Last Updated : 25 Feb, 2015 09:08 PM

 

Published : 25 Feb 2015 09:08 PM
Last Updated : 25 Feb 2015 09:08 PM

பொதுமக்களுக்கு தவறான தகவலை தருகிறது மத்திய அரசு: அண்ணா ஹசாரே குற்றச்சாட்டு

நிலம் கையகப்படுத்துதல் சட்டத் திருத்த மசோதா தொடர்பாக பொதுமக்களுக்கு மத்திய அரசு தவறான தகவலை அளித்து வருவதாக சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே குற்றம்சாட்டி உள்ளார்.

இந்த சட்டத்தை எதிர்த்து டெல்லி ஜந்தர் மந்தரில் அண்ணா ஹசாரே கடந்த 2 நாட்களாக தர்ணா நடத்தினார். இந்நிலையில் இந்த சட்டத்தைக் கண்டித்து டெல்லியில் பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியில் பங்கேற்ற விவசாயிகள் மத்தியில் அண்ணா ஹசாரே பேசியதாவது:

மத்திய அரசு தொழிலதிபர்களைப் பற்றி அதிகம் கவலைப்படுகிறது. ஆனால் விவசாயிகளின் நலனைப் பற்றி கவலைப்படுவதில்லை. மக்கள் விழிப்போடு இல்லாவிட்டால் நீர்ப்பாசன வசதியோடு உள்ள நிலங்களைக்கூட தொழிலதிபர்களுக்கு தாரை வார்த்துக் கொடுத்துவிடுவார்கள்.

நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான அவசர சட்டத்தில் விவசாயிகளுக்கு எதிராக பல்வேறு பிரிவுகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக நிலம் கையகப்படுத்தும்போது குறிப்பிட்ட பகுதியில் உள்ள 70 சதவீத உரிமையாளர்களின் ஒப்புதலை கட்டாயமாகப் பெற வேண்டும் என்ற பிரிவு நீக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு தனி மனிதனும் தனக்கு பிரச்சினை ஏற்படும்போது நீதிமன்றத்தை அணுக அடிப்படை உரிமை உள்ளது. ஆனால், புதிய சட்டத்தின்படி நிலம் கையகப்படுத்துதலால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் அரசின் ஒப்புதல் இல்லாமல் நீதிமன்றத்தை அணுக முடியாது.

நிலைமை இவ்வாறு இருக்க விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டே இந்த சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படுகிறது என மத்திய அரசு கூறுகிறது. இதன்மூலம் மக்கள் மத்தியில் தவறான கருத்துகளை அரசு கூறி வருகிறது.

மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது கருப்புப் பணம் மீட்கப்படும் என்றும் அதிகாரம் பரவலாக்கப்படும் என்றும் வாக்குறுதி அளித்திருந்தது. இந்த விவகாரத்திலும் மக்களை தவறாக வழிநடத்தி வருகிறது.

இந்த அவசர சட்டத்தை திரும்பப் பெறாவிட்டால் தேசிய அளவில் எத்தகைய போராட்டம் நடத்துவது என்பது குறித்து ஆலோசிக்க ஒரு குழு அமைக்கப்படும். சிறை நிரப்பும் போராட்டம் நடத்துவது குறித்து பரிசீலிக்கப்படுகிறது. இதுகுறித்து விரைவில் அழைப்பு விடுக்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x