Last Updated : 07 Feb, 2015 10:07 AM

 

Published : 07 Feb 2015 10:07 AM
Last Updated : 07 Feb 2015 10:07 AM

ஷாயி இமாம் ஆதரவை ஏற்க அர்விந்த் கேஜ்ரிவால் மறுப்பு

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு ஜும்மா மசூதி ஷாயி இமாம் அகமது புகாரி அளித்த ஆதரவை கேஜ்ரிவால் ஏற்க மறுத்துவிட்டார்.

டெல்லி சட்டப்பேரவையின் 70 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. இதில் பாஜக, ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சிகளிடையே மும்முனை போட்டி நடைபெறுகிறது.

இந்நிலையில் டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் முஸ்லிம்கள் ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்று ஜும்மா மசூதியின் ஷாயி இமாமான அகமது புகாரி கேட்டுக் கொண்டார். `மதவாத அரசியல்’ எனக் கூறி அவரது ஆதரவை அக்கட்சியின் முதல்வர் வேட்பாளரான அர்விந்த் கேஜ்ரிவால் ஏற்க மறுத்துள்ளார்.

இது குறித்து ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சஞ்சய்சிங் கூறியபோது, `அனைத்து தரப்பையும் சேர்ந்த மக்கள் எங்கள் கட்சிக்கு வாக்களிப்பார்கள். அகமது புகாரியின் சாதி, மத அடிப்படையிலான அரசியல் கொள்கைகளில் எங்கள் கட்சிக்கு ஒப்புதல் இல்லை. எனவே அவரது ஆதரவு எங்களுக்கு தேவை இல்லை’ எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக அகமது புகாரி விடுத்த அறிக்கையில், `நம் நாடு சிக்கியுள்ள மதவாத அபாயத்தில், முஸ்லிம்கள் மதவாதிகளால் குறி வைக்கப்பட்டுள்ளனர். இந்த பிரிவினை அரசியலில் இருந்து நாட்டை காப்பாற்ற மக்கள் ஆம் ஆத்மிக்கு ஆதரவளித்து வாக்களிக்க வேண்டும். முஸ்லிம்களின் பாதுகாப்பு என்பது நாட்டில் நிலவும் மதநல்லிணக்கத்தை நம்பி உள்ளது. டெல்லியில் நேர்மையான மதநல்லிணக்க அரசை அமைக்க ஆம் ஆத்மி கட்சிக்கு உதவும்படி கேட்டுக் கொள்கிறேன்’ எனக் கூறி இருந்தார்.

டெல்லியை ஆண்ட முகலாய பேரரசர் ஷாஜஹானால் கட்டப்பட்ட ஜும்மா மசூதியின் ஷாயி இமாமாக இருக்கும் அகமது புகாரி, மதரீதியாக முஸ்லிம்கள் இடையே மிகுந்த செல்வாக்கு பெற்றுள்ளார். இவர் பதவி ஏற்ற 2000-ம் ஆண்டு முதல் அடிக்கடி அரசியல் சர்ச்சைகளில் சிக்கி வருவது நினைவுகூரத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x