Published : 11 Mar 2015 08:47 AM
Last Updated : 11 Mar 2015 08:47 AM

நாடாளுமன்றத் துளிகள்: கருப்புப்பட்டியலில் 10 தொண்டு நிறுவனங்கள்

நேற்று மக்களவை மற்றும் மாநிலங்களவையில் பல்வேறு கேள்விகளுக்கு அமைச்சர்கள் நேரடியாகவும் எழுத்துப்பூர்வமாகவும் பதில் அளித்தனர். அவற்றில் சில பின்வருமாறு:

பாக். தீவிரவாத அமைப்புகள் மீது கவனம்

உள்துறை இணையமைச்சர் ஹரிபாய் பாரதிபாய் சவுத்ரி:

பாகிஸ்தானில் இருந்து செயல்படும் தீவிரவாதிகளின் முக்கிய இலக்காக இந்தியா நீடிக்கிறது. குறிப்பாக, லஷ்கர் இ தொய்பா, அதன் துணை அமைப்புகள், இந்தியன் முஜாகிதீன் ஆகிய அமைப்புகள் இந்தியாவைக் குறிவைத்து செயல்படுகின்றன

இதுவரை கைது செய்யப்பட்ட தீவிரவாதிகளிடம் புலனாய்வு அமைப்புகள் விசாரணை நடத்தியதில், இந்தியாவில் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ தங்குமிடம், பயிற்சி, நிதியுதவி போன்ற பல்வேறு வகைகளில் தீவிரவாதிகளுக்கு உதவி வருவது வெளிப்பட்டுள்ளது.

பாகிஸ்தானை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தீவிரவாதிகள் இந்திய-பாகிஸ்தான் மற்றும் இந்திய-நோபாள எல்லை வழியாக வெடிப்பொருட்கள், ஆயுதங்களைக் கொண்டு வருகின்றனர். அந்த அமைப்புகளை ஒடுக்குவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இந்தியா மேற்கொண்டு வருகிறது.

2011-14-ம் ஆண்டுகளில் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற 33 உளவு அலகுகள் செயலிழக்க வைக்கப்பட்டுள்ளன. ஒரு பாகிஸ்தான்வாசி உட்பட 50 உளவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவற்றில், ஓய்வு பெற்ற இந்திய அரசு ஊழியர் சிலரும் அடக்கம்.

சஞ்சய் தத் விவகாரத்தில் தலையிடவில்லை

உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு:

இந்தி நடிகர் சஞ்சய் தத் உட்பட எந்த ஒரு சிறைக் கைதியின் பரோல் நடவடிக்கையிலும் மத்திய அரசு தலையிடவில்லை. பரோல் நடவடிக்கை என்பது நீதிமன்றம் மற்றும் அந்தந்த மாநில அரசுகளின் விவகாரம். சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. அதனைக் குறைப்பதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துவருகிறது.

கருப்புப்பட்டியலில் 10 தொண்டு நிறுவனங்கள்

சமூக நீதித்துறை அமைச்சர் தாவார் சந்த்:

சமூக நலத்திட்டம் என்ற பெயரில் நிதியை தவறாகப் பயன்படுத்திய 87 தொண்டு நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் 10 தொண்டு நிறுவனங்கள் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக ஆந்திர மாநிலத்தில் 17 தொண்டு நிறுவனங்களுக்கும், கர்நாடகத்தில் 15 தொண்டு நிறுவனங்களுக்கும் விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தொண்டு நிறுவனங்கள் முறையாக இயங்குவதை உறுதி செய்வதற்காக திடீர் சோதனைகளை அதிகாரிகள் நடத்தி வருகின்றனர்.

கற்றல் குறைபாடு: ஆசிரியர்களுக்கு பி.எட். படிப்பு

சமூக நீதித்துறை அமைச்சர் தாவார் சந்த்:

கற்றல் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு உரிய முறையில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்காக மூன்று திறந்த நிலைப் பல்கலைக்கழகங்களில் சிறப்பு பி.எட். படிப்புகள் அறிமுகம் செய்யப்படுகின்றன.

இப்படிப்புகள் 2015-16-ம் கல்வியாண்டு முதல் அமலுக்கு வருகின்றன. இப்படிப்புகள் தொலைதூரக் கல்வி முறையில் கற்பிக்கப்படும். மத்தியப் பிரேதசம் போஜ் திறந்த நிலை பல்கலைக்கழம், கோடா வர்த்தமான மகாவீரர் திறந்தநிலைப் பல்கலைக்கழகம், ஹல்த்வானி உத்தராகண்ட் திறந்தநிலைப் பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்களில் இப்பாடம் தொடங்கப்பட்டுள்ளது. கற்றல் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு பயிற்றுவிக்கும் ஆசிரியர் பற்றாக்குறையைக் களைவதற்காக இப்படிப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.

டிஜிட்டல் மயமாகும் புத்தகங்கள்

தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரதோர்:

அனைத்து மொழிகளிலும் உள்ள தேசிய முக்கியத்துவம் வாய்ந்த புத்தகங்களை டிஜிட்டல்மயமாக்க திட்டமிட்டு வருகிறோம். இப்பணி மிகக் கடினமாக இருப்பதால் கடந்த 2 ஆண்டுகளாக மிக மெதுவாக நடைபெற்று வருகிறது. பணியைத் துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மத்திய-மாநில திட்டங்களில் மாறுதல்

நிதித்துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா:

14-வது நிதிக்குழு பரிந்துரைகளை ஏற்று, மத்திய-மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தும் 24 திட்டங்களில், திட்ட முதலீட்டை மாற்றாமல் அதேசமயம், மத்திய மாநில அரசுகளின் நிதிப் பங்களிப்புகளில் மாற்றம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. தற்போது செயல்பாட்டில் உள்ள 31 திட்டங்களுக்கு மத்திய அரசு முழு ஆதரவளிக்கும். 8 திட்டங்கள் நிறுத்தப்படும். நிதியை பகிர்ந்து கொள்ளும் 24 திட்டங்களில் மத்திய அரசின் 75 சதவீத நிதி பங்களிப்பு என்பது குறைக்கப்படும். மாநில அரசின் பங்களிப்பு 32 சதவீதமாக இருப்பதிலிருந்து 42 சதவீதமாக உயர்த்தப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x