Published : 29 Mar 2015 09:49 AM
Last Updated : 29 Mar 2015 09:49 AM
பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட வேட்பாளர்களுக்கு குறைந்தபட்ச கல்வித் தகுதியை கட்டாயமாக்கும் மசோதா ராஜஸ்தான் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
புதிய மசோதாவின்படி வீடுகளில் கட்டாயம் கழிப்பறை இருக்கும் வேட்பாளர்கள் மட்டுமே தேர்தலில் போட்டியிட முடியும் என்றும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2013 டிசம்பரில் நடைபெற்ற ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று வசுந்தரா ராஜே முதல்வராகப் பொறுப்பேற்றார். இதைத் தொடர்ந்து உள்ளாட்சி அமைப்புகளில் சீர்திருத்த நடவடிக்கைகள் தொடங்கின.
சர்பஞ்ச் என்ற பஞ்சாயத்து தலைவர் பதவிக்குப் போட்டியிட குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு தேறியிருக்க வேண்டும், பழங்குடியின பகுதிகளில் மட்டும் வேட்பாளர்கள் 5-ம் வகுப்பு தேறியிருந்தால் போதுமானது, ஜில்லா பரிஷத் பதவிகளுக்குப் போட்டியிட பத்தாம் வகுப்பு தேறியிருக்க வேண்டும் என்று கல்வித் தகுதி நிர்ணயிக்கப்பட்டது.
இதுதொடர்பாக கடந்த உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாக 2014 டிசம்பர் 20-ம் தேதி அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. அப்போது பல்வேறு வேட்பாளர்கள் போலி கல்விச் சான்றிதழ்களை அளித்து தேர்தலில் போட்டியிட்டதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக மாநிலம் முழுவதும் 200-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
இந்நிலையில் அவசர சட்டத்துக்குப் பதிலாக ‘ராஜஸ்தான் பஞ்சாயத்து ராஜ் (திருத்த) மசோதா-2014’ வரையறுக்கப்பட்டு மாநில சட்டப்பேரவையில் அண்மையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா நேற்றுமுன்தினம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் வீடுகளில் கழிப்பறை உள்ள வேட்பாளர்கள் மட்டுமே உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட முடியும் என்றும் புதிய சட்டத்தில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இச்சட்டத்துக்கு எதிர்க்கட்சியான காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள் ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT