Published : 12 Feb 2015 08:16 PM
Last Updated : 12 Feb 2015 08:16 PM
சில மாதங்களுக்கு முன் பிரதமர் நரேந்திர மோடி தூய்மை இந்தியா பிரச்சாரத்தை மிகுந்த ஆரவாரத்தோடு தொடங்கினார். அதைத் தொடர்ந்து ஒவ்வொருவரும் சாலையோர குப்பைகளை அகற்ற முற்பட்டது ஊடக கவனத்தை ஈர்த்தது. ஆனால் நான்கு ஆண்டுகளாக ஆந்திரப் பிரதேசம் விசாகப்பட்டணம் அருகேயுள்ள தேவரப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பெரும் முயற்சியெடுத்து தங்கள் கிராமத்தை சுத்தம் செய்து தூய்மை இந்தியாவைப் போன்ற ஒரு முயற்சியை முன்னரே மேற்கொண்டுள்ளனர்.
இந்த நடவடிக்கையை கிராமத்தில் ஆரம்பித்து வைத்ததில் ஜி.மடுகுல மண்டல் என்பவர் மற்றவர்களுக்கு ஒரு முன்மாதிரியாகத் திகழ்கிறார்.
துர்நாற்றம் வீசிய கிராமம்
நான்கு ஆண்டுகளுக்கு முன் இந்த கிராமம் ஆரோக்கியமற்ற சூழலில் இருந்தது. 300க்கும் மேற்பட்ட பன்றிகள், கிராமத்தின் மூன்று சாலைகளிலும் குவிந்துள்ள குப்பைக் கூளங்கள் ஆகியன உள்ளடங்கிய கிராமமாக காட்சியளித்தது. இதனால் இங்கு துர்நாற்றம் தாங்கமுடியாததாக இருந்தது. தவிர, இங்கு சாராயம் காய்ச்சும் தொழிலும் அளவுக்குமீறி மலிந்துகிடந்தது என்கிறார் 32 வயதுள்ள பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் கேமிலா ரமேஷ்.
பன்றி வளர்ப்பை கைவிட பெருமுயற்சி
தொடர்ந்து சுகாதாரமற்ற நிலையிலேயே கிராமத்தை வைத்திருக்க முடியாத நிலையில், ரமேஷ், அவரோடு வந்தலா பாஸ்கர் ஹரீஷ் மற்றும் ஜே.மத்ஸ்ய கொண்டா உள்ளிட்ட25 இளைஞர்கள் இணைந்து கிராமத்தை சுத்தம் செய்தே தீருவது என்று களத்தில் இறங்கினர்.இது பற்றி கூறிய ரமேஷ், பன்றி வளர்ப்பில் ஈடுபட்டிருந்த 50-60 குடும்பங்களை பெருமுயற்சி செய்து அதிலிருந்து விடுவிக்க நீண்டகாலம் எடுத்துக்கொள்ள வேண்டியதாயிருந்தது என்றார்.
முடிவுக்கு வந்த சாராயம் காய்ச்சும் தொழில்
தூய்மைப் பணியில் இணைந்துள்ள இளைஞர்கள் எதிர்கொள்ளும் இன்னொரு பெரிய பிரச்சினை, இங்கு சட்டவிரோதமாக நடைபெறும் சாராயம் காய்ச்சும் தொழில் ஆகும். சாராயம் காய்ச்சும் தொழிலில் ஈடுபட்ட குடும்பங்கள் தொடர்ந்து இத்தொழிலை செய்துவருவதை எதிர்த்து எச்சரித்தோம். அதை அவர்கள் பொருட்படுத்தாத நிலையில் கலால்துறையினரால் திடீர்சோதனை மேற்கொள்ள வழிவகுத்தோம். அதற்கும் மசியாமல் அவர்கள் தொடர்ந்து இதில் ஈடுபட்டபோது நாங்களே சென்று சாராயம் காய்ச்சும் பானைகளையும் மற்ற பொருட்களையும் அடித்து நொறுக்கினோம். பின்னர் இக்குடும்பங்கள் இத்தகைய போக்கை மாற்றிக்கொண்டனர், சாராயம் காய்ச்சும் தொழில் ஒருவழியாக முடிவுக்கு வந்தது என்றார் கிராம தூய்மையில் ஈடுபட்டுள்ள இளைஞர்களில் ஒருவரான ரமேஷ்.
கிராமத்தினர் அனைவரும் ஆதரவு
இளைஞர்களின் இத்தகைய முயற்சிகளுக்கு கிராமத்தில் உள்ள 450 கிராமவாசிகளும் முழுமனதோடு ஆதரவு தருகின்றனர். அவர்களும் இவர்களோடு இணைந்து சாலைகளை சுத்தப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர். இப்போது யாரும் சாலைகளில் குப்பைகளைக் கொட்டுவதில்லை. மக்கள் தங்கள் குப்பைகளை எடுத்துவந்து கிராமத்துக்கு வெளியே உள்ள ஒரு பொதுவான கிடங்குஒன்றில் கொட்டுகின்றனர் என்கிறார் இக்கிராமத்தைச் சேர்ந்த வந்தலா காந்தம்மா.
மேலும் கிராமத்தில் உள்ள 100 குடும்பங்களுக்கு சாலைவசதி, வடிகால் வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ஆகிய பூர்த்தி செய்யப்பட வேண்டிய தேவைகளை எதிர்நோக்கி அக்கிராமம் காத்திருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT