Published : 16 Mar 2015 08:26 AM
Last Updated : 16 Mar 2015 08:26 AM
நிலம் கையகப்படுத்துதல் மசோதாவுக்கு எதிராக காங்கிரஸ், இடது சாரி கட்சிகள், ஜனதா கட்சிகள், திமுக உள்ளிட்ட பத்து கட்சிகளின் எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து குடியரசுத் தலைவர் மாளிகைக்கு நாளை பேரணியாகச் செல்கின்றனர்.
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து கோரிக்கை மனு அளிக்கின்றனர்.
கடந்த 2013-ம் ஆண்டில் அப்போதைய காங்கிரஸ் அரசு நிலம் கையகப்படுத்துதல் சட்டத் தில் சில திருத்தங்களை செய்தது. அதன்படி நிலங்களை கையகப் படுத்த 80 சதவீத விவசாயிகள் ஒப்புதல் அளிக்க வேண்டும், 5 ஆண்டுகளுக்குள் நிலத்தை பயன் படுத்தாவிட்டால் விவசாயிகளிடம் திருப்பி அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
மத்தியில் கடந்த ஆண்டு பாஜக அரசு பதவியேற்ற பிறகு இவ்விரு பிரிவுகளும் நீக்கப்பட்டு அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. அந்த அவசர சட்டத்துக்கு மாற்றாக நாடாளுமன்றத்தில் தற்போது நிலம் கையகப்படுத்துதல் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
புதிய மசோதா மக்களவையில் கடந்த 10-ம் தேதி நிறைவேற்றப் பட்டது. அப்போது காங்கிரஸ், திரிணமூல், சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. அதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு அளித்தன.
மாநிலங்களவையில் பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லாததால் மசோதாவை நிறை வேற்ற எதிர்க்கட்சிகளின் ஆதரவை மத்திய அரசு கோரியுள்ளது. ஆனால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மசோதாவை மிகக் கடுமையாக எதிர்த்து வருகின்றன.
சரத் யாதவ் அறிக்கை
இதுகுறித்து ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத் யாதவ் டெல்லியில் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
விவசாயிகளின் நலனுக்கு எதிராக நிலம் கையகப்படுத்துதல் மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதற்கு எதிராக காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணமூல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம், மதச்சார்பற்ற ஜனதா தளம், திமுக உள்ளிட்ட 10 கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன.
பத்து கட்சிகளின் சார்பில் நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை முன்பு செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தப்படும். அதன் பின்னர் அனைத்து கட்சிகளின் தலைவர்கள், எம்பிக்கள் குடியரத் தலைவர் மாளிகைக்கு பேரணியாகச் சென்று பிரணாப் முகர்ஜியிடம் முறையிடுவோம். அவரிடம் கோரிக்கை மனுவும் அளிக்கப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவர் டெரக் ஓ பிரைன் எம்.பி. சமூக வலைதளமான ட்விட்டரில் நேற்று வெளியிட்ட பதிவில், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்குச் சந்திக்க அனுமதி கிடைத்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவரைச் சந்திக்கும் குழுவில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் பங்கேற்பார் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சிவசேனா எதிர்ப்பு
மசோதா குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் பிரமோத் திவாரி கூறியபோது, நிலம் கையகப்படுத் துதல் மசோதாவை நாடாளுமன்ற தேர்வுக் குழு பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும். அப்போதுதான் கருத்து வேறுபாடுகள் குறித்து விரிவாக விவாதிக்க முடியும் என்றார்.
இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜாவும் இதே கருத்தை வலியுறுத்தி உள்ளார்.
பாஜகவின் கூட்டணி கட்சியான சிவசேனா ஆரம்பம் முதலே மசோதாவுக்கு எதிர்ப்பு தெரி வித்து வருகிறது. மக்களவையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் சிவ சேனா எம்.பி.க்கள் பங்கேற்க வில்லை. மாநிலங்களவையிலும் அந்தக் கட்சி இதே கொள்கையைக் கடைப்பிடிக்கும் என்று தெரிகிறது.
மத்திய அரசு நம்பிக்கை
மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஹைதராபாதில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:
விவசாயிகளின் நலன்களைப் பாதுகாக்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது. அதேநேரம் நாட்டின் முன்னேற்றத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
நிலம் கையகப்படுத்தும் மசோதா இந்த வாரத்திலேயே மாநிலங்களவையில் நிறைவேற்றப் படும் என்று நம்புகிறேன். மசோதா தொடர்பாக எதிர்க்கட்சிகளிடம் பேசி வருகிறோம். எங்களது முயற்சி வெற்றி பெறும்.
நிலக்கரி சுரங்க மசோதா, சுரங்கம்- கனிமவள மசோதா ஆகியவை தேர்வுக் குழுவின் பரிசீலனையில் உள்ளன. அவை குறித்து மார்ச் 18, 19 ஆகிய தேதிகளில் இறுதி அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படுகின்றன. அந்த மசோதாக்களும் மாநிலங்களவை யில் நிச்சயமாக நிறைவேறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT