டுவதை எதிர்த்து தமிழக அரசும்,தமிழக விவசாயிகளும் தொடர்ந்து போராடி வரும் நிலை யில்,கர்நாடக அரசு நிதிநிலை அறிக்கையில் இதை அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது.

கர்நாடக சட்டப்பேரவையில் 2015-16 ஆண்டுக்கான பட்ஜெட்டை முதல்வர் சித்தராமையா நேற்று தாக்கல் செய்து உரையாற்றினார்.

கிருஷ்ணராஜசாகர் அணை யில் இருந்து பிருந்தாவன் பூங்கா வுக்கு செல்லும் கால்வாய்கள் சர்வதேச தரத்துக்கு உயர்த்தப் படும். நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்ப‌டும்.

`காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் தடுப்பு அணை கள் கட்டி, கூட்டுக் குடிநீர் திட்டம் நிறைவேற்றுவதற்கு விரிவான திட்ட வரைவு அறிக்கை தயாரிக்கும் பணிகள் நடந்துவருகின்றன. மேகேதாட்டு திட்டத்தை நிறை வேற்றுவத‌ற்காக‌ உலகளாவிய ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டுள் ளது. நடப்பாண்டில் இந்த திட்டத் துக்கு ரூ.25 கோடி ஒதுக்கப்பட்டுள் ளது'' என அவர் தெரிவித்தார்.

பேச்சு நடத்த விரும்பவில்லை

இது தொடர்பாக கர்நாடக நீர்ப்பாசனத் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல், `தி இந்து'விடம் கூறியதாவது:

நிதிநிலை நிலை அறிக்கையில் நீர்ப்பாசனத் துறைக்கு ரூ.12,956 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.இதைப் பயன்படுத்தி புதிய தடுப்பு அணைகள், கால்வாய்கள் அமைத்து விவசாயத்துறை மேம்படுத்தப்படும்.காவிரியின் உபரிநீரை முழுமையாக பயன்படுத்துவது தொடர்பாக புதிய நீர்க் கொள்கைகள் வகுக்கப்படும். காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படி தமிழ்நாட்டுக்கு உரிய நீர் வழக்கம் போல வழங்கப்படும்.

மேகேதாட்டுவில் புதிய‌ தடுப்பணைகள் கட்டுவதற்கு தமிழ்நாடு எதிர்ப்புத் தெரிவிப்ப‌து சரியல்ல. தமிழக அரசியல் கட்சி கள், விவசாயிகளின் போராட்டம் கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது. எனவே மேகேதாட்டு திட்டம் குறித்து தமிழக அரசுட‌ன் கர்நாடகா பேச்சுவார்த்தை நடத்த விரும்பவில்லை.

க‌ர்நாடக எல்லைக்குள் மக்களின் நலனுக்காக புதிய திட்டங்களை உருவாக்குவது கர்நாடக அரசின் உரிமை. இதில் தமிழ்நாடு தலையிட முடியாது.

மேகேதாட்டு கூட்டுக் குடிநீர் திட்ட வரைவு பணிகள் கடந்த 10 மாதங்களாக தயாரிக்கப்பட்டு வருகின்றன. மத்திய சட்டம் மற்றும் சுற்றுச்சூழல் துறையின் அனுமதி கோரப்பட்டுள்ளது.

அனுமதி கிடைத்தவுடன் மேகேதாட்டுவில் தடுப்பணைகள் கட்டும் பணி தொடங்கப்படும். அணையின் கட்டுமானப் பணிகளுக்காக அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 6 நிறுவனங்கள் ஒப்பந்தப் புள்ளிகள் சமர்ப்பித்துள்ளன''என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x