Published : 13 Feb 2015 02:16 PM
Last Updated : 13 Feb 2015 02:16 PM
டெல்லி சட்டப்பேரவையில் பாஜக அடைந்த தோல்வியை விமர்சித்து மகாராஷ்டிர நவநிர்மான் சேனாவின் (எம்.என்.எஸ்) தலைவர் ராஜ் தாக்கரே வரைந்த கேலிச்சித்திரம், அவர் மீது மற்றவரின் வெற்று கவனத்தை ஈர்க்கவே வெளியிடப்பட்டதாகவும், இதனை அவர் முழுநேர வேலையாக தொடரலாம் என்றும் பாஜக விமர்சித்துள்ளது.
பாஜகவின் டெல்லி தேர்தல் தோல்வியை விமர்சிக்கும் விதமாக மகாராஷ்டிர நவநிர்மான் சேனாவின் (எம்என்எஸ்) தலைவர் ராஜ்தாக்கரே கேலிச்சித்திரம் வெளியிட்டிருந்தார்.
அதில், பிரதமர் நரேந்திர மோடியும், பாஜக தலைவர் அமித்ஷாவும் இரட்டை கோபுர கட்டிடங்கள் போலவு, அந்த இரு கட்டிடங்களையும் ஆம் ஆத்மி தலைவர் அர்விந்த் கேஜ்ரிவால் விமானம் மூலம் தகர்த்துக் கொண்டு வெளியே வருவது போலவும், இந்தக் காட்சியை அமெரிக்க அதிபர் ஒபாமா டி.வி.யில் அதிர்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருப்பது போலவுமான கேலிச்சித்திரம் வெளியிடப்பட்டது.
இந்த கேலிச்சித்தரத்துக்கு பதில் அளிக்கும் விதமாக பாஜக எம்.எல்.ஏ-வும் அந்தக் கட்சியின் மும்பைத் தலைவருமான ஆசிஷ் ஷீலர் அவரது ட்விட்டர் பக்கத்தில் கூறும்போது, "தனது கேலிச்சித்தரத்தை அனைத்து பத்திரிகைகளிலும் வெளியிடும்படி செய்து, தன்னை அனைவரது கவனத்திலும் இருக்க அவர் வழி அமைத்துக் கொண்டுள்ளார்.
மறைந்த சிவசேனா தலைவர் மிகப் பெரிய அரசியல் விமர்சகர், அவரைப்போல ராஜ்தாக்கரேவும் இதனை ஈடுபாடுடன் முழுநேர வேலையாக செய்தால், அவரது எதிர்காலம் சிறந்து விளங்கும்" என்று கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT