Published : 14 Feb 2015 09:16 AM
Last Updated : 14 Feb 2015 09:16 AM
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே பெங்களூர் - எர்ணாகுளம் பயணிகள் ரயில் தடம் புரண்டதால் நேற்று காலை ரயில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால் சேலம் - பெங்களூர் நோக்கிச் சென்ற பயணிகள் ரயில், கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை - கெலமங்கலம் இடையே பெரிய நாகதுணை என்கிற இடத்தில் நிறுத்தப்பட்டது. இதனால் ஓசூர், பெங்களூருக்குச் சென்று கொண்டிருந்த அரசுப் பணியாளர்கள், மாணவ, மாணவிகள், தொழிலாளர்கள், வியாபாரிகள் என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். அவர்கள் அங்கிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று கார், லாரி உள்ளிட்ட வாகனங்கள் மூலம் ஓசூருக்குச் சென்றனர்.
இது குறித்து தகவலறிந்த கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ராஜேஷ், சிறப்பு பேருந்துகளை இயக்க அறிவுறுத்தினார். அதன் பின்னர் பெரிய நாகதுணையில் பரிதவித்து நின்ற பயணிகள் பேருந்துகள் மூலம் ஓசூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தமிழக மருத்துவக் குழு
கர்நாடக மாநிலத்தில் ரயில் விபத்து நடந்த பகுதி ஓசூரிலிருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ராஜேஷ், மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் தமிழரசன் தலைமையில் மருத்துவக் குழுவி னர் 5 ஆம்புலன்ஸ் வாகனங்களில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
மேலும், ஆனைக்கல் மருத்துவ மனையில் ஓசூர் மருத்துவர் கைலாஷ் தலைமையில் குழுவினர் விபத்தில் காயம் அடைந்தவர் களுக்கு சிகிச்சையளித்தனர். இதேபோல், சம்பவ இடத்தில் பாகலூர் மருத்துவ அலுவலர் தலைமையிலும் மருத்துவக் குழு வினர் சிகிச்சை அளித்தனர். முன் னெச்சரிக்கை நடவடிக்கையாக ஓசூர் அரசு மருத்துவமனையில் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.
ஓசூர் கோட்டாட்சியர் ஜோதி லிங்கம் தலைமையில் வருவாய்த் துறை அதிகாரிகள், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் போலீஸார் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
ஓசூரில் தகவல் மையம்
ரயில் விபத்தில் இறந்தவர்கள் குறித்து ஓசூர் ரயில் நிலையத்தில் தகவல் பெற தென்மேற்கு ரயில்வே நிர்வாகம் தகவல் மையம் அமைத் திருந்தது. ஆனால் அங்கிருந்த ரயில்வே அதிகாரிகளுக்கு சரியான தகவல் வழங்கப்படாததாலும், பயணிகள் குறித்த விவரங்கள் முழு மையாகக் கிடைக்க காலதாமதம் ஏற்பட்டதாலும் விபத்தில் இறந்தவர் கள் குறித்து உறுதி செய்ய முடியா மல் தவித்தனர்.
தடம் புரண்ட ரயில் பெட்டிகளை மீட்க ஈரோட்டில் இருந்து நவீன ரக கிரேன் வர வழைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாற்றுப் பாதையில் 12 ரயில்கள்
தெற்கு ரயில்வே நேற்று வெளி யிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப் பதாவது:
இன்டர்சிட்டி விரைவு ரயில் விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து 13-ம் தேதி (நேற்று) பெங்களூர் சிட்டியில் இருந்து நாகர்கோவில் ஜங்ஷனுக்கு இயக்க இருந்த விரைவு ரயில் ரத்து செய்யப்பட் டது. மேலும், 12 விரைவு ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்பட் டன. கோவை ஜங்ஷன் லோக் மான்யா திலக் விரைவு ரயில், எர்ணா குளம் பெங்களூர் சிட்டி விரைவு ரயில்கள் திருப்பத்தூர், ஜோலார் பேட்டை வழியாக இயக்கப்பட்டன.
மேலும், மைசூர் மயிலாடு துறை விரைவு ரயில், யஷ்வந்த்பூர் கன்னூர், யஷ்வந்த்பூர் பாண்டிச்சேரி வாரந்திர விரைவு ரயில், மைசூர் தூத்துக்குடி, லோக்மான்யா திலக் கோவை, மயிலாடுதுறை மைசூர், கன்னூர் யஷ்வந்த்பூர் உட்பட 12 விரைவு ரயில்கள் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை வழியாக நேற்று இயக்கப்பட்டன. இதனால், இந்த விரைவு ரயில்கள் காலதாமதமாக சென்றடைந்தன. அதேபோல், நாகர் கோவில் பெங்களூர் விரைவு ரயில் ஓசூர் பெங்களூர் இடையே ரத்து செய்யப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சர் பார்வை
மத்திய சட்ட அமைச்சர் சதானந்த கவுடா சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டார். அவர் கூறியபோது, மீட்புப் பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகின்றன என்றார். சதானந்த கவுடாவை தொடர்ந்து கர்நாடக அமைச்சர்கள் ஜார்ஜ், ராமலிங்க ரெட்டி ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.
பெங்களூரு-எர்ணாகுளம் ரயில் விபத்து குறித்து கேரள முதல்வர் உம்மன் சாண்டி கவலை தெரிவித்துள்ளார். அம்மாநில அமைச்சர் ஆர்யதன் முகமது மற்றும் மலப்புரம் மாவட்ட ஆட்சியர் கே.பிஜு உள்ளிட்டோரை சம்பவ இடத்துக்கு சென்று மீட்புப் பணிகளை மேற்கொள்ள அவர் உத்தரவிட்டுள்ளார்.
தடம் புரண்ட 9 பெட்டிகளில் தமிழகத்தை சேர்ந்த 176 பேர் பயணம் செய்தனர். ஆனால் தமிழகத்தை சேர்ந்த அமைச்சர்கள் யாரும் சம்பவ இடத்துக்கு வரவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட தமிழக பயணிகள் அதிருப்தி அடைந்தனர்.
ரூ. 2 லட்சம் நிவாரணம்
பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் கூறியிருப்பதாவது:
ரயில் விபத்தில் உயிரிழந்தவர் களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கி றேன். காயமடைந்தவர்கள் விரை வில் குணமடைய வேண்டும். ரயில்வே அமைச்சரும், அதிகாரி களும் விபத்து குறித்து உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என கூறியுள்ளார்.
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சம், படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரம், லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ. 20 ஆயிரம் வழங்கப்படும் என்று ரயில்வே துறை அறிவித்துள்ளது.
அவசர உதவி எண்கள்
ரயில் விபத்து குறித்து உரிய தகவல்களை பெறுவதற்காக பெங்களூரு, ஆனேக்கல், ஓசூர், கோயம்புத்தூர், பாலக்காடு, எர்ணாகுளம், திருவனந்தபுரம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் சிறப்பு தகவல் மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
பெங்களூரு: 080-22371165, 09731666751, சேலம்: 0427-2431947, ஈரோடு: 9600956237, 9600956234, திருப்பூர்: 9442168117, கோயமுத்தூர்: 9600956288, 9600956232 பாலக்காடு: 0491-2556198, 0491-2555231, திருச்சூர்: 0487-2424148, 2430060, ஆல்வே: 0484-2398200, எர்ணாகுளம் டவுன் பகுதி: 0484-2398200, எர்ணாகுளம் சந்திப்பு: 0484-2100317, 0813699773, 09539336040, திருவனந்தபுரம்: 0471-2321205, 2321237, 09746769960.
''நான் மறுபிறவி எடுத்துள்ளேன்'': உயிர் பிழைத்த இளம்பெண் அதிர்ச்சி
'தி இந்து'(ஆங்கிலம்) நாளிதழில் பணியாற்றிய ரோஷினி ஹரிஹரன் கோயம்புத்துரை சேர்ந்தவர். தற்போது பெங்களூருவில் வசித்து வரும் இவர் நேற்று விபத்துக் குள்ளான ரயிலில் கோயம்புத் தூருக்கு சென்றுக் கொண்டிருந்தார். இது தொடர்பாக அவர் நம்மிடம் கூறியதாவது:
கண்மூடி திறப்பதற்குள் ஒரே ஒரு நொடிப்பொழுதில் பிரளயம் நடந்ததுபோல் கோர சத்தம்.என்ன நடந்தது என்பதை உணர்வதற்குள் எங்கு பார்த்தாலும் அழுகுரலும் கேவலும் கேட்டுக்கொண்டே இருந்தது. நான் இருந்த டி-9 பெட்டி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. கலங்கிய கண் களில் தெரிந்த காட்சியை சாகும் வரை மறக்கமுடியாது. எனக்கு உயிர் இருக்கிறதா என்பதை உணரவே நீண்ட நேரம் பிடித்தது.
கோர விபத்து நிகழ்ந்தது காலை 7.35 மணிக்கு, ஆனால் காலை 9 மணி வரை சம்பவ இடத்துக்கு போலீஸாரோ, அதிகாரிகளோ, மீட்புக் குழுவினரோ வரவில்லை.சக பயணிகளும்,சில பொதுமக்களும் மட்டுமே உதவி செய்தனர். என்னை அறியாமல் கண்ணீர் வழிந்த போதும் அழுது கொண்டிருந்த சக பயணிகளை தேற்றினேன்.
என்னோடு பயணித்து கொண்டி ருந்த பலர் இப்போது உயிரோடு இல்லை. உண்மையில் நான் மறுபிறவி எடுத்து திரும்பியுள்ளேன்” என்று ரோஷினி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT