Published : 26 Feb 2015 08:29 AM
Last Updated : 26 Feb 2015 08:29 AM
மத்திய அரசின் நிலம் கையகப்படுத்துதல் அவசரச் சட்டத்தை எதிர்த்து காங்கிரஸ் கட்சி போராட்டத்தைத் தீவிரப்படுத்தியுள்ளது.
அதைத் தொடர்ந்து மத்திய அரசை ‘உழவர்களுக்கு எதிரான அரசு' என்றும், ‘பெருநிறுவனங்களின் அரசு' என்றும் காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.
மத்திய அரசின் இந்தச் சட்டத்தை எதிர்த்து டெல்லி ஜந்தர் மந்தரில் ‘ஸமீன் வாபஸி அந்தோலன்' (நிலம் திரும்பும் இயக்கம்) ஒன்றை காங்கிரஸ் கட்சி தொடங்கியுள்ளது. இதில் நேற்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் திக்விஜய் சிங், ஜெய்ராம் ரமேஷ் மற்றும் அகமது படேல் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய ஜெய்ராம் ரமேஷ், ‘‘1978ம் ஆண்டு நடை பெற்ற தேர்தலில் சிக்மகளூரில் போட்டியிட்டு வென்ற இந்திரா காந்திக்கு அரசியலில் புதிய திருப்பம் ஏற்பட்டது.
அதுபோலவே இந்த அவசரச் சட்டத்தை எதிர்க்கும் காங்கிரஸ் கட்சிக்கும் புதிய திருப்பம் ஏற்படும். பா.ஜ.க.வின் ‘கர் வாபஸி'க்கு எதிராக காங்கிரஸ் கட்சி ‘ஸமீன் வாபஸி' நடத்துகிறது" என்றார்.
திக்விஜய் சிங் பேசும்போது, "இது உழவர்கள், தொழிலாளிகள் மற்றும் பெருநிறுவனங்கள் ஆகியவற்றுக்கிடையே நடை பெறும் போராட்டம். பிரதமர் மோடி மக்களுக்கு தான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற மாட்டார். மாறாக, பெருநிறுவனங்களுக்கு அளித்த வாக்குறுதிகளை மட்டுமே நிறைவேற்றுவார்" என்றார்.
இதுகுறித்து அகமது படேல் கூறும்போது, "நம் நாட்டை, காங்கிரஸ் இல்லாத நாடாக மாற்ற பா.ஜ.க. முயற்சித்து வருகிறது என்று கூறப்படுகிறது. ஆனால் ஆட்சிக்கு வந்த ஒன்பதே மாதங்களில் விவசாயிகள் இல்லாத நாடாக மாற்ற மத்திய அரசு முயற்சிக்கிறது" என்றார்.
இதற்கிடையே மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறும்போது, "முன்பு காங்கிரஸ் ஆட்சியின் போது கொண்டு வரப்பட்ட நிலம் கையகப்படுத்துதல் சட்டத்துக்கு காங்கிரஸ் ஆண்ட மாநிலங்களில் இருந்தே எதிர்ப்புகள் வந்தன என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
இந்தச் சட்டம் தொடர்பாக எந்தவிதமான நல்ல கருத்து களையும் கேட்க நாங்கள் தயாராகவே இருக்கிறோம்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT