Last Updated : 24 Feb, 2015 02:48 PM

 

Published : 24 Feb 2015 02:48 PM
Last Updated : 24 Feb 2015 02:48 PM

மக்கள் ஜனநாயக கட்சி - பாஜக கூட்டணி ஆட்சி: காஷ்மீர் புதிய முதல்வராக முப்தி முகமது மார்ச் 1-ல் பதவியேற்பு

ஜம்மு காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சி - பாஜக கூட்டணி ஆட்சி மார்ச் 1-ல் பதவியேற்கிறது. மஜக மூத்த தலைவர் முப்தி முகம்மது சையது முதல்வராகப் பொறுப்பேற்க உள்ளார்.

இதுகுறித்து மக்கள் ஜனநாயக கட்சி வட்டாரங்கள் ஜம்முவில் நேற்று கூறும்போது, “புதிய முதல்வராக முப்தி முகமது சையது மார்ச் 1-ம் தேதி பதவியேற்பார். 6 ஆண்டுகளுக்கும் அவரே முதல்வராக நீடிப்பார். ஜம்மு பல்கலைக்கழகத்தில் உள்ள ஜொரவார் சிங் நினைவு கலையரங்கில் பதவியேற்பு விழா நடைபெறும்” என்று தெரிவித்தன.

அமித் ஷா- மெகபூபா சந்திப்பு

பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவை மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மெகபூப் முப்தி டெல்லியில் நேற்று சந்தித்தார். அப்போது மக்கள் ஜனநாயக கட்சி, பாஜக கூட்டணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

அமித் ஷா நிருபர்களிடம் கூறியபோது, வெகுவிரைவில் பிரதமர் நரேந்திர மோடியை, முப்தி முகமது சையது சந்திக்க உள்ளார் என்று தெரிவித்தார்.

மெகபூபா முப்தி நிருபர்களிடம் கூறியபோது, ஆட்சி, அதிகாரத்துக்காக கூட்டணி அமைக்கவில்லை. காஷ்மீர் மக்களின் நன்மை கருதியே கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

மக்கள் ஜனநாயக கட்சி மூத்த தலைவர் முப்தி முகமது சையது, ஜம்முவில் நிருபர்களிடம் கூறியதாவது: 370-வது சட்டப்பிரிவு, ஆயுதப்படை சட்டப்பிரிவில் எழுந்த முரண்பாடுகள் களையப்பட்டுள்ளன. ஆட்சி நடத்துவது தொடர்பாக குறைந்தபட்ச செயல்திட்டம் வரையறுக் கப்பட்டுள்ளது. புதிய கூட்டணி அரசு பதவியேற்பது மூலம் ஜம்மு மற்றும் காஷ்மீர் பள்ளத்தாக்கு இடையே நிலவும் கருத்து வேறுபாடுகள் மறையும் என்று தெரிவித்தார்.

காஷ்மீர் அரசு பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 87 உறுப் பினர்கள் கொண்ட ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைக்கு அண்மையில் நடை பெற்ற தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

மக்கள் ஜனநாயக கட்சிக்கு 28 உறுப்பினர்களும், பாஜகவுக்கு 25, தேசிய மாநாட்டுக் கட்சிக்கு 15, காங்கிரஸுக்கு 12 உறுப்பினர்களும் உள்ளனர். ஆட்சியமைக்க 44 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.

தேர்தலுக்குப் பிறகு எந்தக் கட்சி யும் ஆட்சியமைக்க உரிமை கோராத தால் ஜனவரி 8-ம் தேதி முதல் மாநிலத்தில் ஆளுநர் ஆட்சி நடை பெற்று வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x