Published : 22 Apr 2014 12:00 AM
Last Updated : 22 Apr 2014 12:00 AM
கருப்பை புற்றுநோய் கண்டறியும் சோதனை தொடர்பாக அமெரிக்க நிறுவனங்கள் நடத்திய ஆய்வில் கடந்த 15 ஆண்டுகளில் 254 இந்திய பெண்கள் உயிரிழந்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கருப்பை புற்றுநோயைக் கண்டறிய தற்போது பல்வேறு மருத்துவ ஆய்வு முறைகள் கடைப்பிடிக்கப் படுகின்றன. ஆனால் அவற்றுக்கு அதிக செலவாகிறது. எனவே குறைந்த செலவில் கருப்பை புற்றுநோய் கண்டறியும் சோதனை உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
அதன்படி அமெரிக்காவின் தேசிய புற்றுநோய் கழகம், பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை சார்பில் தமிழகத்தின் திண்டுக்கல், மகாராஷ்டிரத்தில் மும்பை குடிசைப் பகுதிகள், உஸ்மானாபாத் ஆகிய பகுதிகளில் கருப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களிடம் கடந்த 15 ஆண்டுகளாக சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இதற்காக மொத்தம் 2,24,929 பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களில் 1,38,624 பெண்களுக்கு எவ்வித சோதனையும் நடத்தப்பட வில்லை. இதன் காரணமாக நோய் முற்றி 254 பெண்கள் கருப்பை புற்றுநோய்க்கு பலியாகி உள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து இந்திய மருத்துவ நெறிமுறை இதழில் கடந்த ஏப்ரலில் வெளியான கட்டுரையில் மருத்துவ நிபுணர் சந்தியா சீனிவாசன் சுட்டிக் காட்டியுள்ளார். அமெரிக்க நிதியுதவி ஆய்வில் மருத்துவ நெறிமுறைகள் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளன என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
சான்பிரான்சிஸ்கோ நகரைச் சேர்ந்த டாக்டர் எரிக் சுபாவும் இந்த ஆய்வு குறித்து ஆட்சேபம் தெரிவித்துள்ளார். 1,40,000 பெண்களுக்கு எவ்வித மருத்துவப் பரிசோதனையும் செய்யப்படாதது ஏன் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். முன்கூட்டியே தகவல் தெரிவித்திருந்தால் அவர்கள் தாங்களாகவே ஏதாவது ஒரு மருத்துவமனையில் சோதனை செய்திருப்பார்கள். ஆனால் அவர்களுக்கு எவ்வித தகவலும் தெரிவிக்காமல் அப்படியே வைத் திருந்தது தவறு என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT