Published : 20 Apr 2014 12:39 PM
Last Updated : 20 Apr 2014 12:39 PM

ஜும்மா மசூதி மீதான தாக்குதல் யாசின் பட்கல் மீது குற்றப்பத்திரிகை

டெல்லியில் ஜும்மா மசூதி மீது 2010-ம் ஆண்டு செப்டம்பரில் நடந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக இந்திய முஜாஹிதீன் இயக்கத்தின் இணை நிறுவனர் யாசின் பட்கல் அவரது கூட்டாளி அசாதுல்லா அக்தர் ஆகியோர் மீது டெல்லி போலீஸார் சனிக் கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

ஜும்மா மசூதி மீது நடந்த தாக்குதல் சம்பவத்தில் தைவான் நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் காயம் அடைந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக இந்திய முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த இந்த இருவர் மீதும் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் கூடுதல் செஷன்ஸ் நீதிபதி தயா பிரகாஷிடம் இறுதி குற்றப் பத்திரிகையை டெல்லி காவல்துறை சிறப்புப் பிரிவு தாக்கல் செய்தது.

டெல்லியில் 2010-ல் காமன் வெல்த் போட்டி தொடங்கிய போது அதற்கு முன்னதாக இந்த தாக்குதலை நடத்தும்படி பாகிஸ் தானைச் சேர்ந்த விரோதிகள் இந்திய முஜாஹிதீன் இணை நிறுவனர் யாசின் பட்கலுக்கு உத்தரவிட்டனர்.

காமன்வெல்த் போட்டியை நடத்தும் இந்தியா இதற்கு தகுதியில்லாத நாடு என்கிற கண்ணோட்டத்தை ஏற்படுத்திடவும், இந்த போட்டியில் வெளிநாடுகள் கலந்து கொள்வதை தடுப்பதுமே இந்த சதித் திட்டத்தின் நோக்கம். இதை நிறைவேற்றும் விதமாக யாசின் கார்பைடு ரக துப்பாக்கியையும் கைத் துப்பாக் கியையும் தருவித்தார். அதன்படி முதல்திட்டம் பஹர்கஞ்சில் உள்ள ஜெர்மன் பேக்கரியில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை குறிவைத்து தாக்குவதாகும்.

2010-ம் ஆண்டின் மத்தியில் (குற்றம் சாட்டப்பட்ட) கதீல் சிதிக்கி, கார்பைடு துப்பாக்கி தற்செயலாக வெடித்ததில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் ஜெர்மன் பேக்கரியை தாக்கும் திட்டம் முறிந்து போனது. புணே எரவாடா சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் 2012-ல் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இதைத் தொடர்நது யாசின் பட்கல் ஜும்மா மசூதியில் தாக்குதல் நடத்த திட்டமிட்டார். இதன்படி 2010 செப்டம்பர் 19-ல் மசூதியின் 3-ம் நம்பர் வாயிலின் அருகே பஸ்ஸிலிருந்து சுற்றுலா பயணிகள் இறங்கியபோது இந்திய முஜாஹிதீன்கள் துப்பாக்கியால் சுட்டனர்.

ஜும்மா மசூதியின் வெளியே காரில் குக்கர் வெடி குண்டை பட்கல் வைத்தார். பஸ் மீதான துப்பாக்கித் தாக்குதலுக்குப் பிறகு லேசான குண்டுவெடிப்பும் நிகழ்ந்தது என்று குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குற்றப்பத்திரிகை பரிசீலனை ஏப்ரல் 30-ம் தேதி மேற் கொள்ளப்படும் என நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 28-ம் தேதி இந்திய-நேபாள எல்லையில் பட்கல், அக்தர் இருவரையும் தேசிய புலனாய்வு அமைப்பினர் கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x