Published : 18 Feb 2015 09:42 AM
Last Updated : 18 Feb 2015 09:42 AM
பிஹார் சட்டப்பேரவையில் வரும் 20-ம் தேதி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில், எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் உட்பட தனது ஆதரவாளர்களுடன் முதல்வர் ஜிதன் ராம் மாஞ்சி நேற்று தீவிர ஆலோசனை நடத்தினார்.
முன்னதாக டெல்லியிலிருந்து பாட்னா திரும்பிய மாஞ்சி, தான் பங்கேற்க இருந்த அரசு நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்து செய்தார். பேட்டி காண வந்திருந்த பத்திரிகையாளர்களை சந்திக்காமல் நேராக அரசு இல்லத்துக்கு சென்றார். அரசு நிகழ்ச்சிகள் மட்டுமல்லாமல் ககாரியா பகுதிக்குச் செல்ல இருந்ததையும் அவர் ரத்து செய்தார். இந்த தகவலை முதல்வர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.
விமான நிலையத்தில் மாஞ்சியை வரவேற்ற மாநில கலை மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் வினய் பிஹாரி செய்தியாளர்களிடம் கூறும்போது, “20-ம் தேதி நடைபெறவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. டெல்லியில் பாஜக தலைவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வ மாக இருந்தது” என்றார்.
எனினும் நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து பாஜக தரப்பில் இதுவரை எந்த முடிவும் அறிவிக்கப்படவில்லை.
ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் அதிருப்தி பிரிவு தலைவரான ஞானேந்திர சிங்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசு வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
ஞானேந்திர சிங் மற்றும் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்பி ஷபீல் அலி ஆகியோர் மாஞ்சியை நேற்று அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினர். “அடுத்த 24 மணி நேரத்தில் மாநிலத்தில் நிலைமை மாறும்” என்றார் அலி.
முதல்வரை தாக்கப் போவதாக சமீபத்தில் மிரட்டல் விடுத்த நிதிஷ் குமாருக்கு நெருக்கமான எம்எல்ஏ ஆனந்த் சிங் மீது நடவடிக்கை எடுப்பது பற்றி சட்ட வல்லுநர்களுடன் மாஞ்சி ஆலோசனை நடத்தியதாகவும் வினய் பிஹாரி தெரிவித்தார்.
7 அமைச்சர்கள் கட்சியிலிருந்து நீக்கம்
பிஹாரில் முதல்வர் ஜிதன் ராம் மாஞ்சியின் அமைச்சரவையில் அமைச்சர்களாக நீடித்த ஐக்கிய ஜனதா தள கட்சியைச் சேர்ந்த 7 பேர், அக்கட்சியில் இருந்து நேற்று நீக்கப்பட்டுள்ளனர்.
நரேந்திர சிங், பிரிஷென் படேல், ஷாகித் அலி கான், சாம்ராட் சவுத்ரி, நிதிஷ் மிஸ்ரா, மஹாசந்திர பிரசாத் சிங் மற்றும் பீம் சிங் ஆகியோர் அந்த 7 பேர் ஆவர்.
இவர்கள் அனைவரும் கட்சியின் தேசியத் தலைவர் சரத் யாதவிடம் இருந்து அனுமதி பெற்ற பிறகு நீக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் உத்தரவை மதித்து நடக்காததால் இவர்கள் நீக்கப்பட்டிருப்பதாகக் காரணம் கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே, முதல்வர் ஜிதன் ராம் மாஞ்சி அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT