Published : 04 Feb 2015 09:56 AM
Last Updated : 04 Feb 2015 09:56 AM
டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்க பாஜக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதற்காக டெல்லியின் 1.2 கோடி வாக்காளர்களின் குடும்பத் தலைவர்களுக்கு தனித்தனியாகக் கடிதம் எழுத திட்டமிட்டுள்ளது.
இந்த கடிதம், தேர்தலுக்கு இரண்டு நாள் முன்னதாக (வியாழக்கிழமை) கிடைக்கும் வகையில் அனுப்பப்பட உள்ளது. மத்திய அரசு செய்த சாதனைகளின் பட்டியல், டெல்லியில் செய்ய இருக்கும் முக்கியப் பணிகளின் குறிப்புகள் இந்தக் கடிதத்தில் இடம் பெற்றிருக்கும்.
இந்தக் கடிதத்துடன் பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் வேட் பாளர் கிரண் பேடி மற்றும் அந்தந்த தொகுதி வேட்பாளர்களின் புகைப்படங்களும் அனுப்பி வைக்கப்படும். கடிதத்தின் இறுதியில் தாமரை சின்னத்தில் வாக்களிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கும்.
வீடு வீடாக ஆர்எஸ்எஸ்
கடந்த 2013-ல் நடைபெற்ற தேர்தலில் பெரும்பான்மைக்கு தேவையானதைவிட நான்கு தொகுதிகள் குறைவாக பெற்றதால் ஆட்சியை கோட்டைவிட்ட பாஜக, இந்தமுறை தனிப் பெரும் பான்மையுடன் ஆட்சி அமைக்கும் பொருட்டு பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகிறது.
டெல்லியில் மொத்தம் உள்ள 70 தொகுதிகளிலும் பிரச்சார பணிகளை கவனிப்பதற்காக 250 பாஜக எம்பிக்கள் முழுநேர பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு உதவுவதற்காக தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் நாடு முழுவதிலுமிருந்து வரவழைக்கப் பட்டு வீடு வீடாக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பாஜக முதல்வர்களுக்கும் பொறுப்பு
டெல்லியில் வசிக்கும் ஹரியாணா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா ஆகிய மாநிலத்தவர்களின் வாக்குகளைக் கவரும் பொறுப்பு அந்தந்த மாநில (பாஜக) முதல்வர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எனவே, அந்த ஐந்து முதல்வர்களும் தங்கள் கட்சியின் மாநில நிர்வாகிகளை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தி உள்ளனர்.
அமித் ஷா நேரடி கவனம்
இதுகுறித்து ‘தி இந்து’விடம் பாஜகவின் டெல்லி நிர்வாகிகள் கூறும்போது, “முதல்வர் வேட்பாளராக கிரண் பேடி அறிவிக்கப்பட்ட பிறகு கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டது. இந்த விஷயத்தில் அமித் ஷா நேரடியாக தலையிட்ட பிறகு பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டு பிரச்சாரம் தீவிரமாகி விட்டது. கிரண் பேடியின் தேர்தல் பிரச்சாரப் பொறுப்பாளர் பதவியிலிருந்து நேற்று முன்தினம் ராஜினாமா செய்த நரேந்திர டாண்டண், அமித் ஷாவின் சமாதானத்தை ஏற்று வாபஸ் பெற்றார்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT