Published : 13 Mar 2015 09:06 AM
Last Updated : 13 Mar 2015 09:06 AM
நிலக்கரிச் சுரங்க ஊழல் வழக்கில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு சம்மன் அனுப்பியதன் மூலம் சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி பரத் பராஷர் தலைப்புச் செய்தியில் இடம்பெற்றிருப்பது இது முதன்முறை அல்ல. இதற்கு முன்பும் இதுபோன்ற முடிவுகளால் பரபரப்பாக பேசப்பட்டவர்.
டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றங்களின் கூடுதல் செஷன்ஸ் நீதிபதியாக இருந்தவர் பராஷர். டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியின் பரிந்துரையின் பேரில் உச்ச நீதிமன்றம் இவரை நிலக்கரி ஊழல் வழக்கு விசாரணைக்கு நியமித்தது.
இவர் இதற்கு முன்பும் பல்வேறு புலனாய்வு அமைப்புகளை அவ்வப்போது கடுமையாக சாடியுள்ளார். குறிப்பாக, நிலக்கரிச் சுரங்க ஊழல் வழக்கை விசாரித்து வரும் இவர், சமீபத்தில் சிபிஐ முன்னாள் இயக்குநர் ரஞ்சித் சின்ஹாவை எச்சரித்திருந்தார்.
முன்னதாக, அடிப்படை புலனாய்வு திறமைகூட இல்லை என சிபிஐ அதிகாரிகளை கடிந்து கொண்டுள்ளார். டெல்லி உயர் நீதிமன்றத்தின் இணை பதிவாளராகவும் உள்ளார் பராஷர்.
சிபிஐ அமைப்புக்கு இவர் கடும் சவாலாக விளங்குகிறார். அதாவது, நிலக்கரிச் சுரங்க ஊழல் வழக்கில் தொழிலதிபர் குமார் மங்கலம் பிர்லாவுக்கு எதிரான வழக்கை முடித்துக் கொள்வதாக அளித்த சிபிஐ அறிக்கையை ஏற்க மறுத்தவர். இதற்கு முன்பு ஒரு முறை நிலக்கரிச் சுரங்க ஊழல் வழக்கில், அத்துறைக்கு பொறுப்பு வகித்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் விசாரணை நடத்தினீர்களா என சிபிஐ அதிகாரிகளைக் கேட்டதன் மூலம், நீதிபதி பராஷர் ஊடகங்களில் முதன்முறையாக தலைப்புச் செய்தியில் இடம்பெற்றார். இதுதொடர்பாக பிரதமர் அலுவலக அதிகாரிகளையும் கடிந்து கொண்டார்.
இதுபோல, பூலான் தேவி கொலை வழக்கில், ஷெர் சிங் ராணாவுக்கு ஆயுள் தண்டனை விதித்தார். மேலும் 10 பேர் மீதான ஆதாரம் நிரூபிக்கப்படாததால் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
கிரிக்கெட் ஐபிஎல் ஸ்பாட் ஃபிக்சிங் வழக்கை விசாரித்த நீதிபதி பராஷர், பல முறை வாய்தா கேட்டதற்காக டெல்லி போலீஸுக்கு கடுமையாக எச்சரிக்கை விடுத்தார். விசாரணையின்போது முறையாக தயாராகி வராவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT