Last Updated : 14 Feb, 2015 11:10 AM

 

Published : 14 Feb 2015 11:10 AM
Last Updated : 14 Feb 2015 11:10 AM

டெல்லியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி படித்த கிறிஸ்தவ பள்ளி மீது மர்ம நபர்கள் தாக்குதல்: நடவடிக்கை எடுக்க காவல்துறை ஆணையருக்கு பிரதமர் உத்தரவு

டெல்லியில் கிறிஸ்தவ பள்ளியில் மர்ம நபர்கள் நேற்று அதிகாலை நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளர். இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி டெல்லி காவல்துறை ஆணையரை பிரதமர் மோடி நேரில் அழைத்து உத்தரவிட்டார்.

தெற்கு டெல்லியின் வசந்தவிஹார் பகுதியில் கிறிஸ்தவ சமூகத்தினரால் நிர்வகிக்கப்படும், ஹோலி சைல்ட் ஆக்ஸிலியம் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியின் அலுவலகத்தை நேற்று காலை வழக்கம்போல் திறந்த ஊழியர் அதிர்ச்சி அடைந்தார்.

காரணம், அலுவலகம் சூறை யாடப்பட்டு, அங்கிருந்த நன் கொடை பெட்டி உடைக்கப்பட்டு, அதிலிருந்த ரூ. 12,000 திருடப் பட்டிருந்தது. பள்ளி முதல்வர் அலுவலகத்தின் உள்ளேயிருந்த 4 கண்காணிப்பு கேமராக்கள் அடித்து உடைக்கப்பட்டிருந்தன. இதையடுத்து நேற்று பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இந்த சம்பவம் பற்றி அறிந்த பிரதமர் நரேந்திர மோடி, டெல்லி காவல்துறை ஆணையர் பி.எஸ்.பாஸியை உடனே நேரில் அழைத்து விவரங்களை கேட்டறிந்தார். இதையடுத்து சம்பவத்துக்கு காரணமானவர்களை விரைந்து கண்டுபிடித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி மோடி உத்தரவிட்டதாக பிரதமர் அலு வலக செய்திக்குறிப்பு தெரிவிக் கிறது.

இந்த சம்பவத்தில் மத்திய உள் துறை செயலாளர் எல்.சி.கோயலை பிரதமர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அதில் சூறையாடல் மற்றும் கிரிமினல் குற்றங்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தி தலைநகரில் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு அவர் கூறியுள்ளார்.

பள்ளியின் முன்னாள் மாணவியான மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி நேற்று மதியம் பள்ளியை பார்வையிட்டார். இதையடுத்து சம்பவம் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கும் பொருட்டு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கிடம் அவர் தொலைபேசியில் பேசினார்.

இந்த சம்பவம் குறித்து முதல் கட்ட விசாரணை நடத்திய டெல்லி காவல் துறை இது ஒரு திருட்டு சம்பவமாக இருக்கலாம் என்று கருதுகிறது. நன்கொடை பெட்டியி லிருந்து பணமும் திருடப்பட்டுள் ளதை போலீஸார் இதற்கு ஆதாரமாகக் காட்டுகின்றனர்.

டெல்லி காவல்துறை ஆணையர் பாஸி நேற்று கூறும்போது, “கடந்த நவம்பர் முதல் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீதான 5 தாக்குதல் சம்பவங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 4-ல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் பள்ளிக்கூட சம்பவத்தை அந்த வகையில் கூறமுடியாது. ஏனெனில், மத சம்மந்தப்பட்ட பொருள்கள் எதுவும் திருடப்பட வில்லை” என்றார்.

இந்த சம்பவம் தொடர்பாக, டெல்லி முதல்வராக இன்று பதவியேற்கும் அர்விந்த் கேஜ்ரிவாலும் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். மேலும் காங்கிரஸ் கட்சியும் கண்டனம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x