Published : 23 Feb 2015 10:55 AM
Last Updated : 23 Feb 2015 10:55 AM
தேர்வு என்பது திறன் வெளிப்படுத்தலுக்கு அல்ல, நமக்கு நாமே அதை இனம் கண்டு கொள்வதற்காக என்பதை மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.
'மன் கி பாத்' (மனதில் இருந்து) என்ற நிகழ்ச்சி மூலம் ஆல் இந்தியா ரேடியோ வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி மாதந்ததோறும் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.
இந்த மாதம், தேர்வு எழுதும் மாணவர்களுக்காகவும், அவர்களை தேர்வுக்கு தயார் செய்யும் பெற்றோர், ஆசிரியர்கள்ளுக்காகவும் மோடி பேசியுள்ளார்.
மோடி பேசியதாவது:
வணக்கம் இளைய நண்பர்களே, கடந்த பகல் வேளை முழுவதும் உங்கள் மனம் க்ரிக்கெட் மேட்சில் ஈடுபட்டிருந்திருக்கும்; ஒரு புறம் தேர்வுகள் அளிக்கும் நெருக்கடி, மற்றொரு புறத்தில் உலகக் கோப்பை. உங்களுக்கு சங்கடம் ஏற்படும் வேளையில் உங்களுக்கு உதவி செய்ய நான் வந்திருக்கிறேன்.
உங்கள் வாழ்வில் மிக முக்கியமானதொரு வேளையில் நான் வந்திருக்கிறேன். நான் உங்களுக்கு எந்த அறிவுரையும் கூற வரவில்லை. மனதுக்கு இதமான சொற்களைப் பகிர்ந்து கொள்ளவே வந்திருக்கிறேன்.
மிகவும் படித்துக் களைத்துப் போயிருப்பீர்கள், இல்லையா? அம்மா கண்டிக்கிறார், அப்பா கண்டிக்கிறார், ஆசிரியர் கண்டிக்கிறார், இன்னும் வேறு என்னவெல்லாம் கேட்டுக் கொள்ள வேண்டியிருக்கிறதோ? தொலைபேசியில் பேசாதே, டிவி பார்க்காதே, கணிப்பொறியிலேயே கவனத்தை செலுத்தாதே, எல்லாவற்றையும் விடுத்து, படித்துக் கொண்டே இரு – இந்த நிலை தானே வீட்டில் நிலவுகிறது?
பத்தாம் வகுப்பு ஆகட்டும், 12ஆம் வகுப்பு ஆகட்டும், ஆண்டு முழுவதும் இதைத் தானே கேட்டு வந்திருக்கிறீர்கள்? எப்படா தேர்வு முடியும் என்று நீங்களும் எண்ணமிட்டிருப்பீர்கள், இல்லையா? எனக்கு உங்கள் மனதின் நிலை புரிகிறது. ஆகையால் தான் நான் இன்று உங்களோடு என் மனதின் குரலை பகிர்ந்து கொள்ள வந்திருக்கிறேன்.
இந்த விஷயம் என்னவோ கடினமான ஒன்று தான். இன்றைய விஷயம் குறித்து, தங்களால் தங்கள் மகனிடமோ, மகளிடமோ கூற முடியாதவற்றை, நான் அவர்களிடம் கூற வேண்டும் என்று தாய் தந்தையர் எதிர்பார்க்கிறார்கள். உங்கள் ஆசிரியர்கள், அவர்கள் உங்களிடம் கூற விரும்புவதை நான் கூற வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். தங்கள் வீடுகளில் நிலவும் அழுத்தம் குறையும் வகையில் நான் ஏதேனும் பேச வேண்டும் என்று மாணவர்கள் எதிர்பார்க்கிறார்கள். நான் கூறுபவை யாருக்கு, எந்த அளவுக்கு பயனளிக்கும் என்று எனக்குத் தெரியாது. ஆனால், என் இளைய நண்பர்களின் வாழ்வின் மிக முக்கியமான வேளையில் நான் அவர்களுடன் இருந்தேன் என்பது என் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.
நீங்கள் தேர்வுகளை எப்படி அணுகுகிறீர்கள் என்பதிலிருந்து தான் தேர்வுகளின் முடிவுகள் அமைகின்றன. பலர் இதை தங்கள் வாழ்வின் மிகப் பெரிய நிகழ்வாகப் பார்க்கிறார்கள்; இதில் தேர்ச்சி பெறவில்லை என்றால், உலகமே அஸ்தமித்து விடும் என்று அவர்கள் கருதுவதை நான் பார்த்திருக்கிறேன்.
உலகம் நீங்கள் நினைப்பது போல அல்ல, நண்பர்களே! ஆகையால், எந்தக் காலத்திலும் இத்தனை அழுத்தத்தை சுமக்காதீர்கள். ஆம், நல்ல முடிவுகளை அடைய விருப்பம் இருக்க வேண்டும், ஆழமான விருப்பம் இருக்க வேண்டும், திடமான நம்பிக்கை இருக்க வேண்டும்; இருந்தாலும் கூட தேர்வுகள் ஒரு சுமையாக மாறக் கூடாது.
என்னைச் சேர்ந்தவர்கள் மத்தியில் என் மகனின் நிலை உயர வேண்டும். மகனின் நிலை உயர்வது ஒரு புறம் இருக்கட்டும், நீங்கள் உங்கள் கௌரவத்தை நிலை நிறுத்தத் துடிக்கிறீர்கள். இந்த சராசரிப் போட்டிக் களத்தில் உங்கள் குழந்தையை நீங்கள் நிறுத்தியிருப்பது உங்களுக்கு விளங்கவில்லையா? வாழ்கை மிக உயரமான ஒன்று, அதன் வீச்சு மிக அதிகம், உங்கள் பிள்ளைகளை இத்தனை நெடிய, பரந்த எண்ணத்தோடு இணைக்க முடியாதா? நண்பர்களின் பிள்ளைகள், அக்கம் பக்கத்து வீட்டுப் பிள்ளைகள் ஆகியோருக்கு இணையாக அவர்கள் எப்படி செயல் படுகிறார்கள் என்பது தான் உங்களுக்கு நிறைவை அளிக்குமா? சிந்தித்துப் பாருங்கள்! இணையாக இருப்பவர்களோடு போட்டி, இதன் காரணமாக சொந்தப் பிள்ளைகளின் வாழ்கையைக் குறுக்குவது எந்த அளவுக்கு உசிதமானது என்பதை சற்றே எண்ணிப் பாருங்கள்! பிள்ளைகளிடம் பரந்த கனவுகள் பற்றி உரையாடுங்கள்; உயரப் பறப்பது பற்றிப் பேசுங்கள்; பார்த்துக் கொண்டே இருங்கள், மாற்றம் கண்டிப்பாக ஏற்படத் துவங்கும்.
நாம் பல வேளைகளில் மிகத் தொலைவான எதிர்காலம் பற்றி சிந்திக்கிறோம். பல வேளைகளில் கடந்த காலத்தில் நிலைத்து நின்று விடுகிறோம். நண்பர்களே, தேர்வுக் காலங்களில் இப்படி இருந்து விடாதீர்கள். தேர்வுக் காலங்களில் நிகழ்காலத்திலே ஊன்றி இருப்பது தான் நல்லது.
எந்த ஒரு பேட்ஸ்மேனாவது நான் எத்தனை முறை பூஜ்யத்தில் அவுட் ஆகி இருக்கிறேன், என்பது பற்றியா சிந்தித்துக் கொண்டிருப்பார்? இந்த மொத்தத் தொடரையும் வெற்றி பெறுவேனா மாட்டேனா என்று எண்ணுவாரா, களத்தில் இறங்கிய பின்னர் சதம் அடித்தவுடன் தான் திரும்புவேன் என்று எண்ணுவாரா, கண்டிப்பாக இல்லை. எந்த ஒரு நல்ல ஆட்டக்காரரும் களத்திலே தனக்கு முன்னே வரும் பந்தைப் பற்றி மட்டுமே சிந்திப்பார், அவர் அடுத்த பந்தைப் பற்றியும் சிந்திப்பதில்லை, முழு ஆட்டம் பற்றியும் நினைப்பதில்லை, முழுத் தொடர் பற்றியும் யோசிப்பதில்லை. நீங்களும் உங்கள் மனங்களை நிகழ்காலத்திலேயே இருத்தி வையுங்கள். வெற்றி பெற வேண்டும் என்றால், இது தான் அருமருந்து. நிகழ்காலத்தில் வாழுங்கள், நிகழ்காலத்தோடு இணைந்திருங்கள், நிகழ்காலத்தை எதிர்கொள்ளுங்கள். வெற்றி உங்கள் தோழனாக மாறும்.
தேர்வுகள் என்பது உங்கள் திறமைகளை வெளிப்படுத்த விடுக்கப்படும் சவால் என்றா கருதுகிறீர்கள்? இது உங்கள் எண்ணமானால், அது தவறு. நீங்கள் யாருக்கு உங்கள் திறன்களை நிரூபிக்க வேண்டும்? இதை யார் முன்பு செய்து காட்டப் போகிறீர்கள்? தேர்வு என்பது திறன் வெளிப்படுத்தலுக்கு அல்ல, நமக்கு நாமே அதை இனம் கண்டு கொள்வதற்காக என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்த மந்திரத்தை நீங்கள் புரிந்து கொண்ட மறுகணமே, உங்கள் மனதில் இருக்கும் தன்னம்பிக்கை உயிர்த்து விடும்.
நீங்கள் உங்களைப் புரிந்து கொள்ளத் தொடங்கி விடுவீர்கள். ஒரு முறை நீங்கள் உங்களைப் புரிந்து கொண்டு விட்டால், உங்கள் பலத்தைத் தெரிந்து கொண்டு விட்டால், நீங்கள் எப்போதும் உங்கள் பலத்தையே உரம் போட்டு வளர்ப்பீர்கள், அந்த பலம் மேலும் பல புதிய திறமைகளைப் பெற்றுக் கிளைக்கும். ஆகையால் தான் தேர்வு என்பதை, வெளியுலகத்துக்கு வெளிப்படுத்துவது என்ற கோணத்தில் எடுத்துக் கொள்ளாமல், அதை உங்களுக்கு அளிக்கப்படும் ஒரு வாய்ப்பாகக் கருதி செயல்படுங்கள். உங்களை நீஙக்ளே புரிந்து கொள்ள, தெரிந்து கொள்ள, உங்களோடு நீங்கள் இணக்கமாக வாழ இது ஒரு சந்தர்ப்பம் என்று எடுத்துக் கொள்ளுங்கள், அப்படித் தான் வாழ்ந்து பாருஙக்ளேன் நண்பர்களே!
நீங்கள் உங்கள் திறன் மீது நம்பிக்கையோடு இருக்க வேண்டும். இன்றைய தேர்வுத் தாள் என்ன தான் கடினமாக இருந்தாலும், நான் நன்றாக பதில் எழுதுவேன் என்ற நம்பிக்கை ஏற்பட வேண்டும். தேர்வின் கால அளவு என்னவாக இருந்தாலும் சரி, நான் குறித்த நேரத்துக்கு முன்பே அதை சிறப்பாக முடித்து விடுவேன் என்ற தன்னம்பிக்கை இருக்க வேண்டும்.
என் பள்ளிப் பருவ நாட்களில், சுலபமான கேள்விக்கான விடையை முதலில் எழுத வேண்டும், கடினமான கேள்வியை பின்னர் எதிர்கொள்ள வேண்டும் என்று என் ஆசிரியர்கள் எனக்கு அறிவுறுத்தியது இன்னமும் நன்றாக நினைவிருக்கிறது. இந்தக் கருத்து பற்றி யாராவது உங்களுக்குத் தெரிவித்திருக்கிலாம். இதை நீங்கள் கண்டிப்பாக பின்பற்று வருவீர்கள் என்று நான் நம்புகிறேன்.
என் மனதில் வேறு எண்ணங்களும் கூட எழுகின்றன. தேர்வுக்கான நேரம் வந்திருக்கும் இந்த வேளையில் அது பலனளிக்குமா அளிக்காதா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் நம்மால் ஆண்டில் இரு முறையாவது, ஒரு வாரக் காலத்திற்கு தேர்வு விழா ஒன்றைக் கொண்டாட முடியாதா என்று நான் ஆசிரிய நண்பர்களிடம் கேட்டுக் கொள்கிறேன். இந்தத் தேர்வு விழாக்களில் தேர்வு பற்றிய நகைச் சுவை கவியரங்குகள், கார்ட்டூன் போட்டிகள், தேர்வுகள் மீதான கட்டுரைப் போட்டிகள், பேச்சுப் போட்டிகள், தேர்வுகள் ஏற்படுத்தும் மனோவியல் ரீதியான தாக்கங்கள் பற்றிய விரிவுரைகள், விவாதங்கள் ஆகியவற்றை நாம் நடத்தும் போது, தேர்வுகள் மீதான பயங்கள் தாமே கரைந்து, அதுவே கூட ஒரு கொண்டாட்டமாக மாறி விடுமே! மாணவர்கள் இப்போது தேர்வு எழுதச் செல்லும் போது, அமைதியோடு எழுதுவார்கள்.
பாடத் திட்டத்திலேயே கூட, தேர்வுகள் பற்றி கற்பிக்கப்பட வேண்டும் என்று நான் கருதுகிறேன். ஏனென்றால், அழுத்தம் நிறைந்த இந்த சூழ்நிலை நல்லது அல்ல. நண்பர்களே, நான் கூறியதை விட அதிகமாக, பல பேர்கள் உங்களிடம் கூறியிருக்கலாம். பெற்றோர்கள் கூறியிருப்பார்கள், ஆசிரியர்கள் கூறியிருப்பார்கள், நீங்கள் ட்யூஷனுக்கு செல்பவராக இருந்தால், அங்கே பயிற்றுவிப்பவர்கள் கூறியிருப்பார்கள், நான் மேலும் கூறி உங்களைக் குழப்ப விரும்பவில்லை.
இந்த நாட்டின் ஒவ்வொரு மகனும், மகளும் தேர்வு எழுதச் செல்லும் போது, மகிழ்ச்சியோடு செல்ல வேண்டும், சந்தோஷமாகச் செல்ல வேண்டும், முக மலர்ச்சியோடு தேர்வு எழுதச் செல்ல வேண்டும் என்று தான் நான் விரும்புகிறேன். நீங்கள் மகிழ வேண்டும் என்பதால் நான் உங்களோடு உரையாடினேன்.
நீங்கள் தேர்வுகளில் கண்டிப்பாக நல்ல முறையில் வெற்றி பெறுவீர்கள், நீங்கள் வெற்றியாளர்களாகவே இருப்பீர்கள், தேர்வுகளை கொண்ட்டாட்டமாக மாற்றுங்கள், குதூகலத்தோடு தேர்வுகளை எழுதுங்கள். ஒவ்வொரு நாளும் சாதனையின் சந்தோஷத்தை அனுபவியுங்கள், மொத்தச் சூழலையும் மாற்றி அமைத்துக் கொள்ளுங்கள். தாய், தந்தை, ஆசிரியர், பள்ளிக்கூட நிர்வாகம் என அனைவருமாக இணைந்து இந்த மாற்றத்தை ஏற்படுத்துங்கள். சவாலுக்கே சவால் விடும் சந்தோஷத்தைக் காணுங்கள்.
நீங்கள் புதிய மகிழ்ச்சியை, புதிய ஆனந்தத்தை அடைவீர்கள், உங்களுக்கு நான் என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் எதிர்காலம் எந்த அளவுக்கு ஒளிமயமானதாக ஆகிறதோ, நாட்டின் எதிர்காலமும் அந்த அளவுக்கு ஒளிமயமானதாக ஆகும்.
இந்தியாவின் எதிரகாலத்தை உருவாக்குபவர்கள், வருங்கால இளைய சமுதாயத்தினர் தாம். அதை நீங்கள் தான் உருவாக்க இருக்கிறீர்கள். மகன், மகள் என இருவருமாக, தோளோடு தோள் சேர்ந்து முன்னேற இருக்கிறீர்கள். வாருங்கள், தேர்வுக் கொண்டாட்டத்தை, குதூகல விழாவாக மாற்றுங்கள், மனமார்ந்த வாழ்த்துக்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT