Published : 19 Mar 2015 09:47 AM
Last Updated : 19 Mar 2015 09:47 AM
இலங்கைப் பயணத்தின்போது பிரதமர் நரேந்திர மோடி இந்திய மீனவர் பிரச்சினை குறித்து விவாதித்தார் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி செஷல்ஸ், மொரீஷியஸ், இலங்கை ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்தப் பயணம் குறித்து மக்களவையில் தாமாக முன்வந்து சுஷ்மா ஸ்வராஜ் கூறியதாவது:
பிரதமர் மோடியின் இலங்கைப் பயணத்தின்போது அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனா மற்றும் அதிகாரிகளை சந்தித்துப் பேசினார். இந்தப் பேச்சுவார்த்தையின்போது, இந்திய மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை குறித்து விவாதிக் கப்பட்டது.
குறிப்பாக இந்தப் பிரச் சினையை எழுப்பிய மோடி, “இது இருநாட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் மற்றும் மனிதாபிமானம் தொடர்புடைய சிக்கலான பிரச்சினை. எனவே இதற்கு இருநாடுகளும் நீண்ட கால அடிப்படையில் தீர்வு காண வேண்டியது அவசியம்” என்று கூறினார்.
மேலும் அவர், “இந்தப் பிரச்சினை தொடர்பாக இரு நாட்டு மீனவ சங்கங்களும் உடனடியாக சந்தித்து இருதரப்புக்கும் ஏற்ற உடன்பாட்டை செய்துகொள்ள முன்வர வேண்டும்” என்றும் வலியுறுத்தி உள்ளார்.
இதுதவிர, அமைதி, மறுவாழ்வு மற்றும் வளர்ச்சி ஆகியவற்றை நோக்கிய இலங்கை அரசின் புதிய பயணம் வெற்றி பெற தனது வாழ்த்துகளையும் ஆதரவையும் மோடி தெரிவித்தார்.
மேலும், இலங்கைத் தமிழர் உட்பட அனைத்து இன மக்களின் மேம்பாட்டுக்காகவும், சமத்துவ வாழ்க்கை, சமநீதி, அமைதி ஆகியவற்றை நிலை நாட்டும் இலங்கை அரசின் முயற்சிக்கு இந்தியா எப்போதும் உறுதுணையாக நிற்கும்.
தமிழர்களுக்கு சம அதிகாரம் வழங்க வகை செய்யும் 13-வது சட்டத் திருத்தம் விரைவில் அமல்படுத்தப்படும் என்று தான் நம்புவதாகவும் மோடி கூறினார்.
இவ்வாறு சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT