Published : 26 Feb 2015 09:01 AM
Last Updated : 26 Feb 2015 09:01 AM
நேற்று நடைபெற்ற நாடாளுமன்றத்தின் அவை நடவடிக்கைகளின்போது, இரு அவைகளிலும் பல்வேறு கேள்விகளுக்கு அமைச்சர்கள் எழுத்துப்பூர்வமாகவும் நேரடியாகவும் பதில் அளித்தனர். அவற்றில் சில பின்வருமாறு.
விண்வெளி அறிவியலில் ஜாம்பவான்
அறிவியல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) ஜிதேந்திர சிங்: விண்வெளித் துறையில் இந்தியா அசுர வளர்ச்சி பெற்றுள்ளது. விண்வெளி அறிவியலில் நாம் ஏற்கெனவே உலகின் வல்லரசு நாடுகளுள் ஒன்றாகிவிட்டோம். இத்துறையில் பல நாடுகளைவிட நாம் முன்னணியில் உள்ளோம். 11 தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள், 12 புவி கண்காணிப்பு செயற்கைக் கோள்கள், 3 வழிகாட்டு செயற்கைக்கோள்கள், ஒரு செவ்வாய் சுற்றுப்பாதை திட்டம் ஆகியவை தற்போது செயல்பாட்டில் உள்ளன. வர்த்தக ரீதியிலான செயற்கைக்கோள் ஏவுதலிலும் வெற்றிகரமாக கால்பதித்துள்ளோம்.
31,000 தொண்டு நிறுவனத்துக்கு நோட்டீஸ்
உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு: வெளிநாட்டு நிதி பங்களிப்பு தொடர்பாக தங்களது ஆண்டு வருமானக் கணக்கைத் தாக்கல் செய்யாத 31,000 தொண்டு நிறுவனங்களுக்கு அரசு விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 2006 முதல் 2009-ம் ஆண்டு வரையிலான மூன்று நிதியாண்டுகளில் வருமானக் கணக்கை தாக்கல் செய்யாத 21,493 தொண்டு நிறுவனங்களுக்கு 2011-12-ம் நிதியாண்டில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 2009-10, 2011-12-ம் நிதியாண்டுகளுக்கு கணக்கு தாக்கல் செய்யாத 10,343 தொண்டு நிறுவனங்களுக்கு 2014-ம் ஆண்டில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
புலனாய்வுத் துரை அறிக்கையின்படி, டியோசீசன்-தூத்துக்குடி, கிழக்குக் கடற்கரை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அறக்கட்டளை- தூத்துக்குடி, மேம்பாடு மற்றும் சமூக பிரச்சினைகளுக்கான மையம்- மதுரை, கிரீன்பீஸ் இந்தியா- சென்னை ஆகிய தொண்டு நிறுவனங்களின் வெளிநாட்டு பங்களிப்பு உரிமம் ரத்து செய்யப்பட்டு, வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
6.55 கோடி குடிசைவாசிகள்
நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு: மொத்த குடிசைப் பகுதிகளில் பெருநகரங்களில் மட்டும் 38 சதவீதம் அமைந்துள்ளன. 2001-ல் 5.23 கோடியாக இருந்த குடிசைவாழ் மக்கள்தொகை தற்போது 6.55 கோடியாக அதிகரித்துள்ளது. அரசுத் துறைகளுக்கு இடையே உள்ள மாற்றுக் கருத்துகள் காரணமாக பாதுகாப்பு மற்றும் ரயில்வே துறைக்குச் சொந்தமான நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் சிரமம் உள்ளது. அதேசமயம் தங்கள் நிலத்தை ஆக்கிரமிப்பாளர்களுக்கு விட்டுக்கொடுக்க அரசுத் துறைகள் ஒப்புக்கொள்வதில்லை.
99 வெளிநாடு வாழ் இந்தியர்கள் பலி
வெளிநாடு வாழ் இந்தியர்கள் விவகாரத்துறை இணையமைச்சர் வி.கே.சிங்: உலகம் முழுவதும் வாழும் வெளிநாடு வாழ் இந்தியர்களில் 99 பேர் கடந்த மூன்றாண்டுகளில் தீவிரவாதத் தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளனர்.
இராக்கில் 86 வெளிநாடு வாழ் இந்தியர்களும், கென்யாவில் 10 பேரும், ஏமனில் 3 பேரும் கடந்த 3 ஆண்டுகளில் தீவிரவாதத்துக்குப் பலியாகியுள்ளனர்.
காஷ்மீர் பண்டிட்டுகளுடன் பேச்சு
உள்துறை இணையமைச்சர் ஹரிபாய் பாரதிபாய் சவுத்ரி: காஷ்மீரில் பண்டிட்டுகளை மீண்டும் குடியமர்த்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அவர்களுக்காக 3,000 அரசுப் பணிகள், தங்குமிடங்கள் ஏற்படுத்தப்படும். மாநில அரசு ரூ.5,820 கோடியில் ஒரு திட்ட கருத்துருவை அனுப்பி வைத்துள்ளது. காஷ்மீர் பள்ளத்தாக்கில், மறு குடியமர்வு செய்வதற்கான உரிய இடத்தைத் தேர்வு செய்யும்படி மாநில அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
ஆர்டிஐ: 38,000 மேல்முறையீடுகள்
பணியாளர் நலத்துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங்: மத்திய தகவல் ஆணையத்தில் கடந்த 17-ம் தேதி நிலவரப்படி 2-வது முறையாக மேல்முறையீடு செய்யப்பட்ட 37,935 மனுக்கள் நிலுவையில் உள்ளன. கால அவகாசம் குறைவாக இருப்பதால்தான், இவ்வளவு மனுக்கள் தேங்குகின்றன. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி முதல் முறையீட்டுக்கு 30 நாட்களுக்குள் பதிலளிப்பது கட்டாயம். 2-வது முறையீட்டுக்கு பதில் அளிக்க கால நிர்ணயம் செய்யப்படவில்லை.
அரசு ஊழியர் வேலை நேரம் மாற்றமில்லை
பணியாளர் நலத்துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங்: அரசு ஊழியர்களின் பணி நேரம் காலை 9 முதல் மாலை 5.30 மணி வரையாக உள்ளது. இந்த நேரத்தை விட பலர் கூடுதலாக வேலை செய்ய வேண்டியிருக்கிறது. பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறை அறிமுகப்படுத்தப்பட்ட பின், கூடுதலாக 20 நிமிடங்கள் பணி புரிகின்றனர். இவர்களுக்கு பணி நேரத்தை வசதிக்கேற்ப மாற்றிக் கொள்ளும் திட்டத்தை அமல்படுத்தும் முடிவை அரசு எடுக்கவில்லை.
கட்டுக்குள் நக்ஸல் தீவிரவாதம்
உள்துறை இணையமைச்சர் ஹரிபாய் பாரதிபாய் சவுத்ரி: கடந்த நான்கு ஆண்டுகளில் நக்ஸல் தீவிரவாதம் குறிப்பிடத்தக்க வகையில் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இடதுசாரி நக்ஸல் வன்முறையால் 2011-ம் ஆண்டில் 1,760 வன்முறைச் சம்பவங்களும், 611 உயிர்ப்பலிகளும் பதிவாகின. 2012-ல் 1,145 வன்முறைகளும், 415 உயிர்ப்பலிகளும் ஏற்பட்டன. 2013-ம் ஆண்டில் 1,136 வன்முறைச் சம்பவங்களும் 397 உயிர்ப்பலிகளும் ஏற்பட்டுள்ளன. 2014-ம் ஆண்டு 1,090 வன்முறைச் சம்பவங்களும், 309 உயிர்ப்பலிகளும் ஏற்பட்டுள்ளன. நக்ஸல் பாதிப்புக்கு உள்ளான பகுதிகளில் அரசு ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
ஆவண திருட்டு: விவாதத்துக்குத் தயார்
நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி: சில அமைச்சகங்களில் முக்கிய ஆவணங்கள் திருடப்பட்டுள்ளன. இதில் பெருநிறுவனங்கள் சம்பந்தப்பட்டுள்ளன. இதுதொடர்பாக மட்டுமின்றி எந்தவொரு விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்தவும் அரசு தயாராக உள்ளது.
370-வது சட்டப்பிரிவு நீக்கப்படமாட்டாது
உள்துறை இணையமைச்சர் ஹரிபாய் பாரதிபாய் சவுத்ரி: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 370-வது தற்போதைய நிலையிலேயே தொடரும். அது நீக்கப்பட மாட்டாது. பிற்காலத்தில் ஜம்மு-காஷ்மீர் மாநில அரசின் இசைவுடன் அம்மாநிலம் முற்றிலுமாக இணைக்கப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT