Published : 01 Feb 2015 12:24 PM
Last Updated : 01 Feb 2015 12:24 PM
ப்ளோரைடு கலந்த குடிநீரால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்கள், இதையொட்டி எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிக்கும்படி தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் நேற்று அனுப்பியுள்ளது.
இதற்கு 6 வார காலத்துக்குள் பதில் அளிக்கும்படி தமிழகம் உட்பட 27 மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களிடம் கேட்கப் பட்டுள்ளது.
கடந்த ஜனவரி 20-ம் தேதி மத்திய குடிநீர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் பல்வேறு மாநிலங்களின் குடிநீரில் படிந்துள்ள மாசுகளை அகற்றும் பொருட்டு எடுக்கப்பட்டுள்ள குறுகிய கால, இடைக்கால மற்றும் நீண்ட கால நடவடிக்கைகள் குறித்து, தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு நேரடி விளக்கம் அளிக்கப்பட்டது.
அதில், ஆந்திரம், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகள் ப்ளோரைடு கலந்த குடிநீரால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக் கப்பட்டது.
மேலும் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் சுமார் நூறு குடியிருப்பு பகுதிகளில் இத்தகைய பாதிப்பு இருப்பதாக கூறப்பட்டது.
இந்த மாநிலங்களில், தேசிய கிராமப்புற குடிநீர் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு கிராமப்புறவாசியும் குடிநீர், சமையல் மற்றும் இதர வீட்டுப் பயன்பாடுகளை சமாளிக்கும் வகையில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த ப்ளோரைடு பிரச்சினை களை சமாளிக்க மத்திய அரசு மேலும் பல புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதில், இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சிலும் கலந்துகொண்டு தனது முயற்சிகள் குறித்தும் எடுத்துரைத்தது.
எனினும், இந்த விளக்கத்தில் திருப்தி அடையாத தேசிய மனித உரிமை ஆணையம், ப்ளோரைடு கலந்த குடிநீரால் ஏற்படும் பாதிப்புகளை களைய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை அனுப் பும்படி தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம், ஆந்திரம், ஒடிஸா, சத்தீஸ்கர், மகாராஷ்டிரம், உ.பி., உத்தராகண்ட், ஹரியாணா, ராஜஸ்தான், பிஹார், ஜார்க்கண்ட், குஜராத், ஜம்மு-காஷ்மீர், மேற்கு வங்கம், அசாம், திரிபுரா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், சிக்கிம், நாகாலாந்து உட்பட 27 மாநிலங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT