Last Updated : 14 Mar, 2015 08:57 AM

 

Published : 14 Mar 2015 08:57 AM
Last Updated : 14 Mar 2015 08:57 AM

மம்தா வரைந்த ஓவியங்கள் விற்பனை: விளக்கம் கேட்கிறது சிபிஐ

மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவியுமான மம்தா பானர்ஜியின் ஓவியங்கள் ஏலத்தில் விடப்பட்டு திரட்டப்பட்ட தொகை தொடர்பாக விவரங்களை அளிக்கும்படி சிபிஐ அவருக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஓவியங்கள் வரைவதில் தேர்ந்தவர். அவர் வரைந்த ஓவியங்கள் அடிக்கடி காட்சிக்கும் ஏலத்துக்கும் வைக்கப்படும். அதன் மூலம் திரட்டப்படும் நிதி கட்சி நிதியில் சேர்க்கப்படும். பல்வேறு நற்பணிகளுக்கும் அவை செலவிடப்படும்.

மக்களவைத் தேர்தல் பிரச்சாரத் தின்போது, மேற்குவங்க மாநிலம் ராம்பூரில் பேசிய நரேந்திர மோடி, “மம்தாவின் ஓவியங்கள் வழக்கமாக 4 முதல் 15 லட்சம் ரூபாய்வரைதான் ஏலம் போகும். ஆனால், ஓர் ஓவியம் மட்டும் ரூ.1.84 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதன் பின்னணியில் உள்ள மர்மம் என்ன” எனக் கேள்வியெழுப்பியிருந்தார்.

மோடி குறிப்பிட்ட ஒவியத்தை, சாரதா நிதி நிறுவன அதிபர் சுகிப்தா சென் ரூ.1.84 கோடி கொடுத்து வாங்கியதாகக் கூறப்படுகிறது. இதே விவகாரத்தை மார்க்சிஸ்ட் கட்சியும் எழுப்பியது. ஆனால், இதுதொடர்பாக மம்தா நேரடியான பதிலைக் கூறாமல் தட்டிக்கழித்து வந்தார்.இந்நிலையில் சிபிஐ இவ்விவகாரத்தை மீண்டும் கையிலெடுத்துள்ளது.

சாரதா நிதி நிறுவன முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரித்து வருகிறது. இம்மோசடியில், மேற்கு வங்கத்தை ஆளும் மம்தா அரசுக்கு பங்கு இருப்பதாகக் கூறப்பட்ட புகார் தொடர்பாக, கட்சியின் பொதுச் செயலாளர் முகுல்ராய் அளித்த விளக்கத்தில் சிபிஐ திருப்தியடையவில்லை எனக் கூறப்படுகிறது. எனவே, ஓவியங்களின் விற்பனை விலை மற்றும் அவற்றை வாங்கியவர்களின் விவரத்தைக் கேட்டு, மம்தாவுக்கு சிபிஐ மின்னஞ்சல் அனுப்பியுள்ளது.

இதுதொடர்பாக ‘தி இந்து’விடம் சிபிஐ அதிகாரிகள் கூறியதாவது:

திரிணமூல் கட்சிக்கு தனியாக நிதி திரட்டத் தேவையில்லை. தனது ஓவியம் மற்றும் நூல் விற்பனைகளின் மூலமாகவே அதற்குரிய தொகை கிடைத்துவிடுவதாக மம்தா கூறிவந்தார். கடந்த 2012-13-ம் ஆண்டுக்கான கட்சி அறிக்கையில் ஓவியங்கள் ரூ.2.53 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், அதற்குப் பிந்தைய ஆண்டுகளில் ஓவிய விற்பனை மூலம் கிடைத்த நிதி குறித்த விவரங்கள் கட்சி ஆண்டறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. அதே சமயம் 2013-ம் ஆண்டு சாரதா நிதி நிறுவன அதிபர் மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். அப்போது எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் விளக்கம் கோரி மம்தாவுக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x