Published : 13 Mar 2015 03:29 PM
Last Updated : 13 Mar 2015 03:29 PM
மணமகன் போட்ட தப்புக்கணக்கால் மணப்பெண் ஒருவர் திருமணத்தை தடுத்து நிறுத்தினார்.
உத்தரப் பிரதேசத்தில், திருமண மேடையில் இருந்து மணப்பெண் ஒருவர் வெளிநடப்புச் செய்ததோடு திருமணத்தையும் நிறுத்தினார். திருமணம் தடைபட மணமகனின் தப்புக் கணக்கே காரணம் என பின்னர் தெரியவந்தது.
இது குறித்து போலீஸார் கூறும்போது, "கான்பூரில் உள்ள ரசூல்பாத் கிராமத்தில் புதன்கிழமை மாலை இச்சம்பவம் நடந்துள்ளது. மணமேடையில் அமர்ந்திருந்தபோது, மணமகனிடம் மணப்பெண் ஒரு சின்ன கேள்வி கேட்டிருக்கிறார். 15-ஐயும் 5-ஐயும் கூட்டினால் எவ்வளவு என கேட்டுள்ளார். ஆனால், மணமகன் அதற்குத் தவறாக பதில் கூறியுள்ளார். இதனையடுத்து மணமகள் திருமணத்தை நிறுத்தியுள்ளார்" என்றார்.
பொய்யே காரணம்
"மணமகன் நன்கு படித்திருப்பதாக அவரது தரப்பில் கூறப்பட்டது. ஆனால் ஒரு சிறிய கணக்குக்கு கூட அவரால் பதில் சொல்ல முடியவில்லை. இந்த கணக்குக்கு 1-ம் வகுப்பு குழந்தைகூட பதில் சொல்லிவிடும். படிப்பறிவில்லாததால் மணமகணை ஏற்க விருப்பமில்லை. இவ்விவகாரத்தில் மணமகன் வீட்டார் பொய்யுரைத்துள்ளனர். எனவே திருமணத்தை புறக்கணிக்கிறோம்" என்று மணமகளின் தந்தை மொஹர் சிங் கூறியுள்ளார்.
மற்றொரு சம்பவம்:
கடந்த மாதம் உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூர் கிராமத்தில் மணமேடையில் மயங்கி விழுந்த மணமகனுக்கு வலிப்பு ஏற்பட்டது. மணமகனுக்கு வலிப்பு நோய் இருப்பதை மாப்பிள்ளை வீட்டார் மறைத்திருந்தது அப்போதுதான் அம்பலமானது. இதனையடுத்து, வலிப்பு நோயை மறைத்ததால் திருமணத்தை நிறுத்தினார் மணப்பெண்.
இரண்டு மாதங்களில், இரண்டு வெவ்வேறு சம்பவங்களில் மணப்பெண்கள் திருமணத்தை நிறுத்திய சம்பவம் உ.பி.யில் பரபரப்பாக பேசப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT