Published : 27 Mar 2015 09:01 AM
Last Updated : 27 Mar 2015 09:01 AM
ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் 32 தனியார் நிறுவனங்கள் இணைக்கப்பட்டுள்ளன. ரூ.66.65 கோடி மதிப்பிலான மொத்த சொத்தில் சரிபாதி சொத்துமதிப்பு 32 தனியார் நிறுவனங்களின் மூலம் இவ்வழக்கில் இணைந்தவை தான்.
2014-ம் ஆண்டு தனியார் நிறுவனங் களின் சொத்துகளை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய போது, `சொத்துக் குவிப்பு வழக்கு பதிவு செய்த காலத்தில் இருந்து நிறுவனங்களின் சொத்துகள் வழக்கில் இணைக்கப்பட்டுள்ளது.அப்போதெல்லாம் விட்டுவிட்டு இப் போது சொத்துகளை விடுவிக்க கோருவது ஏன்? சென்னையில் விசா ரணை நடந்துகொண்டிருந்த போது தூங்கிக் கொண்டிருந்தீர்களா?'' எனக் கூறி அபராதம் விதித்தார் நீதிபதி குன்ஹா.
இது தொடர்பாக அரசு தரப்பில், “1991-ல் ஜெயலலிதா முதல்வராக பதவி ஏற்பதற்கு முன் ஜெயா பப்ளிகேஷன்ஸ், சசி எண்டர்பிரைசஸ் என்ற இரு தனியார் நிறுவனங்கள் மட்டுமே இருந்தன. அதில் ஜெயலலிதாவும் சசிகலாவும் முக்கிய பொறுப்புகளை வகித்தனர். ஜெயலலிதா முதல்வரான பிறகு 1991-1996 கால கட்டத்தில் 32 தனியார் நிறுவனங்கள் ஆரம்பிக்கப்பட்டன. இதில் சசிகலா, சுதாகரன், இளவரசி மற்றும் சசிகலாவின் உறவினர்கள் பலர் முக்கிய பொறுப்புகளை வகித்தனர்.
சசிகலா, சுதாகரன் நிர்வாக இயக்குநர் களாக இருந்த மெட்டல் கிங், மார்பிள் மார்வெல்ஸ் ஆகிய இரு நிறுவனங்கள் 1993-ல் பதிவு செய்யப்பட்டது. அதற்கு `ஃபார்ம்-1' படிவம் கூட சமர்ப்பிக்காமலே அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர். அதே ஆண்டில் புதிதாக தொடங்கப்பட்ட ஆஞ்ச நேயா பிரிண்ட்டர்ஸ் நிறுவனம் தமிழக அரசின் பாடநூல்களை அச்சிட்டு வந்தது. இந்த நிறுவனத்தை சசிகலாவின் சகோ தரர் சுந்தரவதனம் நிர்வகித்து வந்தார்.
1994 ஜனவரி 24-ம் தேதி அன்று ஒரே நாளில் ஜெ ஃபார்ம் ஹவுஸ், ஜெ.எஸ்.லீஸிங் & மெயிண்டனன்ஸ், ஜெ.எஸ்.ஹவுஸிங் டெவலப்மெண்ட், ஜெ ரியல் எஸ்டேட், ஜெ.கான்ட்ராக்ட்டர்ஸ் & பில்டர்ஸ், கிரீன் ஃபார்ம் ஹவுஸ் ஆகிய 6 தனியார் நிறுவனங்கள் தொடங்கப் பட்டன. இதில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூவரும் முக்கிய பொறுப்புகளை வகித்தனர். இதே போல 1995 பிப்ரவரி 2-ம் தேதி அன்று சசிகலா உள்ளிட்ட மூவரும் சேர்ந்து 10 புதிய நிறுவனங்களை தொடங்கினர்.
1994-ம் ஆண்டு ஜூன், ஜூலை,ஆகஸ்ட் ஆகிய மாதங்களில் லெக்ஸ் பிராப்பர்ட்டீஸ் டெவலப்மெண்ட், சிக்னோரா எண்டர்பிரைசஸ், ரிவர்வே அக்ரோ ஃபார்ம்ஸ், மெடோ அக்ரோ ஃபார்ம்ஸ், ராம்ராஜ் அக்ரோ மில்ஸ், இந்தோதோஹா கெமிக்கல்ஸ் உள்ளிட்ட 12 நிறுவனங்கள் புதிதாக தொடங்கப்பட்டன. இதிலும் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூவரும் இயக்குநர்களாக இருந்தனர்.
இவ்வாறு தொடங்கப்பட்ட 32 தனியார் நிறுவனங்களுக்காக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் 3000 ஏக்கர் வேளாண் நிலங்களும், சென்னையை சுற்றியுள்ள இடங்களில் 3 லட்சத்து 916 சதுர அடி நிலமும், கட்டிடங்களும், தொழிற்சாலைகளும்,வாகனங்களும் வாங்கப்பட்டுள்ளன. இந்த நிறுவனங்களுக்கிடையே ரூ.19.33 கோடி பண பரிவர்த்தனை நடைபெற்றது என்பதை வங்கி மேலாளர்கள் வித்யாசாகரும், அருணாசலமும் உறுதி செய்துள்ளனர்.
தனியார் நிறுவனங்களை பதிவு செய்தது தொடர்பாக அரசு அதிகாரிகள் ராதாகிருஷ்ணன், ராஜகோபாலன், வேலாயுதம், சொர்ணம் உள்ளிட்டோரும், ஐஏஎஸ் அதிகாரிகள் சோ.அய்யர், ஷீலா பாலகிருஷ்ணன் ஆகியோர் நீதிமன்றத்தில் அரசு தரப்பு சாட்சிகளாக சாட்சியம் அளித்துள்ளனர். இந்த நிறுவனங்களின் பெயரில் உள்ள அனைத்து சொத்துகளும் ஜெயலலிதாவுக்காக பினாமி சொத்துகளாக வாங்கி குவிக்கப்பட்டுள்ளன. இதற்கு சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூவரும் உடந்தையாக இருந்துள்ளனர்'' என குற்றம்சாட்டப்பட்டது.
ஜெயலலிதாவுக்கு தொடர்பில்லை
இதற்கு ஜெயலலிதா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.குமார், “ஜெயலலிதாவுக்கும் 32 தனியார் நிறுவனங்களுக்கும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தொடர்பில்லை. தனியார் நிறுவனங்களுக்கிடையே நடைபெற்ற பண பரிவர்த்தனைகள், சொத்துகள் தொடர்பான எதுவும் ஜெயலலிதாவுக்கு தெரியாது. தனியார் நிறுவனங்களுக்கும் இந்த வழக்குக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. ஜெயலலிதாவின் சொத்து மதிப்பை மிகைப்படுத்திக் காட்டவேண்டும் என்பதற்காக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை தனியார் நிறுவனங்களை இவ்வழக்கில் இணைத்துள்ளது.
ஜெயா பப்ளிகேஷன் நிறுவனத்தைப் பொறுத்தவரை 1991-ல் முதல்வர் ஆவதற்கு முன்பாகவே ஜெயலலிதா, சசிகலாவுக்கு ஜெனரல் பவர் ஆஃப் அட்டர்னி கொடுத்துவிட்டார்.
எனவே அந்த நிறுவனத்திலும், அதனுடன் நேரடி தொடர்பில் இருந்த நமது எம்ஜிஆர், சசி எண்டர்பிரசைஸ் ஆகிய நிறுவனங்களில் நடந்த எதுவும் ஜெயலலிதாவுக்குத் தெரியாது. அந்த நிறுவனத்தின் பணப் பரிவர்த்தனை, சொத்துகள் வாங்கியது என எதுவும் தெரியாது'' என வாதிட்டார்.
எப்படி ஏற்க முடியும்?
நீதிபதி குன்ஹா தனது தீர்ப்பில், “சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் தொடங்கிய 32 தனியார் நிறுவனங்களும் அவர்கள் ஜெயலலிதாவின் போயஸ்கார்டன் வீட்டில் குடியேறிய பிறகே முழுவீச்சில் இயங்கின. ஒரே வீட்டில் இருப்பவர்கள் வாங்கிக் குவிக்கும் சொத்துகளை தனக்குத் தெரியாது என ஜெயலலிதா சொல்வதை ஏற்க முடியாது. ஒரு மாநிலத்தின் முதல்வருக்கு தனது வீட்டில் இருக்கும் சகாக்களின் நடவடிக்கை பற்றி எதுவும் தெரியாது என்று சொல்வதை எப்படி ஏற்க முடியும்?
சசி எண்டர்பிரைசஸ் நிறுவனத்துக்கு ஜெயலலிதா ரூ.1 கோடி கொடுத்துள்ளார். மேலும் தனியார் நிறுவனங்கள் வாங்கிய வங்கிக் கடன்களுக்கு ஜெயலலிதா தனது பெயரில் ஷூயூரிட்டி வழங்கியுள்ளார். இதன்மூலம் நால்வரும் கூட்டாகச் சேர்ந்து, தமிழகம் முழுவதும் சொத்துகள் வாங்கியதை அறிந்துள்ளார்'' என கூறியுள்ளார்
குத்தகை வழங்கலாமா?
மேல்முறையீட்டு விசாரணையில் ஜெயலலிதா தரப்பு, “பொது ஊழியரான ஜெயலலிதா சசிகலா, சுதாகரன், இளவரசி பெயரில் முறைகேடாக சொத்து குவித்ததாக நீதிபதி குன்ஹா தீர்ப்பளித்துள்ளார்.
இது 1988-ல் திருத்தப்பட்ட பினாமி பரிவர்த்தனை சட்டத்துக்கு முற்றிலும் எதிரானது. இந்த சட்டத்தின்படி, ஒருவரின் ரத்த உறவோ, மனைவியோ, திருமணமாகாத மகளோ மட்டும் தான் பினாமியாக கருத முடியும். சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் ரத்த உறவுகள் அல்ல.
இதே போல சசிகலா உள்ளிட்டோர் சொத்துகள் வாங்க ஜெயலலிதா பணம் கொடுத்ததாக கூறுவதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. ஜெயலலிதாவின் வங்கி கணக்கில் இருந்து சசிகலா, சுதாகரன், இளவரசிக்கு ஒரு ரூபாய் கூட பணப்பரிவர்த்தனை நடைபெறவில்லை. இதில் இருந்து நால்வரும் ஜெயலலிதாவின் பினாமி இல்லை என தெரியவருகிறது.
ஜெயலலிதா உள்ளிட்ட நால்வர் மீதான குற்றச்சாட்டை அரசு தரப்பு தக்க ஆதாரத்துடன் நிரூபிக்காத போது நீதிபதி குன்ஹா எப்படி பினாமி என அறிவித்தார்? நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பை தள்ளுபடி செய்ய வேண்டும்'' என வாதிடப்பட்டது.
மற்ற மூவர் தரப்பில், “சசிகலா, சுதாகரன், இளவரசிக்கு தனியார் நிறுவனங்களின் மூலம் கோடிக்கணக்கில் வருமானம் கிடைத்தது. இதையெல்லாம் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை உள்நோக்கத்துடன் வருமானமாக ஏற்கவில்லை'' என வாதிட்டனர்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, “முதல்வரான ஜெயலலிதா தனது வளர்ப்பு மகனின் நிறுவனத்துக்கு அரசு பணியை குத்தகை கொடுப்பது சட்டப்படி நியாயமா? இது அதிகார துஷ்பிரயோகம் இல்லையா?'' என கேள்வி எழுப்பினார். அதற்கு ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்களால் பதில் சொல்ல முடியாமல் திணறியதை திமுக வழக்கறிஞர்கள் ரசித்தனர்.
-மேலும்..
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT