Published : 08 Mar 2015 12:40 PM
Last Updated : 08 Mar 2015 12:40 PM
வன்முறைகளுக்கு ஆளாக்கப்படும் பெண்களுக்கு உதவி, சட்ட ஆலோசனை, மனநல ஆலோசனை ஆகியவற்றை வழங்க அரசு ஒரே இடத்தில் தீர்வு காண மையங்களை அமைக்க உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மேலும், ஆலோசனை மற்றும் அவை சார்ந்த சேவைகள் பெண்களுக்குக் கிடைக்கும் வகையில் அரசு 181 மொபைல் அவசர உதவி எண்ணை அறிமுகம் செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்தி:
"சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களின் தன்னலமிக்க தைரியத்துக்கும், அவர்களின் புகழ்மிக்க சாதனைகளுக்கும் நான் தலை வணங்குகிறேன்.
நமது வளர்ச்சியை நோக்கிய பயணத்தில் பெண்களைச் சமமாகவும் ஒருங்கிணைந்து பங்கேற்கச் செய்வோம் என்ற உறுதி மொழியை இன்று நாம் புதுப்பித்துக்கொள்வோம்.
எமது அரசு, பெண்களின் வாழ்வில் நல்ல மாற்றங்களைக் ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அனைத்து மக்களுக்கும் வாய்பளிப்பதும், அவர்களின் கண்ணியமான வாழ்க்கையுமே நமது இந்தியாவின் முன்னேற்றத்துக்கான தொலைநோக்கின் முக்கிய அம்சமாகும்.
பெண் குழந்தைகளுக்கான 'பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம்' திட்டம் ஒரு முன்னுதாரணமான திட்டமாகும். இந்தத் திட்டம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இளம் பெண்களுக்கான கல்விக்கும் திருமணத்துக்கும் தங்க மகள் திட்டம் தேவையான ஆதரவை அளிக்கிறது. ஆயிரமாயிரம் பெண்களுக்கு பொருளாதார சுதந்திரத்தை வழங்க முத்ரா வங்கி தேவையான உதவிகளை அளிக்கிறது.
சமீபத்தில் சமர்பிக்கப்பட்ட நிதி நிலை அறிக்கை சமூகப் பாதுகாப்பு திட்டங்களை அடிப்டையாகக் கொண்டு வெளியிடப்பட்டுள்ளது. அதில் பிரதம மந்திரி பாதுகாப்பு காப்பீடு திட்டம், பிரதம மந்திரி ஆயுள் காப்பீடு திட்டம் மற்றும் அட்டல் ஓய்வூதியத் திட்டம் ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளன. இத்திட்டங்கள் பெண்களுக்கு பெருமளவில் பயன் அளிக்கும்.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து நமக்கு தெரியவரும்போது நாம் அவமானத்தில் தலை குனிந்து நிற்கிறோம். பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு ஒரு முடிவு கொண்டுவர நாம் அனைவரும் ஒன்றாகச் செயல்பட வேண்டும்.
வன்முறைகளுக்கு ஆளாக்கப்படும் பெண்களுக்கு உதவி, சட்ட ஆலோசனை, மனநல ஆலோசனை ஆகியவற்றை வழங்க அரசு ஒரே இடத்தில் தீர்வு காண மையங்களை அமைக்க உள்ளது. ஆலோசனை மற்றும் அவை சார்ந்த சேவைகள் பெண்களுக்குக் கிடைக்கும் வகையில் அரசு 181 மொபைல் அவசர உதவி எண்ணை அறிமுகம் செய்கிறது. நமது கனவை நனவாக்க நான் உங்கள் அனைவரின் ஆதரவையும் கோருகிறேன்" என்று பிரதமர் மோடி கூறியிருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT