Published : 06 Mar 2015 08:59 AM
Last Updated : 06 Mar 2015 08:59 AM
கடந்த சில வாரங்களுக்கு முன்பு விடுப்பில் சென்ற காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, அடுத்த சில நாட்களில் பணிக்குத் திரும்புவார் என்று முன்னாள் மத்திய அமைச்சர் கமல்நாத் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. அதைத் தொடர்ந்து நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியது. ஆனால், இந்தக் கூட்டத் தொடரில் பங்கேற்காமல் ராகுல் காந்தி சில வாரங்களுக்கு விடுப்பில் செல்வதாக தகவல் வெளியானது. இதை பல்வேறு அரசியல் கட்சிகளும் குறை கூறி இருந்தன.
கட்சியை பலப்படுத்துவதற்கான புதிய உத்திகளை வகுப்பதற்காக கட்சிப் பணிகளிலிருந்து ராகுல் விலகியிருப்பதாகக் கூறப்பட்டது. அதேநேரம் கட்சி விவகாரங்களை கவனிப்பதற்கு சுதந்திரம் இல்லாததால் அவர் அதிருப்தி அடைந்துள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் விரைவில் அவருக்கு தலைவர் பதவி வழங்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் நாக்பூரை அடுத்துள்ள கல்மேஷ்வர் பகுதியில் உள்ள மேலாண்மை தொழில்நுட்ப கல்வி நிறுவன பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற கமல்நாத் செய்தியாளர்களிடம் கூறும்போது, “ராகுல் காந்தி இன்னும் 5 நாட்களில் கட்சிப் பணிக்கு திரும்புவார். கட்சித் தலைவர் பதவியை ராகுலிடம் ஒப்படைப்பது தொடர்பான பணிகள் தொடர்கின்றன. கட்சியை வழிநடத்தக்கூடிய திறமை ராகுலுக்கு இருக்கிறது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT