Published : 18 Feb 2015 02:29 PM
Last Updated : 18 Feb 2015 02:29 PM

பாக். மர்மப் படகை தகர்க்க உத்தரவிடவில்லை: கடலோரக் காவல்படை டி.ஐ.ஜி விளக்கம்

பாகிஸ்தானில் இருந்து குஜராத் கடல் பகுதியில் ஊடுருவிய மர்ம படகைச் சுட்டுத் தள்ள கடலோரக் காவலப் படை டிஐஜி லோஷாலி உத்தரவிட்டதாக வீடியோ காட்சியுடன் தகவல் வெளியானதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தான் அவ்வாறு உத்தரவிடவில்லை என அவர் திடீரென மறுப்பு தெரிவித்துள்ளார்.

கடந்த டிசம்பர் 31-ம் தேதி இரவு மர்ம படகு ஒன்று குஜராத் துக்குள் ஊடுருவியது. அவசர விசாரணையில் பாகிஸ்தானின் கராச்சி நகரில் இருந்து குஜராத்தின் போர்பந்தர் கடல் பகுதிக்குள் படகு ஊடுவியது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் ஏராளமான வெடிகுண்டுகள் நிரப்பப்பட்டிருந்ததாக தகவல் வெளியானது. உடனடியாக கடலோரக் காவல் படையினர் படகை சுற்றிவளைக்க விரைந்தனர். அதற்குள் படகு வேகமாக திரும்பி சென்றது. ஆனால், கடலில் வெடித்துச் சிதறியது.

இதுகுறித்து மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் விளக்கம் அளிக்கையில், “பாகிஸ்தானில் இருந்து ஊடுருவிய படகில் இருந்த 4 பேரையும் சரணடையும்படி கேட்டுக் கொண்டோம். ஆனால், படகில் இருந்த வெடிகுண்டுகள் வெடித்து சிதறியதில் 4 பேரும் பலியாகி விட்டனர். படகு எதேச்சை யாக வெடித்துச் சிதறியது. அதை பாதுகாப்புப் படையினர் தகர்க்கவில்லை” என்று கூறியது.

இதற்கிடையில், சூரத் நகரில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில் கடலோரக் காவல் படை டிஐஜி லோஷாலி பங்கேற்றார். அப்போது, “டிசம்பர் 31-ம் தேதி உங்களுக்கு நினைவிருக்கும் என்று நம்புகிறேன். அன்று பாகிஸ்தானில் இருந்து குஜராத் பகுதிக்குள் ஊடுருவிய படகை சுட்டுத் தள்ள உத்தரவிட்டேன்.

அப்போது நான் காந்தி நகரில் இருந்தேன். எனக்கு தகவல் வந்தவுடன் அந்தப் படகை தகர்க்க உத்தரவிட்டேன். அதில் வந்தவர்களுக்கு நாம் பிரியாணி பரிமாற வேண்டிய அவசியம் இல்லை” என்று லோஷாலி பேசியதாக பத்திரிகையில் செய்தி வெளியானது.

இந்நிலையில், தான் அப்படி சொல்லவில்லை. தன்னுடைய பேச்சு திரித்து வெளியிடப் பட்டுள்ளது என்று லோஷாலி மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

தேச விரோத சக்திகள் நமது கடல் பகுதிக்குள் நடமாடுவதை அனுமதிக்க முடியாது. நாங்கள் அவர்களுக்கு பிரியாணி பரிமாறப் போவதுமில்லை என்றுதான் பேசினேன். மர்ம படகை தகர்க்க உத்தரவிட்டதாக வந்துள்ள செய்தி தவறானது. நான் பேசியவை திரித்து வெளியிடப்பட்டுள்ளன. மேலும் மர்ம படகை எதிர்கொள்ளும் ஆபரேஷன் என் தலைமையில் நடக்கவில்லை. என்னுடைய உயரதிகாரி வடமேற்கு பகுதி இன்ஸ்பெக்டர் ஜெனரல் குல்தீப் சிங் ஷெரோன் தலைமையில்தான் ஆபரேஷன் நடந்தது.

இவ்வாறு லோஷாலி கூறியுள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அமைச்சர் நடவடிக்கை

இந்நிலையில், மத்திய பாது காப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் நேற்று கூறும்போது, “பாகிஸ்தானில் இருந்து ஊடுருவிய மர்ம படகு, தப்பிச் செல்லும்போது வெடிகுண்டுகள் வெடித்து தானாக தகர்ந்தது. அதை யாரும் தகர்க்கவில்லை. இந்த கருத்தில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இதற்கு மாறாக கடலோரக் காவல் படை டிஐஜி லோஷாலி கூறியிருப்பதாகத் தகவல் வந்துள்ளது. இதுகுறித்து அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x