Published : 12 Feb 2015 09:02 AM
Last Updated : 12 Feb 2015 09:02 AM
தேசத்தந்தை மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சேவுக்கு நாட்டின் பல இடங்களில் சிலை வைக்க முயன்று சர்ச்சையை கிளப்பிய அமைப்புகளில் இந்து மகாசபாவும் ஒன்று. வரும் 14-ம் தேதி காதலர் தினத்தைக் கொண்டாட அனுமதிக்கப் போவதில்லை என இந்த அமைப்பு எச்சரித்துள்ளது. இது தொடர்பாக ‘தி இந்து’ நாளிதழுக்கு மகா சபா தேசியத் தலைவர் சந்திர பிரகாஷ் கவுசிக் அளித்த பேட்டி.
காதலர் தினத்தை கொண்டாட விட மாட்டோம் என கூறி இருப்பது ஏன்?
நாங்கள் காதலின் எதிரிகள் அல்ல. இந்த உலகத்துக்கே காதலை கற்றுக் கொடுத்தது இந்தியாதான். ‘வேலன்டைன்ஸ் டே’ என்பது மேற்கத்திய கலாச்சாரத்தின் சின்னம். இதன்மூலம் நம் கலாச்சாரத்துக்கு சேதம் விளைவிக்க முயற்சிக்கப்படுவதால்தான் அந்த நாளை, கொண்டாடுவதை எதிர்க்கிறோம்.
எதிர்ப்பை எப்படி காட்டப் போகிறீர்கள்?
அந்த நாளில் எங்கள் குழுக்கள் டெல்லியின் முக்கியப் பகுதிகளில் செல்லும். அங்கு, கண்களில் படும் இளம் ஜோடிகளிடம், ‘காதலின் அர்த்தம் என்ன?’ என மிகவும் அன்பாக கேள்வி எழுப்பும். அவர்களிடம், 365 நாட்களுமே காதலுக்கான நாட்கள்; வெறும் ஒருநாள் அல்ல என்பதையும், அது பூங்கா, மால் மற்றும் ரெஸ்டாரண்டுகள் போன்ற பொது இடங்களில் வெளிக்காட்டுவதற்கு அல்ல என எடுத்துக் கூறுவோம்.
அதைப் புரிந்து கொள்ளாமல் அவர் களில் யாராவது ‘இல்லை! இல்லை! எங்கள் காதல் உண்மையானது!’ என வாதிட்டால், அவர்களை எங்கள் இந்து மஹாசபா அலுவலகத்துக்கு வரவேற்று அழைத்து வந்து அக்னியை சாட்சியாக்கி அதை வலம் வந்து, அவர்கள் ஒருவரை ஒருவர் தவிர வேறு எவரையும் ஏறெடுத்து பார்க்க மாட்டோம் என்ற உறுதியையும் அளிக்கச் செய்வோம்.
இது டெல்லியிலா, நாடு முழுவதிலுமா?
டெல்லி நாட்டின் தலைநகர் என்பதால் இங்கு அதிக கவனம் செலுத்துகிறோம். ஆனால், எங்கள் தொண்டர்கள் இதை முதன்முறையாக தமிழகம் உட்பட நாடு முழுவதும் நடத்துவார்கள்.
இதில் மற்ற இந்துத்துவா அமைப்புகளால் வெற்றி காண முடியவில்லை. இப்போது நீங்கள் என்ன செய்துவிட முடியும் எனக் கருதுகிறீகள்?
விஹெச்பி, பஜ்ரங்தளம் போன்ற அமைப்புகள் இப்பிரச்சினையை முறையாக அணுகவில்லை. ஊடகங் களின் கவனத்தை ஈர்க்கவும், அதன் மூலம் அரசியல்வாதியாகவும் இப்பிரச் சினையைப் பயன்படுத்திக் கொண்டனர். சிலர் வன்முறையிலும் ஈடுபட்டனர். இதுபோன்ற செயல்களுக்கு நாங்கள் முற்றிலும் எதிரானவர்கள். காதலின் உண்மையான பரிபாஷையை இந்த இளம் சமூகத்துக்கு எடுத்துச் சொல்ல விரும்புகிறோம்.
இதை கேட்க நீங்கள் யார் என காதலர்கள் கேட்பார்களே?
அவர்களுக்கு கலாச்சாரத்தை கற்றுத் தருகிறோம். இதை அவர்கள் புரிந்து கொண்டால் சரி, இல்லை எனில் அவர்கள் காதல் உண்மை இல்லை. இதைக் குறைந்தபட்சம் அவர்களில் ஒருவராவது வெறும் உடல் பசிக்கு எனப் புரிந்து கொள்வார்கள் என்பது எங்கள் நம்பிக்கை.
இதை நீங்கள் அரசிடம் அனுமதி பெற்று செய்யலாமே?
தர்ணா அல்லது போராட்டத்துக்குத் தான் அனுமதி தேவை. காதல் பற்றிய நல்ல பாடங்கள் கற்றுக் கொடுக்க யாரிடமும் அனுமதி பெறத் தேவை இல்லை. அரசு செய்ய வேண்டிய பணியைத்தான் நாம் செய்கிறோம். அரசு நம் கலாச்சாரத்தை சீரழித்து வருவதன் விளைவாகத்தான் நாம் களம் இறங்கி அதை எடுத்து கூற வேண்டி உள்ளது. இதுபோன்ற விஷயங்களை அரசே பள்ளிப்பாடங்களில் கற்றுக் கொடுத்தால் எங்களுக்கு இந்த அவசியம் வராது.
25 ஆண்டுகள் பிரம்மச்சாரியத்தை கடைப்பிடிப்பது பற்றி அவர்கள் அறிந்து கொண்டால் நாட்டில் பலாத்கார குற்றங்கள் இருக்காது.
நீங்கள் அரசியலில் நுழைந்து தேர்தலில் போட்டியிட்டு ஆட்சியை பிடித்து அமல்படுத்தலாமே?
கண்டிப்பாக செய்வோம். முன்னம் இருந்த எங்கள் கட்சியின் பதிவை இடையில் தேர்தல் ஆணையம் நீக்கியிருந்தது. அதை எதிர்த்து நீதிமன்றம் சென்று சரி செய்து விட்டோம். பாஜக எந்த கொள்கைகளை முன்வைத்து ஆட்சிக்கு வந்துள்ளதோ அதை செயல்படுத்த வில்லை எனில் நாங்கள் முழுவீச்சில் களம் இறங்க வேண்டி இருக்கும். இந்து ராஜ்ஜியம் யார் அமைக்க முன் வந்தாலும் எங்களுக்கு சம்மதமே. மற்றபடி, அரசியலில் குதித்து எம்பி, எம்.எல்.ஏவாக எங்களுக்கு விருப்பமில்லை.
காதலர் தினத்தை வாட்ஸ் ஆப், பேஸ்புக் மூலமாகவும் கண்காணிப்போம் எனக் கூறியுள்ளீர்களே?
சில இளம் குழுக்களை அமர்த்தி உள்ளோம். அவர்கள் காதலர்களை சமூக இணையதளம் மூலமாகவும் கண்காணிப் பார்கள். அதில் வாழ்த்து கூறிக் கொள்ளும் ஜோடிகளிடம் கேள்வி எழுப்பப்படும். இதில், 18 வயதுக்கு குறைவானவர்கள் இருப்பின் அவர்களின் பெற்றோர் களின் கவனத்துக்கு கொண்டு செல்வோம்.
நீங்கள் காதலின் எதிரியாக இருப்பது நியாயமா?
நாங்கள் காதலுக்கு எதிரிகள் அல்ல. அதை பொது இடங்களில் வெளிப்படுத்து வதைத்தான் எதிர்க்கிறோம்.
கோட்சேவுக்கு சிலை வைக்கும் நீங்கள் எடுத்த முயற்சி தோல்வி அடைந்ததால், காதலர் தினத்தை கையில் எடுத்துள்ளீர்களா?
கோட்சே விவகாரம் இன்னும் தோல்வி அடையவில்லை. அந்த முயற்சி இன்னும் தொடர்கிறது. உ.பி.யில் முலாயம்சிங் ஆட்சி மீரட்டில் விதித்த தடையை எதிர்த்து அலகாபாத் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இதில் வென்று நமக்கு சொந்தமான அலுவலக வளாகத்தில் கோட்சே சிலை வைக்கப்படுவதை யாராலும் தடுக்க முடியாது. பலர் நிலம் தரத் தயாராக இருப்பதாக கூறி உள்ளார்கள். தமிழகத்திலும் பலர் சிலை வைப்பதற்காக நிலம் தர முன் வந்துள்ளார்கள். தமிழகத்தில் நமக்கு கிடைத்த ஆதரவை வைத்து பார்க்கும் போது, அங்கு அடுத்து நடைபெறவிருக்கும் சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு இந்து மகாசபாவின் புதிய கணக்கு தொடங் கப்படுவது உறுதி.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT