Published : 28 Feb 2015 08:28 AM
Last Updated : 28 Feb 2015 08:28 AM
பாஜக மூத்த தலைவரும் தற்போதைய அமைச்சருமான நிதின் கட்கரி தனியார் நிறுவனத்தின் சொகுசு கப்பலில் குடும்பத்தினருடன் தங்கி சலுகைகளை அனுபவித்ததாக புகார் எழுந்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
மும்பையில் செயல்படும் எஸ்ஸார் குழுமம் எரிசக்தி, உள்கட்டமைப்பு, சேவைத் துறை என பல்வேறு துறை சார்ந்த தொழில்களை நடத்தி வருகிறது. இக்குழுமம் அரசியல்வாதிகள், மூத்த அதிகாரிகள் பலருக்கு சலுகைகளை வழங்கி ஆதாயம் அடைந்ததாக நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது. அதில் நிதின் கட்கரியின் பெயர் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
நிதின் கட்கரிக்கு சலுகை
கடந்த 2013 ஜூலையில் கட்கரி தனது குடும்பத்தினருடன் ஐரோப்பாவுக்கு சுற்றுலா சென்றார். அப்போது பிரான்ஸ் கடல் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த எஸ்ஸார் குழுமத்துக்குச் சொந்தமான சொகுசு கப்பலில் அவரும் அவரது குடும்பத்தினரும் ஜூலை 7, 8, 9-ம் தேதிகளில் தங்கியுள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை கோரி சிபிஐஎல் தொண்டு நிறுவனம் சார்பில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் உச்ச நீதிமன்றத்தில் நேற்று வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் எஸ்ஸார் குழுமம் சார்பில் சொகுசு கப்பலின் கேப்டனுக்கு அனுப்பப்பட்ட இ-மெயில் முக்கிய ஆதாரமாக இணைக்கப்பட்டுள்ளது.
நிதின் கட்கரி மறுப்பு
இந்த விவகாரம் குறித்து நிதின் கட்கரி மும்பையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
2013 ஜூலையில் எனது சொந்த பணத்தில் குடும்பத்தினருடன் நார்வேக்கு சுற்றுலா சென்றேன். அப்போது எஸ்ஸார் குழுமத்தினர் என்னிடம் பேசினர். பிரான்ஸ் கடல் பகுதியில் அவர்களின் சொகுசு கப்பல் நிறுத்தப்பட்டிருப்பதாகவும் அதை பார்க்க வருமாறும் அழைத்தனர். அதன் பேரில் சொகுசு கப்பலுக்கு சென்றேன்.
அப்போது நான் எம்.பி. பதவியிலோ அமைச்சர் பதவியிலோ இல்லை. பாஜக தலைவர் பொறுப்பில்கூட இல்லை. டிக்கெட், லாட்ஜிங், போர்டிங், உணவு வகைகள் என அனைத்துக்குமே எனது சொந்த பணத்தை செலவழித்தேன். எந்தவொரு தனியார் நிறுவனத்தின் சலுகைகளையும் பெறவில்லை என்று தெரிவித்தார்.
சொகுசு கப்பலுக்கு ஹெலிகாப்டரில் சென்றதாகக் கூறப்படுவது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது, என்னால் கடலில் நீந்தி செல்ல முடியாது, அதனால்தான் ஹெலிகாப்டரில் சென்றேன் என்றார்.
எஸ்ஸார் நிறுவனம் விளக்கம்
இதுகுறித்து எஸ்ஸார் குழும செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:
நாளிதழில் வெளியான செய்தி உண்மைக்குப் புறம்பானது. எங்களது நிறுவன தகவல்கள் திருடப்பட்டுள்ளன. இதுதொடர்பாக சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
மத்திய இணை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி கூறியபோது, இதுபோன்ற ஆதாரமற்ற புகார்களுக்கு பஞ்சமில்லை, அவற்றுக்கு பதில் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்தார்.
காங்கிரஸ் குற்றச்சாட்டு
இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பி.சி.சாக்கோ கூறியதாவது:
எஸ்ஸார் குழும சொகுசு கப்பலில் தங்கியபோது நான் அமைச்சராக இல்லை என்று நிதின் கட்கரி தெரிவித் துள்ளார். கட்சியின் அவர் முக்கிய தலைவர் என்பதை அறிந்தே எஸ்ஸார் குழுமம் அவருக்கு சலுகைகளை அளித் துள்ளது என்று தெரிவித்தார்.
திக்விஜய் சிங் மீது புகார்
எஸ்ஸார் குழுமத்தின் சில இ-மெயில் தகவல்கள் வெளியே கசிந்துள்ளன. அதில் முக்கிய அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரி களுக்காக 200 விலைஉயர்ந்த செல் போன்கள் அன்பளிப்பாக அளிக்கப் பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு சிம் கார்டுகள் வழங்கப்பட்டு மாதம் ரூ.5000 கட்டணம் செலுத்தப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் திக்விஜய் சிங், முன்னாள் அமைச்சர் பிரகாஷ் ஜெய்ஸ்வால், பாஜக எம்.பி. வருண் காந்தி ஆகியோரின் பரிந்துரையின்பேரில் எஸ்ஸார் குழுமத்தில் பலருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளன என்றும் இ-மெயில் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிரகாஷ் ஜெய்ஸ் வால் கூறியபோது, எனது தொகுதிக்கு உட்பட்ட வேலையில்லாத இளைஞர் களுக்காக பரிந்துரை செய்தது உண்மைதான் என்று கூறியுள்ளார்.
திக்விஜய் சிங் கூறியபோது, வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்காக தனியார் நிறுவனங்களுக்கு அவ்வப் போது பரிந்துரை செய்துள்ளேன், ஆனால் எஸ்ஸார் குழுமத்துக்கு பரிந்துரை செய்ததாக நினைவில்லை என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT