Published : 23 Feb 2015 03:46 PM
Last Updated : 23 Feb 2015 03:46 PM
பிப்ரவரி மாத முதல் வாரத்தில் உ.பி. மாநிலத்தில் உள்ள அம்ரோஹா மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ஹர்பால், நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
52 வயதான ஹர்பாலின் தற்கொலை பற்றி அவரது மகன் சத்பால் கூறும் போது, "டிராக்டர் வாங்குவதற்காக உள்ளூரில் வாங்கிய ரூ.3.27 லட்சம் கடனை திருப்பிக் கொடுக்க முடியாமல் போனதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார்.
விவசாயிகளிடமிருந்து வாங்கும் கரும்புகளுக்கான தொகையை சர்க்கரை ஆலைகள் திருப்பிக் கொடுக்க 2 ஆண்டுகள் எடுத்துக் கொள்கின்றனர். எனவே, உள்ளூர் வெல்ல உற்பத்தியாளர்களிடம் கரும்பை குறைந்த விலைக்கு விற்கும் நிர்பந்தத்துக்கு தள்ளப்பட்டுள்ளோம்.” என்றார்.
இதே போல், அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள சன்புரா கிராமத்தைச் சேர்ந்த விவசாயி அனில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு தற்போது மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருகிறார். இவருக்கு உள்ளூர் சர்க்கரை ஆலை இன்னமும் ரூ.1 லட்சம் தொகையைத் தர வேண்டியுள்ளது.
சர்க்கரை ஆலைகளிலிருந்து சுமார் 1 லட்சம் கரும்பு விவசாயிகளுக்கு வர வேண்டிய தொகை ரூ.8,028 கோடி என்று கிசான் ஜக்ரிதி மன்ச் உறுப்பினர் சுதிர் தன்வர் என்பவர் கூறுகிறார்.
அவர் மேலும் கூறும் போது, “மாநிலத்தில் உள்ள சர்க்கரை ஆலைகளின் நிலைமைகளை இது பறைசாற்றுகிறது, விவசாயிகளுக்குச் சேர வேண்டிய நிலுவைத் தொகை, அதனால் ஏற்படும் தற்கொலைகள் ஆகியவை அதன் ஒரு பகுதியே.” என்றார்.
ஆனால், மாநில கரும்பு வளர்ச்சித் துறை முதன்மைச் செயலர் ராகுல் பட்நாகர் இதனை மறுக்கிறார், “கடந்த 2 ஆண்டுகளாக சர்க்கரை ஆலைகள் பெரும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது, எனவே விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டிய நிலுவைத் தொகையினால் தற்கொலைகள் நடக்கிறது என்பதை ஏற்க முடியவில்லை. கரும்பு என்பதே லாபம் தரும் ஒரு சாகுபடியாக இருக்கவில்லை என்பதே உண்மை” என்கிறார்.
சர்க்கரை விலைகள் குறைவாகிக் கொண்டே வருவதால் தங்களால் விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டிய தொகையினைக் கொடுக்க முடியவில்லை என்ரு சர்க்கரை ஆலை உரிமையாளர்கள் கூறுகின்றனர்.
கடந்த 3 ஆண்டுகளாக உ.பி. அரசு நிர்ணயித்த கரும்பு கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.280 ஆகும். இது நாட்டில் மற்ற மாநிலங்கள் நிர்ணயிக்கும் அடிப்படை விலையை விட அதிகமானது என்று சர்க்கரை ஆலை உரிமையாளர்கள் அமைப்பு கூறுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT