Published : 07 Mar 2015 03:24 PM
Last Updated : 07 Mar 2015 03:24 PM

புலிகளுக்கு எதிரான போரில் எங்களுக்கு இந்தியா உதவியது: இலங்கை பிரதமர் ரணில் பேட்டி

விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கையில் நடந்த இறுதிக்கட்டப் போரை நடத்த இந்தியா உதவியது. இந்திய உதவி இல்லாமல் ராஜபக்ச அரசால் விடுதலைப் புலிகளை வீழ்த்தியிருக்க முடியாது என தந்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.

பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:

இலங்கையில் கடந்த 2011-ல் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கையில் நடந்த இறுதிக்கட்டப் போரை நடத்த இந்தியா உதவியது. இந்திய உதவி இல்லாமல் ராஜபக்ச அரசால் விடுதலைப்புலிகளை வீழ்த்தியிருக்க முடியாது. இந்திய உதவியைப் பெறுவதற்கு இலங்கையில் 13-வது சட்டப்பிரிவில் திருத்தம் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை ராஜபக்சே அறிவித்தார்.

ஆனால், அதை அவர் நிறைவேற்றவில்லை. போரில் உதவியதை இந்திய அரசியல்வாதிகள் வேண்டுமானால் மறுக்கலாம். ஒருவேளை இந்திய அரசியல்வாதிகளுக்கு அம்னீசியா (மறதி நோய்) ஏற்பட்டிருக்கலாம். ஆனால், இந்தியா உதவியது என்பதே உண்மை.

இலங்கைப் போரில் மனித உரிமை மீறப்பட்டது குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும். அதுவும், 1970 காலகட்டத்தில் இருந்து நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என வடக்கு மாகாண முதல்வர் சி.விக்ணேஸ்வரன், பொறுப்பற்ற ஒரு தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்.

அவரது தீர்மானத்தின்படி விசாரணை செய்தால் இலங்கை அரசு, விடுதலைப் புலிகள் மட்டுமல்லாது அப்பாவி உயிர்கள் பறிபோனதற்கு இலங்கைக்கு அனுப்பபட்ட இந்திய அமைதிப் படை (ஐ.பி.கே.எஃப்-பும்) காரணமாகும். எனவே படுகொலைகளுக்கு இலங்கையை மட்டும் காரணம் கூறுவது சரியாகாது. விசாரணை அனைத்து தரப்பினரும் மீது நடத்தப்பட வேண்டும்" இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x