Published : 24 Feb 2015 07:14 PM
Last Updated : 24 Feb 2015 07:14 PM
மத்திய அரசு கொண்டு வர முயற்சிக்கும் நிலம் கையகப்படுத்தும் அவசரச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே நடத்தி வரும் போராட்டத்தில் மதிமுக பொது செயலாளர் வைகோவும், டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலும் இணைந்தனர்.
நிலம் கையகப்படுத்தும் அவசரச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே போராட்டம் நடத்தி வருகிறார். டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் நேற்று ஆரம்பித்த இந்தப் போராட்டத்தில் ஹசாரேவுடன் விவசாயிகளும் சமூக ஆர்வலர்களான மேதா பட்கர் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் போராட்டத்தின் 2-ஆம் நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) அண்ணா ஹசாரேவுக்கு ஆதரவு தெரிவித்து போராட்ட மேடையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் அதுல் அஞ்சன், மதிமுக பொது செயலாளர் வைகோ ஆகியோர் இணைந்தனர். இவர்கள் இருவரும் இன்று காலை முதலே போராட்ட மேடையில் இடம்பெற்ற நிலையில், டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அர்விந்த் கேஜ்ரிவாலும் விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார்.
போராட்டத்தில் பேசிய வைகோ, தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையிலான மத்திய அரசுக்கு விவசாயிகளின் நலனில் அக்கறை இல்லை என்று குற்றம்சாட்டினார்.
முன்னதாக இன்று காலை அண்ண் ஹசாரே பேசும்போது, "போராட்டத்துக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் ஆதரவு தெரிவிக்கலாம். அதனால் இந்தப் போராட்டத்துக்கு அரசியல் சாயம் பூசுவதாக ஆகாது. அப்படி நடக்கவும் நான் விட மாட்டேன். இது முற்றிலும் விவசாயிகளின் நலன் சார்ந்த போராட்டம்.
அரசியல் கட்சிகள் நாட்டு மக்களுக்காகவே செயல்பட வேண்டியது. மத்திய அரசின் இடம்பெற்றிருப்பவர்களும் இந்த நாட்டின் மக்கள்தான். அவர்களது செயலால் துன்பப்படுவதும் மக்கள்தான். விவசாயிகளுக்கு துரோகம் இழைக்கப் படுகிறது. இதற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு அளிக்கின்றனர். இதை தவிர்ப்பதில் அரசுக்கு என்ன பிரச்சினை" என்று தெரிவித்தார்.
சர்ச்சைக்குரிய இந்த அவசரச் சட்டம் எதிர்க் கட்சிகளின் கடுமையான எதிர்ப்பையும் மீறி நாடாளுமன்றத்தில் இன்று அறிமுகம் செய்யப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT