Published : 17 Mar 2015 04:40 PM
Last Updated : 17 Mar 2015 04:40 PM
முக்கியமான 'சீர்திருத்த' மசோதாக்கள் பல நிலுவையில் உள்ள போது எதிர்கட்சிகள் முட்டுக்கட்டை அரசியல் நடத்துவது சரியல்ல என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 8%-ஐக் கடந்து விடும். சீனாவையும் கடந்து செல்லவிருக்கிறோம் என்று கூறிய அருண் ஜேட்லி இதுதான் வளர்ச்சிக்கான ‘வரலாற்று வாய்ப்பு’ என்று கூறியுள்ளார்.
இன்னும் பல துறைகளில் அன்னிய முதலீடை வரவேற்று அதன் மூலம் கிடைக்கும் வருவாயின் வாயிலாக வேலை வாய்ப்புகள், உள்கட்டமைப்பு மேம்பாடு, மற்றும் சமூக நலத் திட்டங்களை கொண்டு வர முடியும் என்று அரசு முழு மூச்சுடன் இயங்கி வருவதாக அவர் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தின் போது பேசிய அருண் ஜேட்லி, “இந்திய நாடு வளர்ச்சிப்பாதையில் செல்ல இதுவே சிறந்த வரலாற்று வாய்ப்பாகும். உலக நாடுகள் இந்தியாவை வளமான கண்ணோட்டத்துடன் பார்த்து வருகிறது. எனவே எதிர்க்கட்சிகளை கைகூப்பி கேட்டுக் கொள்கிறேன், முட்டுக்கட்டை அரசியலை அடுத்தக் கட்டத்துக்குக் கொண்டு செல்லாதீர்கள்.
சர்வதேச செலாவணி நிதியம் (ஐ.எம்.எஃப்) சீன பொருளாதாரத்தை இந்தியா கடந்து செல்லும் என்று கூறியுள்ளது. இதுதான் நம் நாட்டு வளர்ச்சிக்கான வரலாற்று வாய்ப்பு எனவே முட்டுக்கட்டை அரசியலுக்கு முடிவு கட்டுங்கள்." இவ்வாறு கூறினார் அருண் ஜேட்லி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT