Last Updated : 03 Feb, 2015 11:39 AM

 

Published : 03 Feb 2015 11:39 AM
Last Updated : 03 Feb 2015 11:39 AM

டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் தமிழக தலைவர்கள் பிரச்சாரம்: தமிழர்கள் யாரும் போட்டியிடவில்லை

டெல்லி சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தில் போட்டியிடும் பல்வேறு கட்சிகளின் சார்பில் வேட்பாளராக ஒரு தமிழரும் இல்லை. எனினும், தமிழகத்தை சேர்ந்த பலர் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

டெல்லியில் உத்தரப்பிரதேசம், பிஹார், பஞ்சாப் மற்றும் ராஜஸ்தானுக்கு அடுத்த எண்ணிக்கையில் தமிழர்கள் அதிகம். இங்கு சுமார் 18 லட்சம் தமிழர்கள் வாழ்வதாகக் கூறப்பட்டாலும், அரசு அல்லது எந்த ஒரு தனியார் அமைப்புகளிடமும் இதுதொடர்பான புள்ளிவிவரம் இல்லை.

டெல்லியில் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பல்வேறு கட்சிகளில் முக்கியப் பொறுப்பை ஏற்றிருப்பதுடன், தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பையும் பெற்றுள்ளனர். பஞ்சாபை சேர்ந்த கிரண்பேடி பாஜகவின் முதல்வர் வேட்பாளராகவும், ஹரியானாவைச் சேர்ந்த அர்விந்த் கேஜ்ரிவால் முதல்வர் வேட்பாளராகவும் போட்டியிடுகின்றனர். ஆனால், தமிழர்களில் யாரும் எந்தத்தொகுதியிலும் போட்டியிட வில்லை.

இது குறித்து தி இந்துவிடம் டெல்லிவாழ் தமிழரும் பல்வேறு அரசியல் கட்சிகளில் முக்கிய பொறுப்பு வகித்தவருமான புதேரி தானப்பன் கூறும்போது, “இங்கு வாழும் தமிழர்கள் இடையே தமிழ்நாட்டின் தலைவர்கள் வந்து செய்யும் பிரச்சாரங்களுக்கு நல்ல பலன் கிடைக்கிறது. டெல்லியில் அரசியல் கட்சிகள் தமிழர்களின் பணியை பயன்படுத்திக் கொள்கிறதே தவிர, போட்டியிட வாய்ப்பளிப்பதில்லை. இங்கு வாழும் மக்கள் எந்த மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்பது கணக்கெடுக்கப்பட வேண்டும். மக்கள் தொகைக்கு ஏற்ப, மாநில வாரியான பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும்” என்றார்.

தானப்பன், அயலகத் தமிழர் முன்னேற்றக் கழகம் என டெல்லி தமிழர்களுக்காக முதன்முறையாக ஒரு கட்சியைத் தொடங்கி, சக்கூர்புர் தொகுதியில் போட்டியிட்டார். இவர் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில தலைவராகவும் இருந்து டெல்லி மாநகராட்சியின் ஏழு வார்டுகளில் முதன் முறையாக தமிழர்களை போட்டியிட வைத்தார். பிறகு தேமுதிகவில் இணைந்து அவருடன் சேர்த்து 11 பேர் கடந்த வருடம் நடந்த தேர்தலில் போட்டியிட்டனர். இவை எதிலும் தமிழர்களால் வெற்றி பெறவில்லை.

கடந்தமுறை போட்டியிட்ட தேமுதிகவும் இந்த முறை விலகிக் கொண்டது.

தேசிய கட்சிகளான காங்கிரஸ் சார்பில் நாகராஜன் என்பவருக்கும், பாஜகவில் முத்துசாமி என்பவருக்கு இரண்டு முறையும் கவுன்சிலராகும் வாய்ப்பு கிடைத்தது.

வரும் 7-ம் தேதி நடைபெற விருக்கும் தேர்தலையொட்டி, மொத்தமுள்ள 70 தொகுதிகளில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் 28 தொகுதிகளில் காங்கிரஸுக்காக, தமிழ்நாடு மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், செய்தி தொடர்பாளர் குஷ்பு, பாஜக சார்பில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் மாநில தலைவர் இல.கணேசன், தேசிய நிர்வாக உறுப்பினர் ஹெச்.ராஜா, ஆம் ஆத்மி சார்பில் அதன் தமிழக ஒருங்கிணைப்பாளர் கிறிஸ்டினாசாமி ஆகியோர் உட்பட ஏராளமானவர்கள் தமிழகத்தில் இருந்து வந்து பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

தமிழர்கள் தரப்பில் யாரும் எம்.பி. எம்.எல்.ஏக்களாக இல்லாததால், வாக்குரிமை மற்றும் ரேஷன் அட்டை கிடைக்காதது போன்ற டெல்லி வாழ் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x