Published : 15 Feb 2015 10:08 AM
Last Updated : 15 Feb 2015 10:08 AM
டெல்லியை லஞ்சம், ஊழல் இல்லாத முதல் மாநிலமாக மாற்றுவேன் என்று நேற்று முதல்வராக பதவி ஏற்றுக்கொண்ட ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால் உறுதி அளித்துள்ளார். இவருடன் 6 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
டெல்லி ராம்லீலா மைதானத்தில் நேற்று பகல் 12.10 மணிக்கு பதவி ஏற்பு விழா தொடங்கியது. இதில் கேஜ்ரிவாலுக்கு டெல்லி துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். இந்தி மொழியில் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்ட கேஜ்ரிவால், அதற்கான ஆவணத்தில் கையொப்பமிட்டார்.
இதையடுத்து அமைச்சர்களாக மணிஷ் சிசோடியா, அசீம் அகமது கான், சந்தீப் குமார், சத்யேந்தர் ஜெயின், கோபால் ராய், ஜிதேந்தர் சிங் தோமர் ஆகியோருக்கு பதவி பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார் நஜீப் ஜங். இவர்கள் அனைவருமே இந்தி மொழியில் பதவி ஏற்றுக்கொண்டனர்.
முதல்வராக பதவி ஏற்றுக்கொண்ட பிறகு அர்விந்த் கேஜ்ரிவால் கூறியதாவது:
சரியாக ஒரு ஆண்டுக்கு முன்பு பிப்ரவரி 14-ல் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தேன். இப்போது மீண்டும் சாமானியர்களின் அரசு அமைந்துள்ளது.
லஞ்சம், ஊழல் இல்லாத முதல் மாநிலமாக டெல்லியை மாற்ற வேண் டும் என்பதுதான் எனது ஆசை. அதை இந்த அரசால் செய்ய முடியும் என்று உறுதி கூறுகிறேன். இனி யாராவது உங்களிடம் லஞ்சம் கேட்டால் மறுக்க வேண்டாம். அதைக் கொடுத்துவிட்டு, அதை உங்கள் செல்போனில் படம் எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். லஞ்சம் வாங்குவோர் மீது நாங்கள் கடுமையான நடவடிக்கை எடுக்கிறோம்.
இதற்காக கடந்த முறை செய்தது போல தொலைபேசி வசதி தொடங்கப் படும். ஊழலை ஒழிப்பதற்காக வலுவான ஜன்லோக்பால் மசோதா கூடிய விரைவில் இதே ராம்லீலா மைதானத்தில் நிறைவேற்றப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT