Published : 18 Feb 2015 09:34 PM
Last Updated : 18 Feb 2015 09:34 PM

நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கு: மதுகோடா உட்பட 8 பேருக்கு ஜாமீன்

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் வழக்கில் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடா, மத்திய நிலக்கரித் துறை முன்னாள் செயலாளர் எச்.சி.குப்தா, ஜார்க்கண்ட் முன்னாள் தலைமைச் செயலாளர் அசோக்குமார் பாசு உள்பட 8 பேருக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கியது.

சிறப்பு நீதிபதி பரத் பராஷர் இதற்கான உத்தரவை பிறப்பித்தார். இதையடுத்து வழக்கு விசாரணையை மார்ச் 4-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

முன்னதாக, இவர்களின் ஜாமீன் மனுவுக்கு சிபிஐ எதிர்ப்பு தெரிவித்தது. சிபிஐ வழக்கறிஞர் வி.கே.சர்மா வாதிடும்போது, “ஜார்க்கண்ட் மாநிலத்தின் ரஜாரா வடக்கு நிலக்கரி சுரங்கம், வினி அயர்ன் அண்ட் ஸ்டீல் உத்யோக் நிறுவனத்துக்கு (விஐஎஸ்யுஎல்) ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் அந்த நிறுவனம் பலனடையும் வகையில், இவர்கள் சதியாலோசனை மற்றும் தங்கள் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியுள்ளனர்.

விண்ணப்பங்களை தெரிவு செய்யும் குழுவுக்கு அப்போது தலைவராக இருந்த குப்தா, பிரதமர் அலுவலகத்தை தவறாக வழிநடத்தியுள்ளார். அரசியல் செல்வாக்குள்ள இவர்களுக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைக்கக்கூடும்” என்றார்.

மதுகோடா, குப்தா, பாசு தவிர வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அரசு ஊழியர்கள் பிபின் பிகாரி சிங், வசந்த்குமார் பட்டாச்சார்யா, விஐஎஸ்யுஎல் இயக்குநர் வைபவ் துல்சியான், கணக்கு தணிக்கையாளர் நவீன் குமார் துல்சியான், மதுகோடாவின் உதவியாளர் விஜய் ஜோஷி ஆகியோரும் நேற்று நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

இவர்களுக்கு எதிராக சம்மன் வழங்கப்பட்டதை தொடர்ந்து, இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகி, தனித்தனியே ஜாமீன் மனு தாக்கல் செய்தனர். இவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், “வழக்கு விசாரணைக்கு ஒத்துழைத்து வருவதால் இவர்களை நீதிமன்ற காவலில் வைக்கவேண்டிய தேவையில்லை” என்று வாதிட்டனர்.

இந்நிலையில் நேற்று பிற்பகல் 8 பேருக்கும் ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x