Last Updated : 05 Feb, 2015 07:43 PM

 

Published : 05 Feb 2015 07:43 PM
Last Updated : 05 Feb 2015 07:43 PM

டெல்லி தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது: பாஜகவுக்கு 45, ஆம் ஆத்மிக்கு 25 - கருத்துக் கணிப்பில் தகவல்

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை நிறைவடைந்தது. நாளை வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

இதனிடையே ‘ரிசர்ச் அண்ட் டெவலப்மென்ட் இன்ஸ்டியேட்டிவ்’ (ஆர்.டி.ஐ.) நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜகவுக்கு 41 முதல் 45 இடங்களும் ஆம் ஆத்மிக்கு 25 இடங்களும் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2013 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு 31 இடங்களும் ஆம் ஆத்மிக்கு 28 இடங்களும் காங்கிரஸுக்கு 8 இடங்களும் கிடைத்தன. மாநிலத்தில் ஆட்சி அமைக்க 36 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. திடீர் திருப்பமாக காங்கிரஸ் ஆதரவுடன் ஆம் ஆத்மி ஆட்சி அமைத்தது. ஆனால் லோக்பால் விவகாரத்தால் 49 நாள்களில் அர்விந்த் கேஜ்ரிவால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

பிரச்சாரம் ஓய்ந்தது

இப்போதைய சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பல்வேறு நிறுவனங்கள், ஊடகங்கள் கருத்துக் கணிப்பை நடத்தியுள்ளன. 70 உறுப்பினர்கள் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கான தேர்தலில் பாஜக, ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவுகிறது.

பாஜக தரப்பில் முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி கிரண்பேடி முதல்வர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். ஆம் ஆத்மி சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவாலும் காங்கிரஸ் சார்பில் அஜய் மக்கானும் முதல்வர் வேட்பாளர்களாக களம் இறங்கியுள்ளனர்.

சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. நாளை வாக்குப் பதிவு நடைபெறுகிறது. தேர்தல் களத்தில் மொத்தம் 673 வேட்பாளர்கள் உள்ளனர். மிக அதிகபட்சமாக புராரி தொகுதியில் 18 வேட்பாளர்களும் குறைந்த அளவாக அம்பேத்கர் நகரில் 4 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.

கருத்துக் கணிப்பு முடிவுகள்

பிரபல தனியார் இந்தி சேனல் நேற்றுமுன்தினம் வெளியிட்ட கருத்துக் கணிப்பில் ஆம் ஆத்மிக்கு 34, பாஜகவுக்கு 32, காங்கிரஸ் உள்ளிட்ட இதர கட்சிகள் 4 இடங்களில் மட்டுமே வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் பல்வேறு நிறுவனங்கள் மாறுபட்ட கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளன.

இந்நிலையில் ஆர்.டி.ஐ. நிறுவனம் நேற்று வெளியிட்ட கருத்துக் கணிப்பில் பாஜகவுக்கு அதிக வெற்றிவாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

அதன்படி பாஜகவுக்கு 41 முதல் 45 இடங்களும் ஆம் ஆத்மிக்கு 21 முதல் 25 இடங்களும், காங்கிரஸுக்கு 4 இடங்களும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி முதல்வராக கிரண்பேடிக்கு 46 சதவீதம் பேரும் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு 40 சதவீதம் பேரும் அஜய் மாக்கானுக்கு 12 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x